இனிய ஜெயம்
ஒட்டு மொத்த கார்கடல் நாவலிலும் என்னால் தாள இயலாமல் போன தருணங்களில் இரண்டாவது சித்திரம் பீமன் அழுதது. கடோத்கஜன் ஆகவே இருத்து விட்டுப் போகட்டுமே, நானே நீ எனும் உணர்வை நல்கும் செல்ல மகன் என்றே ஆகட்டுமே பீமன் அழ மாட்டான் என்றுதான் எண்ணினேன்.
மீண்டும் பீமன் பீமனாக எழுந்துவிட்டான் இன்று.நீலனே சொல்லிய பின்னும் ஆயுதத்தை துறக்காமல் ஆயுதபாணியாக நாராயண அம்பின் முன் நிற்கிறான். முற்றிலும் பணிந்து உயிர் பிழைத்தோர் மத்தியில், முற்றிலும் பணியாமை எனும் பேராண்மைக்கு தன்னை ஒப்புக் கொடுத்து புடம் கண்டு உயிர் மீண்டு நிற்கிறான் பீமன்.
அனைத்தையும் சமன் காண வைக்கும் நீலனின் விளையாட்டு இங்கு மற்றொரு முறை வென்றிருக்கிறது. கிராதம் நாவலில் கானகசிவம் வசம் தோற்றவன் அர்ஜுனன் மட்டுமல்ல.அதற்க்கு முன்பாக நீலனும் கூடத்தான். வேடசிவன் எடுத்து சென்றுவிட்ட அவனது படையாழியை திருப்பத் தரக் கேட்டு சிவனை கெஞ்சியபடி நீலன் அவன் பின்னால் செல்லும் சித்திரம் வரும்.
அந்த விளையாட்டு இங்கே சமன் கண்டிருக்கிறது. அன்று சிவன் வசம் நீலன் ஆயுதத்தை இழந்தான். இன்று நீலன் வசம் ஆயுதம் பலனிழக்க சிவம் திரும்பிச் செல்கிறது.
கடலூர் சீனு