Monday, March 25, 2019

வண்ணக்கடல்இனிய ஜெயம் 

இருபத்தி நான்காவது புதுவை வெண் முரசு கூடுகை சிறப்பாக நிகழ்ந்தேறியது. நிகழ்வுக்கு வரும் வழி முழுதும் இந்த கூடுகை சார்ந்த நினைவே சுற்றி வந்தது. இரண்டு வருடம். இடையறாத இரண்டு வருடம்.  புதுவை நண்பர் ஹரிக்ரிஷ்ணன் வீட்டில் பெரும்பாலானோர் வெண் முரசின் வாசகர். நாம் கூடி வெண்முரசின் அத்யாயங்களை இன்னும் ஆழமாக அறிந்து கொள்ள ஒரு கூடுகை ஒன்றை மாதமொருமுறை நிகழ்த்துவோம் என்ற அவரது விருப்பமே, இந்த கூடுகையாக வளர்ந்து நிற்கிறது. 

முதல் அமர்வில் கண்ட அவரது உறவுகள் இந்த அமர்வு வரை இடைவெட்டின்றி வந்து கொண்டிருக்கிறார்கள். பண்ருட்டி ராதாக்ருஷ்ணன், திருமாவளவன் தொலைவில் இருந்து தவறாமல் வந்து கலந்து கொள்கிறார்கள். மயிலாடுதறை பிரபு இரண்டு மணி நேரம் மட்டும் நிகழும் இந்த உரையாடலுக்காக அவர் அங்கே மதியம் இரண்டு மணிக்கு கிளம்பி, நள்ளிரவு இரண்டு மணிக்கு மீண்டும் வீடு திரும்புபவராக இருக்கிறார். [எதிர் மாறாககூப்பிடு தூரத்திலிருக்கும்  இந்த கூடுகையின் முதல்வரான சிவத்மாவோ எப்போதேனும் தென்படுபவராக இருக்கிறார் :) ]. அவ்வப்போது வந்து செல்லும் புதிய வாசகர்கள், சென்னை வெண்முரசு நண்பர்கள், எழுத்தாளர்கள் வருகை  என உற்சாகமாக முன் சென்றுகொண்டிருக்கிறது கூடுகை.

இந்தக் கூடுகையின் பேசுபொருளான வெற்றித் திருநகர் குறித்து தான் ரசித்தவற்றை பகிர்ந்து உரையாடலை துவங்கி வைத்தார் திருமாவளவன். இறுதியாக இந்த அத்யாயத்தில் வரும் உணவிடும் பண்பாடு வழியே சமணத்துக்கு சென்று சுழன்றது உரையாடல். 

மணிமாறன் இந்த அத்யாயங்களின் சில தருணங்கள் வழியே வள்ளுவர் குறள்,பாரதியார் கவிதை வரிகள் சில எவ்வாறு தனக்கு புதிய பொருள் அளிக்கத் துவங்குகிறது என்று பகிர்ந்து கொண்டார்.

ஒவ்வொரு அத்யாயத்திலும் வரும் வர்ணனை அழகுகளை வளவ துரையன் அவர்களும் விஜயன் அவர்களும் பகிர்ந்து கொண்டார்கள்.

கங்கையில் வீசப்பட்ட பீமன், அதல ,விதல, சுதல,பாதாள, என லோகங்களாக நிகழ்த்தும் பயணங்களை மரணத் தருவாயில் பீமனின் மன அடுக்குகள் வழியே அவன் நிகழ்த்தும் பயணமாகவும்,பயணத்தின் இறுதியில் எஞ்சும் புள்ளி எதுவோ அதில் நஞ்சை சுமப்பவனாகவும் அவன் மாறிப்போவதை, புதிய கோணம் ஒன்றை திறந்து உரையாடினார் ராதாக்ருஷ்ணன். ராதா கிருஷ்ணன் மணிமாறன் இருவருக்குமே தனிப்பட்ட முறையில் பிடித்த புள்ளியான,குந்தி விதுரன் ஈர்ப்பின் நாடகம் இந்த அத்யாயத்தில் எவ்வாறு துலங்கி நிற்கிறது என்பதை இருவரும் பகிர்ந்து கொண்டார்கள். 

