Friday, March 29, 2019

துரோணரின் முடிவு



அன்புள்ள ஜெயமோகன் சார்,
கார்கடலின் 81ம் அத்தியாயம் மிகவும் வேதனை படவைத்தது. வெண்முரசில் துரோணர் கர்ணர் இருவரும் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள். உண்மையில் கால குடத்தில் இடப்பட்ட விளக்கு அவர். சிறுவனாக தகப்பனின் அன்புக்கு ஏங்கி , குலம் மறுக்கப்பட்டு . ஷத்ரியனாக ஏங்கி தேடி ஓடி கிருபியை தானம் பெற்று [தானம் பெறுவதற்கு கூட கொஞ்சம் தகுதி வேண்டும் என என் மூஞ்சில் அடித்த சம்பவம் அது] அப்பனிடம் பாதியும் சுயம்புவாய் பாதியுமாய் வளர்ந்தவர்.  ஆனால் இரும்பு ஆதிக்கம் பெரும் காலத்தில் அஸ்வத்தை தொழுதவர். அதற்கு  தன்னை அர்ப்பணித்தவர். [ஆனால் பாரதம் வெள்ளையர் வரும் வரை இரும்பை பெரிதாய் உபயோகிக்கவே இல்லை....ஏன்? ....எனது சிறுவயதில் தாமிர, பித்தளை, மண்பாண்டங்கள் தான் பெரிதாய் எல்லோர் வீட்டில் இருக்கும்.]  .என்றும் ஒலிக்கும் காயத்ரி தான் அவரின் உயிர். ஆனால் அதோடு நின்றுவிட்டவர். அதிலேயே வீங்கி அகங்காரம் கொண்டு இளையயாதவரை கணிக்க முடியாமல் போனவர். ஷத்ரிய வேதம் வரை வந்து ஒரு ஆசிரியராக அதற்குள் மூழ்கி கிடந்தவர். ஆனால் அர்ஜுனன், தர்மர், இளைய யாதவர் எல்லாம் கிராதம், சொல்வளர்காடு ,என பல குழுக்களையும் அப்போது எழுந்து வந்துகொண்டிருந்த வணிகர்கள் தங்களின் மத குருக்களாகிய அருகர்களின் போதனைகளையும் தரிசனங்களையும் கண்டவர்கள். ஏன் துரியோதனன் கூட இருக்கும் யாருக்கும் அருகர்களோடு சந்திப்பு இல்லை?  ....[சமணமதம் தான் பாரதமயமாக்கலின் முன்னோடியா?...தென்கோடி களப்பிரர்கள் பற்றி படித்தது ஞாபகம் வருகிறது]  .ஜெயமோகன் சார் கற்றுகொள்வது போதும் என முடிவெடுக்கிறது அரசாங்க ஊழியர்களுக்கு வேண்டுமானால் சரியாய் இருக்கும், ஆனால் ஒரு ராஜ்யத்தை ஆளும் மகனின் தந்தைக்கு, ஒரு தொன்மையான அரசகுலதிற்கு குருவாய் இருப்பவருக்கு,போரும் குதிரையும் மட்டும் தெரிந்து வியாபார உலகின் மாற்றம் தெரியவில்லை என்றால் குருஷேத்ரம் தான் என்பதற்கு சரியான உதாரணம் துரோணர். அனைவரும் அவரின் மாணவர்கள் இவர் மாறி அனைவரிடமும் அதிகாரமாய் கூறியிருந்தால் குருஷேத்ரமே இல்லை. ஆனால் இப்போது உள்ள சில மத ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் எல்லாம் பழமையை மட்டும் போதித்துவிட்டு அவர்களின் குடும்பங்களை மிகவும் நவீன படுத்தி பாதுகாப்பாய் இருப்பவர்கள். மேடையோடு போதனை சரி.நேருக்கு நேர் யுத்தம் கிடையாது அல்லவா? ஆனால் ஏன் யானை வருகிறது? அதன் கண் என்ன ? அதை ஏன் அர்ஜுனன் காயப்படுத்தினான்?  பதிலாய் "“ஆம், ஊழால் அனைத்து உயிர்களும் பின்னப்பட்டிருக்கின்றன” என்கிறார் இளைய யாதவர். என்றென்றும் அரக்ககுணமும், நாககுணமும்,மிருக குணமும்,ராஜகுணமும் இருக்கும், அனைத்தும் பின்னபட்டிருக்கும் . இப்போது அரச நாகங்கள் ஜாஸ்தி என நினைக்கிறேன். 

