Sunday, March 10, 2019

மைந்தர்கள்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடல் 71ம் அத்தியாயத்தில்  துருமசேனன்  துச்சாதனனுடன் தன்னை படையை விட்டு விலக்ககூடாது என வாக்குவாதம் செய்துவிட்டு “தந்தையின் சொல்மீறிச் சென்றேன் எனும் பழி எனக்கு வரவேண்டியதில்லை… ஆகவே பணிந்து கோருகிறேன். நான் களம்சென்று போரிட்டு இன்றே மடிய என்னை வாழ்த்துக!” என துருமசேனன் தலைதாழ்த்தும் போதும் ,அதற்கு துச்சாதனன் கனத்த மனதுடன் அவனை "“எண்ண எண்ண அதுவே நெஞ்சை உடைக்கிறது. நான் வெறும் கூழாங்கல். அருமணி நீ. உன்னை என் பொருட்டு அழித்துவிட்டேன். நீ விண்புகுந்தால் நான் அதை எண்ணி எண்ணியே உருகிக்கொண்டிருப்பேன். தெய்வங்கள் கனியவேண்டும். ஓரிரு நாட்களுக்கு அப்பால் அப்பெருந்துயரை அவை எனக்கு அளிக்கலாகாது  என்றும் "விண்ணேகுக, மைந்தா! உனக்கு பேரியல்புகளை அள்ளி வழங்கிய தெய்வங்கள் அவற்றை திரும்பப்பெற்றுக்கொள்க! அவர்கள் மறுபிறப்பில் அவற்றை உனக்கு அளிக்கட்டும். அவற்றால் புகழும் முழுமையும் உனக்கு அமையட்டும்” என  தலைதொட்டு வாழ்த்துவதையும் எண்ணி பார்க்கவே முடியவில்லை.  உலகில் எந்த மகனுக்கும் கிடைக்காத வாழ்த்து  அல்லது நான் சந்திக்காத வாசிக்காத தருணம். ஷாத்ரதிற்கு எத்தனை முகங்கள் தேவை என மனம் விம்மியது.



கார்கடல் 39ம் அத்தியாயத்தின் கடைசி பத்தியில் "அபிமன்யு குருதிவழிய நிலைதடுமாறி கால்தளர்ந்து விழுந்தான். அவன் விழிகள் தளர்ந்து மூட கைகள் குழைந்தன. துருமசேனன் அவன் நெஞ்சின் மேல் கால் வைத்து “என் மூத்தவரின் குருதிக்காக இது” என்று கூவியபடி கதையால் அவன் தலையை ஓங்கி அறைந்து உடைத்தான். தலைகோப்பை உடைந்து அகல, வெண்கூழென தலைக்குள்ளிருந்து மூளை வெளிப்பட, கைகால்கள் விதிர்த்து இழுத்துக்கொள்ள அபிமன்யு தன் குருதியால் சேறான மண்ணில் கிடந்து புளைந்தான் என அபிமன்யுவின் மரணமும் அதன்பின் "அவன் வாயிலிருந்து ஏதோ சொல் எழுவதை கர்ணன் கூர்ந்து நோக்கினான். துருமசேனனும் குருதியும் நிணமும் வழிந்த தன் கதையைத் தாழ்த்தி முழந்தாளிட்டுக் குனிந்து அவ்வுதடுகளை பார்த்தான். ஒரு பெயர் சொல்லப்படுவதுபோல் தோன்றியது. அது என்னவென்று அவர்களால் உய்த்துணரக் கூடவில்லை"  என அவனின் கடைசி வார்த்தை பற்றியும் கூறபடிருக்கிறது.  அது என்ன?  என்று நானும்  உய்த்துணர முயன்றுகொண்டே இருக்கிறேன்.

ஸ்டீபன்ராஜ் குலசேகரன்