Thursday, March 28, 2019

கார்கடலின் அர்ஜுனன்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடலின் 82ம் அத்தியாயம் நமக்கு மிகவும் பழகிய ஓன்று என்று ஒரு நாள் கழித்து மீண்டும் வாசிக்கின்றபோது தெரிகிறது. [முதல் தடவை வாசித்து சோர்ந்து தூங்கிவிட்டேன். அவ்வளவு பெரிய தாக்கம் ]ஒரு இருபது வருடங்களுக்கு முன் எனது நண்பனின் குடும்பத்தில் இருவர் சொத்து தகராறில் கொல்லப்பட்டனர். ஒருவர் அவனது அக்காவின் கணவர், இன்னொருவர் அவனது சித்தப்பா. பெரிய நிலபுலம் கொண்ட,அதிகாரம் கொண்ட  குடும்பம். ஒருவரை சாராயம் குடிக்க கூட்டிசென்று நண்பர்கள் போல் பேசி கொன்றனர்.ஒருவரை அவர் வீட்டிற்கு கறி எடுக்க சைக்கிளில் செல்லும்போது கொன்றனர்.அதுவரை அவர்களை நான் பார்த்ததற்கும் அதற்கு பின் அவர்களை பார்த்தற்கும் நிறைய வேறுபாடு. பிறகு அந்த ஏரியாவே மாறியது. எவ்வளவு படுகொலைகள்.  ஆனால் அந்த குடும்ப பெண்கள், எதிரில் நின்றவர்களின் குடும்பபெண்கள் நிலைமை பரிதாபம். அந்த வீட்டு பெண்களை சந்தித்தால் என்னிடம் அவர்கள் புலம்பி அழுவார்கள்.சேலையால் மூக்கை மூக்கை சீந்தியபடி என்னிடம் அழுது புலம்பிய ஒரு பாட்டியின் முகத்தை பார்த்து திகைத்து நின்றது இப்போதும் திகைக்கவைக்கிறது. எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, அப்போது எனக்கு  " இவர்கள் ஏன் இதை என்னிடம் சொல்கிறார்கள்? " என்றுதான் தோன்றும். எனது மண்டை இப்போதுபோலவே குருவி மண்டையை விட சிறியது. நானே அந்த பெண்களை பிரமிப்பாய் பார்த்துகொண்டு இருப்பேன்.நான் செல்வது ஆஸ்டல் சாப்பாடினால் வெறுத்துபோய் அவர்கள் வீட்டில் சாப்பிட.

துரியோதனன் அவனின் ஆசிரியரும் துரோணரின் மைத்துனனுமாகிய கிருபரிடம் "ஆசிரியரே, இக்களத்தில் யுதிஷ்டிரர் கொன்று வீழ்த்தப்பட்டால் வெல்வது நாம் மட்டுமல்ல, நமது தந்தையர் சொல்லும்தான், ஒன்று கொள்க! யுதிஷ்டிரன் இங்கே வென்றால் பிறிதொரு யுகம் பிறக்கிறது. இருளின் காலம். கீழ்மையின் காலம். எங்கும் எதுவும் நிலைகொள்ளாத பிறிதொரு யுகம்” என கூறுகிறான்.ஜெயமோகன் சார், எனது மனதில் எப்போதும் தோன்றி மின்னும் ஓன்று ஒரு ஏரியாவில் அல்லது ஒரு நாட்டில் படுகொலைகள் விழுந்து கொண்டே இருந்தால் அந்த இடம் மாறுகிறது என்று. காதலில் கொலைகள் விழுந்து கொண்டிருந்தால் அந்த சமுகம் காதலின் அர்த்தத்தை மாற்றுகிறது. குடும்ப உறவுகளில் கொலைகள் விழுந்தால் குடும்ப உறவின் அர்த்தம் மாறுகிறது.மத சண்டைகளில் கொலை விழுந்து கொண்டிருந்தால் மத பிடிப்பில் மாற்றம் வருகிறது. அரசியலில் கொலைகள் விழுந்து கொண்டிருந்தால் அரசியல் மாறுகிறது. "மாற்றம்" என்றால் சிம்பிளாக படுகொலைகளின் ரத்த வெள்ளம் . சிந்திய வெண்மணி கூட சிப்பிக்குள் முத்தாகும்போது  ரத்தம் வீணாகுமா? அதற்கு அஞ்சித்தான் சமூகம் மாற்றம் என்றால் பீதியாகிறதா? ஆனால் மாறித்தான் ஆகவேண்டும். 

