வெண்முரசின் நாடகீயத் தருணங்களும், அவை தரும் நெகிழ்வும் வெண்முரசின் வாசிப்பனுபவங்களில் தலையாயானவை. எப்போதும் அத்தருணங்களுக்காக என்னில் ஒன்று விழித்திருக்கும். கார்கடல் 66ல் கர்ணனும் சகதேவனும் சந்திக்கும் இடம் அவற்றில் ஒன்று. தோற்று நிராயுதபாணியாய் நிற்கும் அவனைக் கீழ்மைச் சொல் பேசி விலக வைக்கப் பார்க்கிறான் கர்ணன். ஆயினும் அவனே எதிர்பாரா வண்ணம் தற்சாவு நோக்கிச் செல்கிறான் அவன். நாமடையும் அவமானத்திற்கு ஒரு எல்லை உண்டு. அவ்வெல்லையை அடைந்தவர்கள் உயிர் விடத் துணிவதும் இயல்பு. அத்தருணத்தில் நிகழும் எந்த நன்மையையும் விட, அத்தருணத்தில் நிகழும் பிறிதோர் அவச்சொல் மானிடரை அவ்வெண்ணத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வர வல்லது. எனவே தான் அவனை அவ்வெண்ணத்தில் இருந்து வெளிக்கொணர மீண்டும் கீழ்மையையே நாடுகிறான் கர்ணன். சகதேவன் கை தளர்கையில் கர்ணன் குரல் மாறி பேசும் வார்த்தைகள் அவன் மனதில் நகுல, சகதேவர்கள் மீது இருக்கும் பாசத்தைக் காட்டுகின்றன. தன் இளமைந்தனைக் கொஞ்சும் தந்தையின் குரல்… ஆணையிடுவதல்ல,வென்று தருக்கியதல்ல, எங்ஙனமேனும் உயிர் பிழைத்து வாழ் எனப் பரிதவிக்கும் தந்தையினுடையது அக்குரல்!!! கிருபரின் குருகுலத்திற்கு அழைத்துச் சென்ற இளையவனிடம் அல்லவா அவன் பேசுகிறான்!!! இத்தகைய கீழ்மைச் சொற்களை சொன்னதாலேயே கர்ணன் வீழ்ந்து கொண்டிருக்கிறான் என எண்ண வேண்டியதில்லை. மாமனிதர்கள் இத்தகைய தருணங்களை உருவாக்கிக் கொள்வார்களே ஒழிய அது அவர்களின் அடியாழத்தில் இருந்து, அவர்களாகவும் ஆன ஒரு இயல்பாக இருக்காது. மாமனிதர்களை நம்மை ஒரு அளவுகோலாகக் கொண்டு மதிப்பிடவும் கூடாது.
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்