ஜெ
இந்த வரியை எப்படி எழுதினீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் இதே உணர்ச்சிகளை நான் இப்படியே அடைந்த சில சந்தர்ப்பங்கள் என் வாழ்க்கையில் உண்டு. பிளஸண்டான அனுபவம் இல்லை. பயங்கரமானதும் இல்லை. ஒருவகையான இழப்புநிலை அதைத்தான் இவள் சொல்கிறாள்
பேரொழுக்கில் ஒழுகி. திசைகள் கரைந்து மயங்கும் விசை. விசை அனைத்தையும் அழித்துவிடும் ஆற்றல் கொண்டது. நாம் கொண்டுள்ள ஒவ்வொன்றையும் அது பின்னால் பிடுங்கி வீசுகிறது. ஒவ்வொன்றும் இறந்தகாலமாகின்றன. கணங்கள் அக்கணமே இறந்தகாலமாகும் விசையில் காலமில்லாமலாகிறது. சென்றடைய இடமில்லாத விசை அசைவற்ற ஓர் உச்சம் மட்டுமே. அல்லது வெறுமொரு பித்துநிலை. தசைகளுருகி அழிய உடல் நீராக மாறி விரிந்து அலைகொள்ள இருத்தலென்பது விரிதலென்றாவது.
இது பெண்கள் மட்டும் அறியும் ஒரு நிலை என நினைக்கிறேன். மிகச்சரியாக அதைச் சொல்லியிருக்கிறீர்கள், கணங்கள் அக்கணமே கடந்தகாலம் ஆவது. எங்கும் செல்லாததனால் வெறும் விசை. எனக்கு இதேதான். விழுந்துகொண்டே இருப்பேன். ஆனால் அசைவே இருக்காது. இது ஒரு நரம்புச்சிக்கல் என்றார்கல். ஆனால் இது எனக்கு ஒரு ஸ்பிரிச்சுவல் அனுபவமாகவே இருந்தது
எஸ்