Sunday, March 31, 2019

ஹவனை




அன்புள்ள ஜெயமோகன் சார்,

இமைக்கணம் இரண்டாம் அத்தியாத்தை வாசிக்கும்போதுதான் ஹவனை எப்படி ஒரு மனிதனுக்குள் தோன்றுவாள் என்பதை புரிந்துகொண்டேன். உண்மையில்  நன்றாக சரஸ்வதி படத்தை உற்றுபார்த்து "ஊழ்கம், கலை, எண்ணம், எழுத்து" என்று அவள் கைகளின் பொருட்களை பார்த்து  பிரமித்ததும் இன்றுதான். பல ஆயிரம் ஆண்டுகளாக வின்முகில்கள் மேல் அலைந்து " நிகழ்ந்தவற்றின் தடமின்றி எஞ்சுவதே விண் என்று பிரபாவன் உணர்ந்தது. எனவே விண்ணில் எதுவும் நிகழ்வதேயில்லை என்று தெளிந்தது. ஒன்றுபோல் மறுநாள் அமையும் அப்பெருவிரிவின் அலையற்ற காலத்தை அதன் சித்தம் உணர்ந்தது. தன் சிறகுகளால் அக்காலத் தேங்கலை அசைக்கமுடியும் என்று கண்டுகொண்டது. சிறகசைவை எண்ணி காலத்தை கணக்கிடத் தொடங்கியதும் தயங்கியபடி பிரிவின்மையிலிருந்து முக்காலம் சொட்டி வடிந்து அதை வந்தடைந்தது. அதன் ஊசலில் முடிவிலாது ஆடியது பிரபாவன்" என்று வாசிக்கும்போது விண்ணில் என்னதான் நிகழ்கிறது என்று எண்ணி பார்த்தால் என்ன நிகழ்கிறது? முகில்களுக்கு மேலேயே சூனியம் தானா? குறையாது தவம்கொள்ளும் நிலைகொண்டிருந்தது தியானிகன். சலிக்காது செயல்கொள்ளும் விசை கொண்டிருந்தது பிரபாவன். எண்ணங்களை அவியாக்கி வேள்வி இயற்றியது தியானிகன். அதன் காவலன் என்று பிரபாவன் அமைந்தது.எங்கு தவமும் செயலும் முற்றிணைகின்றனவோ அங்கே தெய்வமொன்று எழுகின்றது.....எவ்வளவு தடவை கேட்ட வார்த்தைகள் . ஆனால் தியானிகன் ,பிரபாவன் கதை ஆழமாய் வாசிக்கும்போதுதான் அதன் வீரியம் புரிகிறது. இப்படி எல்லாம் சலிப்பின்றி தவமும் செயலும் செய்ய முடியுமா என மனம் சோர்கிறது. அப்படி இருந்தால் மட்டும்தான் சொல் எழுந்து சரஸ்வதியின் மகள் ஹவனை எழுவாள். அவள் எழுந்து அவர்களுக்காய் இந்திரனிடம் "மண்ணின்பொருட்டு முடிவிலா விண்ணைக் கூவி அழைப்பது என் பணி” என கூறுவாள்.  ஏன் இந்திரனிடம் அவள் செல்கிறாள்.....திரேதா யுகம் "இந்திரவேதம் " மட்டும் கொண்டதா? ...இறப்பு ,பசி அடுத்து இந்திரம் தானா ? கிராதத்தில் அர்ஜுனன் இந்திரனை சந்திப்பதும் .....ஜனங்கள் சேரிகளிலும், ரோட்டின் ஓரங்களிலும் புழுபோல் நெளிய புவியுலக இந்திரர்கள் இன்னொரு உலகில் வாழ்வதும் ஞாபகம் வந்தது. கூடவே இந்திரனின் படத்தை உற்று பார்க்க வேண்டும் என்ற ஆசையும்.