"அர்ஜுனன் துரோணரை நோக்கி முதல் அம்பை நோக்கி தொடுத்த கணமே அவன் உணர்ந்தான், அவனுக்கு அந்நம்பிக்கை ஆற்றலை அளித்தது அவன் ஒன்றை கரந்திருக்கிறான் என்பதுதான்.ஒன்றை கரந்திருப்பவன் பிறர் அறியாத படைக்கலம் ஒன்றை கொண்டவன். ஆகவே பிறரைவிட ஆற்றல் மிக்கவன்.நீங்கள் என்னை முழுதறியவில்லை என்று இவ்வுலகனைத்திடமும் சொல்லும்போது மட்டுமே மானுடன் தன ஆற்றலின் உச்சத்தை அடைகிறான்போலும்"[இதை எழுதி வைத்துக்கொண்டேன் ] என வாசித்தகணமே முதலில் என்ன அது என்றுதான் மீண்டும் தேடினேன்...[கரவு- ஒளிவு,மறைவு.களவு, கபடம், தீய எண்ணம் ]  எனது அறிவுக்கு எட்டியது "அஸ்வத்தாமன் வாழவேண்டும் என்றால் அர்ஜுனன் இருக்க கூடாது .அவன் சக்கரவர்த்தி ஆகவேண்டும் என்றால் குருவம்சமே இருக்க கூடாது..என எண்ணி சத்தியம் வாங்கி அவனுக்கு எல்லை கட்டியது. அர்ஜுனனுக்கு கிடைக்காத தந்தை பாசம்". ஆனால் அர்ஜுனன் எண்ணுகிறான் "அந்தணன் எனப் பிறந்த இவரை மண்விழைவென வந்து பற்றிக்கொண்ட தெய்வம் எது? இங்கு இவ்வாறு ஆட்டிவைப்பதுதான் என்ன? மைந்தன்மேல் கொண்ட பற்றா? ஆனால் மானுடருக்கு மைந்தர் விலங்குகளுக்கு குழவிகள்போல் இயல்பான குருதிநீட்சி அல்ல. பொருளேற்றப்பட்ட சொற்கள் அவர்கள் என வாசித்தபோது நெஞ்சு துணுக்குற்றது. [இப்போது எனது பயம் எல்லாம் இதை ஆர்வகோளாறில் யாரிடமும் கூறி சோதித்து பார்த்துவிடகூடாதே என்றுதான்] 

துரோணரோடு அர்ஜுனன் போரிடும்போது துரோணர் மெதுவாய் தடுமாறி விசை ஏறுவது  கண்டு அர்ஜுனன் எண்ணுவது "எதிர்நிற்பவரின் விசை மிகுவது நன்று.அது அதில் வீழ்ச்சியும் உண்டென்பதற்கான சான்று.எழுதலும் விழுதலுமின்றி நிகழ்ந்துகொண்டிற்கும் வில்திரனே வெல்லற்கரியது.இவர் சினம் கொள்கிறார்.என்னில் எழும் அம்பை கணக்கிடுகிறார், தவறும் அம்பைக்கண்டு உள்ளம் பதைக்கிறார்.நிகழ்வனவற்றில் இல்லை அவருடைய உள்ளம்.அது முன்னால் ஓடிகொண்டிருக்கிறது.நிகழில் நின்றிப்பதே யோகம்.முந்துவதும் பிந்துவது போல பிழைதான் .பிழைகள் ஆற்றலை அழிக்கின்றன. பிழையின்மையே யோகம். வெல்லமுடியாதவன் யோகி மட்டுமே.பிற அனைவரும் வில்லில் இருந்து வானுக்கு எழும் அம்புகள் போல. அவர்கள் எத்தனை விசைகொண்டிருந்தாலும் விழுந்தாகவேண்டும். யோகி ஒளி.அவன் சென்றுகொண்டே இருப்பவன்" என வாசிக்கும்போது நான் எப்போதும் செய்துகொண்டிருப்பதை  நீங்கள் கூறியது போலவே இருந்தது. என் மனம் ஒருக்காலும் நிகழ்காலத்தில் இருந்ததே இல்லை. ஓன்று பின்னோக்கி ஏங்குவது அல்லது சுய இஇரக்கம் கொள்வது அல்லது முன்னால் சென்று தேவை இல்லாமல் தப்பு கணக்கு போட்டு தோற்று திகைப்பது. இதுவே எனது வாழ்க்கையாய் இருந்தது. 