ஜெயமோகன் சார், நீங்கள் அடிக்கடி கூறுவீர்கள் வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களின் வரலாறு என்று [ஆனால் நீங்கள் எப்போதுமே தோல்வி அடைந்தவர்களின் வரலாற்றையும் படிக்கும்படி ஊக்குவிப்பீர்கள்]. உங்களின் கட்டுரை " பாவ மௌன"த்தில் ஹிட்லரின் படுகொலை கண்டிக்காத பாப்பரசர் பனிரெண்டாம் பயசின் மவுனத்தை குறித்து படிக்கும்போது பெரிய அதிர்ச்சியடைந்தது இப்போது ஞாபகம் வருகிறது. [அவர் அமெரிக்கா ஜப்பான் மீது குண்டு போடும்போது என்ன கூறினார் ? என்பதுதான் எனது அடுத்த கேள்வியாக இருந்தது.]   அதை துரியோதனன் “இத்தனை நாள் இங்கு நிமித்திகர் கூறிக்கொண்டிருந்தார்கள் இனி எழுவது கலியுகம் என்று.இருளின் இறைஎழும் காலம் என்று.ஆகவே நான் மகிழ்ந்தேன் என் தெய்வம் எழுகிறது என.என் இறையின் அருளால் நானே வெல்வேன் என்று கற்பனை செய்தேன்.இன்று உணர்கிறேன் மெய்யாகவே கலியுகம் யுதிஷ்ட்ரன் வெல்லும்போதுதான். எழும் கலியுகத்தில் அவனையே அறச்செல்வன் என முன்னிறுத்துவார்கள்.அவனுடைய வெற்றியை அறத்தின் வெற்றி என்று புனைந்துரைப்பார்கள். கலியுகத்தில் அறமின்மை அறத்தின் மாற்றுரு பூண்டுதான் எழும். அறமென தன்னை எதிர்ப்பவர்க்கும் அறம் கடந்த தன்னலமே என தன்னவருக்கும் அது முகம் காட்டும் .ஆசிரியரே ,அதை எவரும் பேசி வெல்லமுடியாது விளக்கி அகற்ற முடியாது. சொல்லுக்கு அடங்காத ஒன்றை வெல்ல தெய்வங்களாலும் இயலாது என வாசித்து பேய் அடித்தது போல் நிற்கிறேன். இப்படி அப்பட்டமான உண்மையை எப்படி ஜீரணிப்பது?. இது புரியாமல் பொத்தி பொத்தி அழுத்திகொண்டு,புரியாமல் தவித்துக்கொண்டு வாழ்வதை நினைத்தால் வெட்கமாய் இருக்கிறது. ஆனால் யுதிஷ்டிரன் போல வாழ என்ன பண்ண? மீண்டும்  வெண்முரசை படிப்பதையும் உக்கிரமாய் செயல் ஆற்றுவதையும்  தவிர வேறுவழி இல்லை. கலியுகத்தில் மட்டும் அல்ல எந்த யுகத்திலும் வெல்ல சூழ்ச்சிகள் தேவைதான் போலும். இருள் என்னும் நீலி. துரியோதனன் ஏன் ஆரம்பத்தில் இருந்தே நல்லவனாக,கொஞ்சம் மங்குனியாக, சொல்நுழையாதவனாக வெண்முரசில் சித்தரிக்கப்பட்டுகொண்டிருந்தான் என இப்போது புரிகிறது.