இந்திரனை சந்தித்து நாரதரை அழைத்துவரும் ஹவனை பிரபாவனை சந்திக்க அவனிடம் "பறவையே, நீ விழைவதென்ன?” என்கிறார். “நான் கிளையின் இலை, முனிவரே. என் பொருட்டு தவமியற்றும் வேரை சந்தியுங்கள்” என்னும்போது திக்கென்று இருந்தது. என்ன வேர்? எதின் வேர்? ....சரஸ்வதி அழைப்பா?  தியானிகன் "“காலம் சமைத்து, அதன் கணுக்களென சித்தம் ஒருக்கி, இப்புவிக்குப் பொருள் அளித்த சாவு எனும் பேரருளை எங்களுக்கு மறுத்தால் இங்கு இதுவரை இயற்றப்பட்ட அனைத்தும் அறுபட்டு அழியும். முழுமையடையாத எதுவும் முற்றிலும் பொருளற்றதே என்பது அவர் அறியாதது அல்ல. எதன்பொருட்டு பிரம்மனால் இப்புவி படைக்கப்பட்டதோ அந்நோக்கத்தை முறிக்கவேண்டாம் என்று சொல்லுங்கள். எந்த ஆணையின்படி செயல்கள் வேள்விகளாகி தேவர்கள் எழுந்தனரோ அந்த ஆணையை மறுக்கவேண்டாமென மன்றாடுங்கள். எங்கள் நாவென அங்கு சென்று நில்லுங்கள். உயிர்க்குலங்களின் பொருட்டு உங்களிடம் அடிபணிந்து மன்றாடுகிறேன்” என கூறி நாரதரிடம் இறப்பை கோரும்போது கோபம் வந்தது....."நான் எல்லாம் இப்படியே இன்னும் நூறுவருடம் வாழ்ந்தால் எப்படி இருக்கும்? என்றும் மரணமே இல்லை என்பது போலவும் வாழ்ந்து கொண்டிருப்பவன் "ஆனால் இருப்பைவிட இறப்பின் பயம் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு ஒருமுறை நினைவூட்டபட்டு பீதி வரும். அது அடுத்த பத்தியிலே வருகிறது" நோயின் தெய்வமாகிய வியாதிதேவியும் மூப்பின் தெய்வமாகிய ஜரைதேவியும் ஒவ்வொரு உயிருக்கும் அருகே காத்திருக்கிறார்கள். சித்தமயக்கின் தெய்வமாகிய உன்மாதையும் வலியின் தெய்வமாகிய பீடையும் வியாதியன்னையின் மகள்கள். மறதியின் தெய்வமாகிய விஸ்மிருதியும் அச்சத்தின் தெய்வமாகிய பீதியும் அழுகையின் தெய்வமாகிய ரோதனையும் ஜரையன்னையின் குழவிகள். உயிர்க்குலங்களில் துன்பத்தை நிறைப்பவர்கள் அவர்கள். இறப்பின் தெய்வமாகிய மிருத்யூ அவர்கள் எழுவரை புரவிகளெனப் பூட்டிய கரிய தேரிலேறி செந்நிறக் குழல் பறக்க கரிய முகத்தில் கண்கள் கனல உயிர்களை அணுகுகிறாள்.”“அறிக, தன்னுணர்வினூடாகவே அவர்கள் உடல்புகுந்து உள்ளத்தை கைப்பற்ற முடியும். நீர் உம் குடியினருக்கும் உயிர்களுக்கும் இருப்புணர்வை அளித்ததுமே ஏழன்னையரும் பேருருக்கொண்டு கோடி கண்களும் கோடானுகோடி உகிர்விரற்கைகளும் நாக்கொடுக்குகளும் நச்சுப்பற்களும் பூண்டு நகைத்தபடியும் உறுமியபடியும் கனைத்தபடியும் பெருகிச்சூழ்ந்து நிறைவார்கள். ஒவ்வொரு கணமும் பெருந்துன்பமே உயிர்க்குலத்தை ஆளும். அதை ஏற்று உளம்தளராது நின்று சொல்லளித்து இவளை விசைகொள்ளச் செய்யவேண்டும் நீங்கள்.” என தியானிகனிடம் நாரதர் கூறுகிறார். அப்படி என்றால் உண்மையில் சலிப்பாகி வெறுப்பாகி நாமலே சித்தத்திடம் கூறி வியாதியையும் மூப்பையும் மரணத்தையும் நமக்கு நாமே கொண்டு வருகிறோமா?  சித்தம் ஒன்றாகிய செயல் இருந்தால் மரணம் இல்லையா? 

