Thursday, March 21, 2019

சொல்வளர்காட்டில்...

அன்புள்ள  ஜெயமோகன் சார்,



கார்கடலின் 81ம் அத்தியாயத்தை படிக்கும்போது  சொல்வளர்காடின்  60ம் அத்தியாத்தில் "தருமன் காட்டுத்தீயில் வெந்து கருகி விழுந்த பறவைபோல் தெரிந்தார். உடலெங்கும் கருகிய தோல் வழன்று இழுபட்டிருக்க பல இடங்களில் வெள்ளெலும்பு வெளித்தெரிந்தது. கழுத்தில் நீலநரம்புகள் தோலோ தசையோ இன்றி தனித்து இழுபட்டு அசைந்தன. காதுமடல்களும் கைவிரல் முனைகளும் உருகி வழிந்திருந்தன. உதடுகள் வெந்து மறைந்திருக்க பற்கள் அற்ற வாய் கருகிய தசைக்குழியாக பதைத்தது. விழிகள் மட்டும் இரு செந்நிற மணிகள் என சுடர்கொண்டிருந்தன.“மூத்தவரே, வருக!” என்றான் அர்ஜுனன். அவர்கள் நடுவே மெல்ல தத்தும் கால்களுடன் தருமன் நடந்தார். அர்ஜுனன் பீமனிடம் “மூத்தவரே, அவர் அமர்வதற்கு மெல்லிய தளிரிலைகளால் பீடம் அமைக்கவேண்டும். அவர் உண்பதற்கு நறுந்தேன் அன்றி பிற ஏதும் அளிக்கப்படலாகாது” என்றான். “இதோ” என பீமன் திரும்பி ஓடினான். “அவர் இன்னும் நம்மை அறியவில்லை. உள்ளமைந்த சித்தத்துளி ஒன்றில் அமர்ந்த குடித்தெய்வம் ஒன்று இங்கு அவரை கொண்டுவந்துள்ளது” என்றான் அர்ஜுனன் என வாசித்ததும். 

கிராதம் 79ம் அதிகாரத்தின் தொடக்கத்திலே அர்ஜுனன் நிலை பற்றி "வானில் எழுந்த கருமுகில் திரளிலிருந்து இடியோசையுடன் மின்னலொன்று இறங்கி அர்ஜுனனை தாக்கியது. விண்யானையின் துதிக்கையால் தூக்கி வீசப்பட்டு அவன் சென்று மல்லாந்து விழுந்தான். அவன் முடியும் தாடியும் பொசுங்கிய  எரிமயிர் மணம் மூக்கை நிறைத்தது. கண்களுக்குள் அவன் ஆழ்ந்திருந்த ‘பணிக சிவம்’ என்னும் நுண்சொல் ஒளியலையாக கொந்தளித்தது. அவன் பற்கள் கிட்டித்திருந்தன. அவை உரசும் ஒலியை காதுகள் கேட்டன. அத்தனை தசைகளும் இழுபட்டு இறுக இழுத்து வளைக்கப்பட்ட முற்றிய மூங்கில்வில்லென கிடந்து துள்ளியது அவன் உடல்.பின்னர் அறுபட்ட நாணொலியுடன் அவன் அகம் விடுபட்டது. இடக்கை மட்டும் இழுபட்டுத் துடித்தது. மூக்கில் தசைபொசுங்கும் வாடை. வாயில் குருதி நிறைந்திருந்தது. அவன் செங்கோழையைத் துப்பியபடி இடக்கையை ஊன்றி எழுந்தான். நெஞ்சில் உதைபட்டவன்போல பின்னால் சரிந்து விழுந்தான். கண்களை மூடி குருதியலைகளைக் கண்டபடி சற்றுநேரம் இருந்தான். அவை மெல்ல அடங்கியபின் மீண்டும் எழுந்தான். நிலம் சரிந்திருப்பதுபோலத் தோன்றியது. இருமுறை தள்ளாடி நிலைகொள்ள முயன்றபின் மீண்டும் விழுந்தான்.
மூன்றாம் முறை எழுந்து கைகளை சற்று விரித்து விழிகளை தொலைவில் இருந்த பாறை ஒன்றில் நட்டு தன்னை நிலைப்படுத்திக்கொண்டான். ஒரு வலுவான சரடுபோல அந்நோக்கு அவனை நிலைநிறுத்தியது. கடிபட்ட நாக்கு அதற்குள் வீங்கத் தொடங்கியிருந்தது. தலைமுடி உச்சியில் கொத்தாக கருகிச் சுருண்டு புகைந்துகொண்டிருந்தது. தொட்டு நோக்கியபோது சுருண்ட முடி பிசின் என ஒட்டியது கையில். அந்தப் பொசுங்கல்வாடை உடல்குமட்டி அதிரச்செய்தது. மூச்சை இழுத்து விட்டுக்கொண்டான். மீண்டும் மீண்டும் நெஞ்சை நிரப்பி ஒழித்தான் என்று வருகிறது.  முதலில் இதை எல்லாம் படிக்கும்போது என் இவ்வளவு மாவீரர்கள் இப்படி பொசுங்கி பொசுங்கி செத்து பிழைக்கிறார்கள் என்று தோன்றும். இப்போதுதான் நீங்கள் ஒரொரு படிப்பினைக்கும் நம் மனம் படும்பாட்டையும் அது புகைந்து வெந்து சாவதையும் கூறுகிறீர்கள் என புரிந்துகொண்டேன்.காளனின் மனைவி கிராதத்தில் ஆணவமும் அவமானமுமாக நிற்கும் அர்ஜுனனிடம் கூறுகிறாள் “நீ கற்றிராததை இவரிடமிருந்து கற்றுக்கொள். கற்பிக்கும் இவர் உன் ஆசிரியர். ஆசிரியனிடம் தோற்பதில் இழிவென ஏதுமில்லை. ஆசிரியன் முன்பு முற்றிலும் தோற்காதவன் எதையும் கற்கத்தொடங்குவதில்லை”என்று. காண்டீபம், கிராதம் என இரண்டு முழு நாவல்களிலும் தேடி தேடி கற்ற வெற்றி பெற்ற மீண்டும் காலனை வணங்கி "“காலவடிவரே, நான்  எளியவன். ஆணவத்தால் ஆட்டிவைக்கப்படும் இழிந்தோன். உம்மிடமுள்ள அறிவையும் திறனையும் எனக்கும் கற்பித்தருளவேண்டும்” என்றான் என வாசித்தபோது என் மனம்  ரயில் பூச்சி என சுருண்டு கொண்டது. 