இன்றைய நிலைமையை நன்றாய் கூறுகிறது வெண்முரசு துரியோதனன் சொல்லாய் "இனி எழவிருக்கும் யுகத்தில் படைவீரர்கள் பீமனைப் போலிருப்பார்கள், வஞ்சத்தால் அடையும் விழியின்மையையே ஆற்றலெனக் கொண்டிருப்பார்கள். அரசர்கள் அர்ஜுனனைப்போல் கொல்லும் கூர்மையை மட்டுமே சென்றடைவார்கள். நெறிகற்றோர் யுதிஷ்டிரனைப்போல அனைத்தையும் சொல்லி நிறுவும் வெறும் நாவலராகவே எஞ்சுவார்கள்.” இப்போது அப்படிதானே இருக்கிறார்கள்.பொதுமக்களாகிய நாம் இயலாமையினாலும் பொறாமையினாலும்  பொங்குபொங்கு என இணையத்திலும் 'பார்வதிபுரம் பாலம்"கட்டுரையில் நீங்கள் கூறியது போல் “நாங்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறோம்”என்று கூவி "கூச்சல் என்றால் நினைத்துக்கொள்வதுதான்" என்றும் கடந்து செல்வோம். கலியுகத்திற்கு என்ன ஒரு காம்பினேசன் ?   வேறு என்ன செய்யமுடியும் ? வஞ்சத்தால் விழியின்மை கொண்டிருக்கலாம், கொல்லும் கூர்மை கொண்டிருக்கலாம், சொல்லி நிறுவும் நாக்கு கொண்டிருக்கலாம் ..இது இல்லாமல் வாழவே முடியாதா? .ஒரு ஐந்து வருடம் முன்  என்னை "நீ ஒரு பிள்ளைபூச்சி" என ஒரு ரீசார்ஜ் பண்ணும் கடைக்காரன் கூற மனம் கூச்சல் போட்டது ஞாபகம் வருகிறது.

அந்த சூழ்நிலையிலும் கிருபர் புன்னகைப்பதை நினைத்தால் "இவங்கலாம் யாரு?" என்றே எண்ண தோன்றுகிறது. இப்போது நமது அரசியல்வாதிகள் இறந்தவர்களின் வீட்டில் சிரித்து பேசிகொண்டிருப்பதையும், சவபெட்டிகளின் முன் செல்பி எடுத்து கொண்டிருப்பதையும் கண்டு பொங்குபவர்களுக்கு இந்த ஒரு அத்தியாத்தையாவது படிக்க சொல்லவேண்டும். கிருபர் கூறுகிறார்" ஒவ்வொரு மெய்வழியும் எண்ணித்தொடமுடியாத தொன்மை கொண்டது. ஒன்றுக்குப் பிறிதொன்று இளையது அல்ல. ஒன்றை பிறிதொன்று இணைத்துக்கொள்கையிலேயே பிறிதொன்றைவிட பெரிதாகிறது. அனைத்து ஆறுகளும் கடல்சேர்வதுபோல் அவையனைத்தும் மெய்மைப் பெருவிரிவையே சென்றடைகின்றன என்கிறது உபநிடதம்” என்றார். “தாங்கள் அறிந்த மெய்மையை தொல்முனிவர் அனைத்திலும் கண்டடைந்தனர். அனைத்திலும் வெளிப்படுத்தினர். சொல்லில் அது வேதம். கல்லில் அது சிலை. வில்லில் அது அம்பு. எண்ணிறந்த பொருட்களில் எண்ணிறந்த வடிவில் அது நின்றுள்ளது. ஒன்றில் அதை கண்டடைவது யோகம், எங்குமென அறிந்தமைவது ஞானம்.” இந்து மதத்தின் பண்பு. அதை புரிந்து விரித்து பரப்பி கொண்ட ஞானிகளின் கூறு. எவ்வளவு பெரிய ஞான வெளி. எனக்கான ஓன்று எது? ..

கிருபர் கூறுகிறார்.......இது இனிமேல் எழுயுகத்தில் சற்றேனும் அறம் எஞ்சவேண்டும் என எண்ணுபவர்களுக்கும, எவ்வகையிலேனும் வெல்வதே இலக்கென்று எண்ணுபவர்களுக்கும் இடையேயான போர். நீங்கள் இங்கு என்ன செய்தாலும் தெய்வங்களால் வாழ்த்தப்படுவீர்கள்.” ....திகைத்து திகைத்து மனம் சோர்வுருகிறது.துரியோதனன் கூறுகிறான் "இவர்கள் அறமிலிகள் அல்ல. இவர்கள் வருயுகத்தின் வடிவங்கள். அறமயக்கங்களை உருவாக்குபவர்கள். நூல்துணையும் தெய்வத்துணையும் கொண்டு அழிவை நிகழ்த்துபவர்கள். இவர்களை எதிர்த்து இனி தெய்வமும் எழப்போவதில்லை. கலியுகத்தில் வேதம் காக்க விண்ணளந்தோன் எழமாட்டான் என்கின்றன நூல்கள்.இவர்களை இன்று வென்றாகவேண்டும் என்று....நாராயண அம்பின் பலன் என்னவாய் இருக்கும்? 



ஸ்டீபன் ராஜ் குலசேகரன்