வலியின் அசைவுகளே முத்திரைகளாக, துன்ப ஒலியே வேதச்சொற்களாக, விழிநீரே அவியாக பெருவேள்வி ஒன்று நிகழும் வேள்விச்சாலையாக இருந்தது புவி என இமைக்கணம் மரணம் இல்லா உலகை கூறுகிறது. இப்போதும் உலகம் இப்படித்தானே இருக்கிறது? சரஸ்வதிக்கு  இந்திரனுக்கு அப்படியே எதிர்முகம். ஆனால் அதைக்கொண்டுதான் ஏழு பாதாள உலகங்களையும் கடந்து புவியில் இருந்து   யமபுரிக்கு நாரதர் செல்கிறார். முஞ்சவான் மலையுச்சியில் தவம் செய்து கொண்டிருக்கும் யமனை சென்று அடைய செல்லும்போது "பேய்களும் பூதங்களும் காகங்களும் எருமைகளும் கழுதைகளும் பன்றிகளுமாக கரிய உருப் பெருக்கி அலறியபடி அவரை சூழ்ந்துகொண்டன."“நான்! நான்!” என நுண்சொல் உரைத்து தன்னை ஊழ்கத்தில் நிறுத்தி அவற்றை வென்றார் என வருகிறது. இது என்ன என்றே புரியவில்லை.  பேய்கள், பூதங்கள், காகங்கள் , எருமைகள், கழுதைகள், பன்றிகள் எல்லாம் என்ன ? அவை எப்படி நம்மை சூளும் ? தவம் இருக்கும்போது அல்லது ஒரு  ஒற்றை செயல் செய்ய முயலும் பொது வருமா ? அப்போது தான் முதலில் "நான் ,நான் " என்று கூறி முன்செல்லவேண்டுமா? கறை நல்லது என்பதுபோல் " நான்" என்பதும் பயன் அளிக்ககூடியதா? ...அதற்கு  பிறகுதான் உண்மையிலே "நான் " யார் என்று தெரியும் போல . அப்போதும் தவங்கி நிற்காமல்  " தேவர்கள் .தேவர்கள் " என்று கூறி "நானை " வென்று  தேவர்களை அடைய வேண்டும் ...பிறகு நம்மில் தெரியும் தேவர்களை " தெய்வம் ,தெய்வம் " என கூறி தேவர்களை வெல்ல வேண்டும். பிறகு மூன்று வடிவில் வரும் காலர்களை " பிரம்மம் ,பிரம்மம் என்று கூறி கடந்து,தேவியின் அனைத்து டார்ச்சர்களையும் தாங்கி "அகாலம் ,அகாலம் " என்று கதறி யமனை சந்திப்பவன் உண்மையிலே  யார்? அவனுக்கு என்ன பெயர்? அப்படி இந்த பூமியில் எத்தனை பேர் பிறந்து யமனை சந்தித்து இருப்பார்கள் என்று எண்ணினால் மனசே சூனியத்தில் இருப்பது போல் ஆகிவிட்டது. "ராமன் ,கிருஷ்ணன், கிறிஸ்து, காந்தி " இப்படி சிலர் மட்டும் தானா? இவர்கள் தான் உலகை சமைக்கிறார்களா? 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்