அர்ஜுனன் துரோணரின் மனக்கட்டுகளை,அவனின் தேர் துரோணரின் அம்பினால் உடைக்கப்படும் போது கண்டுகொள்கிறான்..ஐம்பது வருடமாய் புதைக்கபட்டது இவ்வளவு இலகுவாகவா? கண்டுகொள்ளபடுகிறது என ஆச்சரியமானேன்.மனதின் கட்டுகளை எல்லாம் பருப்பொருட்களை வைத்துதானே அளவிடமுடியும்... "இளமையில் எங்கோ, சிறுவன் என வாழ்ந்த தொடக்க நாளில் உள்ளத்தில் பட்ட ஒரு வடுவிலிருந்தே அனைத்தும் முளைத்தெழுந்துள்ளன. அவருடைய ஆற்றல்களுக்கு அதுவே ஊற்று. எனில் அந்த ஆற்றலுக்கு எல்லை வகுப்பதும் அதுவே. விதையிலிருந்து பெற்ற நஞ்சிலிருந்து பெருமரங்களும் விடுதலை கொள்ள இயல்வதில்லை. அதுவே நிலம் மீதான பற்று. அதுவே மைந்தன் மேலான சார்பு. அதுவே இப்புவியில் கட்டி நிறுத்தும் தளை"  அந்த வடு என்ன ?  

குருஷேத்ரத்தில் இளையயாதவரின் ஆலோசனைப்படி இரண்டாவது தடவையாய் பாண்டவர்கள் தங்களின் எல்லைகளை மீறுகிறார்கள்."துரோணரின் கவசம் இரண்டாக உடைந்து விழ அவர் நெஞ்சில் ஆழ இறங்கி நின்று சிறகதிர்ந்தது அர்ஜுனனின் அம்பு. துரோணர் மல்லாந்து தேர்த்தட்டில் விழுந்தார்" ஆனால் "ஆவநாழியை நாடி கையை கொண்டுசென்று அது நிறைந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். அதன் எடை மிகுந்தபடியே வந்தது. தோள் தாளாமலாக அவன் ஆவநாழியைக் கழற்றி தேர்த்தட்டிலிட்டான். அவன் நோக்கி நிற்க அது பெருகிக்கொண்டிருந்தது. அவன் அவருக்கு திருப்பி அளித்த அம்புகள் அனைத்தும் அதற்கே மீண்டு வந்தன" என வாசிக்கும்போது ஆச்சரியமாய் இருந்தது. ஆசிரியரின் கீழ்மையினால் அவரை கொல்லலாம் ஆனால் இந்த உலகம் இருக்கும் வரை இருக்கும் சொற்களை எப்படி கரைக்கமுடியும். என்றும் இருக்கும் மானுட தரிசனங்கள் அல்லவா? 

ஆனால் திருஷ்டய்துமன் துரோணரின் தலையை கோழி தலையை அரிந்து எடுப்பது போல் எடுப்பது எல்லாம் சரியா ? தவறா?  என்றே சொல்ல தோன்றவில்லை. மகன் மீது மூர்க்கமான பற்றுகொண்ட ஒருவர் தகப்பனின் வஞ்சதிற்காய் ஒரு மகனால் பந்தாடபட்டார் என்றே கொள்கிறேன்.   

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்