கார்கடலின் 81ம் அத்தியாத்திலும் அர்ஜூனர் ஆசிரியரின் அம்பாலையே பொசுங்கி கிடக்க இளைய யாதவர் அடுத்த கட்ட ஆசிரியராகி அர்ஜுனனிடம்  “போருக்கென எழுந்தபின் எதிரியை களவெற்றியால் மட்டுமே கடக்க இயலும். ஒவ்வொருவரிடமும் எஞ்சியிருக்கும் ஆற்றலென்ன என்று பாருங்கள் அவற்றைக்கொண்டு அவரை எதிர்த்து நில்லுங்கள்” என்கிறார்.....அஸ்வதாமனை கொண்டு துரோணரை கொல்ல முடிவு எடுக்க  அர்ஜுனன் மறுத்து அவர் தனது ஆசிரியர் என கூற  "ஆசிரியரிடம் இருந்து நீ பெற்ற அனைத்தையும் கொடுத்துவிட்டாய்" என கூறி "பார்த்தா, இந்தக் களத்தில் அடையும் அனைத்து தத்தளிப்புகளும் வெறும் ஆணவம் என்றுணர்க! பீஷ்ம பிதாமகரை வீழ்த்திய பின்னர் நீ அஞ்சும் பழியென இப்புவியில் வேறொன்று உள்ளதா?”என கேட்கிறார். அப்போ எனக்கு  கிடைக்கும் ஒவ்வொரு படிப்பினையும் வெறும் ஆணவத்தால் தான் வருகிறதா? அதோடு போராடி போராடி பொசுங்கி செத்து செத்து பிழைக்கிறேனா? ... ஏன் கிருஷ்ணர் இப்படி சூதாய் அனைத்தையும் செய்கிறார்...வெறும் சூதே உருக்கொண்டு இருக்கும் இந்த கலியுக பூமியில் பிறகு எப்படித்தான் வெற்றி பெறுவது? ....கிருஷ்ணர் பெரும் ஆசிரியர்தான்.எப்போதைக்கும்  எனக்கு தேவையானவரும் கூட.

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்