தாமரைக் கண்ணன் மையம் கொண்ட தருணம் மிக முக்கியமானது, பீமன் நஞ்சு கொண்டு மயங்குமுன் அக ஆழத்தால் அங்கே தன்னை தேடிக்கொண்டிருக்கும் தர்மனை அறிபவனாக இருக்கிறான். இதோ இன்றைய நாராயண அஸ்திரம் முன்பு பீமன் நிற்கும் தருணம், தர்மன் என் மைந்தா என்று கூவும் இக்கணம் வரை தர்மன் அவ்வாறுதான் இருக்கிறான். 

மற்றொரு முக்கியமான தருணம் அரவுக்கரசி பீமனுக்கு அவன் எந்த வஞ்சத்திலும் வீழாதிருக்கும் பொருட்டு  தனது சிறந்த நஞ்சினை உபசரிப்பாக அளிக்கும் இடம். உபசரிப்பு எனில் அதனை  தவிர்க்க முடியாது,மேலும் அம்மாவை கேட்டு விட்டு கூட அருந்து,என வாய்ப்பளிக்கிறாள்.[ குந்தி என்ன சொல்வாள் என முன்னுனர்ந்தவளாக இருக்கிறாள் :) ] அதற்க்கு முன்பாக பீமனுக்கு அவள் அளிப்பது சர்வ வல்லமை கொண்ட நாகாஸ்திரம் . 

அதை பீமன் மறுக்க அவன் சொல்லும் சொல் முக்கியமானது. ''சத்ரியன் தனக்குத் தேவையானதை வென்றடைந்து கொள்வான்.அவன் தானம் பெறமாட்டான்''.  கர்ணன் தானமாக பெற்ற அம்பு. கடோத்கஜனை கொன்ற அம்பு. 

மேலும் சென்னம்மை கை பழைய சோற்றை அது வர்ணிக்கப்படும் விதத்தை ரசித்துப் பகிர்ந்து கொண்டார்.  அடுத்து நெற்குவை நகர்.இதோ இந்த வெற்றித் திருநகரில் ஒரு துப்புரவு தொழிலாளி இல்லத்தில் சோறு கிடைக்கிறது. 

இறுதியாக நான் பிரித்து அடுக்கப்பட்ட அனைத்தயும் தொகுத்து அடுக்கினேன். அன்று கீகடர் காணும் குரோதம், இருள் முக மார்க்கி சொல்லும் வஞ்சத்தின் குணம், இன்று கார்கடலில் என்னவாக வளர்ந்து நிற்கிறது எனும் சித்திரம் ஒன்றை அளித்தேன்.  தூக்கத்தில் புரண்டு படுக்கும் சூதர் ஒருவர், உறக்கத்தில் ''படை பலம் கொண்டோர் வஞ்சம் கொள்ளலாகாது'' என உளறுகிறார். 

ஒரு பாற்கடல் கடையப்படுகிறது அதில் எழும் நஞ்சு அரவன்னையால் பீமனுக்கும், அமுது சென்னம்மை கையால் உண்ணும் சூதர்களுக்கும் செல்லும் சித்திரமே இந்த வெற்றித்திருநகர் அத்யாயத்தின் மையம் என்றேன். 

இளநாகன் தமிழ் நிலத்தில் அறிவற்ற மன்னனால் துரத்தப்பட்டவன் அங்கிருந்து இந்த வெற்றித்திருநகருக்கு வந்து அவன் காணும் மன்னன், சூதர்களின் காலடியில் தனது  மணி முடியை  சமர்ப்பிப்பவனாக இருக்கிறான். 

இறுதியாக கிரீன் கலர் தமிழனை தாழ்த்தி, வந்தேறி தெலுங்கனை விதந்தோதும், ஜெயமோகனின் ஆழ்மன வெளிப்பாடான  தமிழ் விரோத தெலுங்குப் பாச அரசியலை இந்த தருணத்திலிருந்து கட்டுடைத்து வாசகர்களுக்கு வெளிகாட்டி, மும்முறை இந்த அரசியலை வன்மையாக கண்டித்து, கூடுகை உரையாடலை நிறைவு செய்தேன் 

கடலூர்சீனு