Saturday, March 30, 2019

இமைக்கணக்காடு
அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடல் முடிந்தபின் மீண்டும் "இமைக்கணம்" வாசிக்கலாம் என நினைத்து தொடங்கினேன். வெண்முரசு நாவல்களின் வரிசையில் இப்போது மனதுக்கு நெருக்கமாய்  புதையல்கள்  போல தோன்றும் நாவல்கள் " மாமலர் " சொல்வளர்காடு" இமைக்கணம் " . ஒரு இமைக்கணம் என்பது தேவர்களுக்கு ஒரு யுகம் என்று எங்கோ படித்தது ஞாபகம் வந்தது. எத்தனை தடவை தேவர்கள் கண்சிமிட்டி இருப்பார்கள் ? ஏன் அவர்கள் கண்சிமிட்டாமல் இருக்கிறார்கள்? கண்சிமிட்டாத அளவுக்கு அவர்கள் எதை பார்த்துகொண்டு இருக்கிறார்கள்?  தாங்கள் நிலைகுத்தி பார்த்துகொண்டிருக்கும் போது அவர்களின் மனதுக்குள் என்னதோணும்? சிரிப்பார்களா? கோபப்படுவார்களா இல்லை வெறுப்பில் இருப்பார்களா? என்று பல கேள்விகள் .

இமைக்கணத்தின் தொடக்கம் "இந்த கதை திரேதா யுகத்தில் நடந்தது " என ஆரம்பிக்கிறது. 12,96.000 ஆண்டுகள் கொண்டது திரேதா யுகம் . நான்கில் மூன்றுபகுதி அறமும் ஒருபகுதி இருட்டும் கொண்ட மனித மனதை கொண்டவர்கள் வாழும் யுகம். ராமபிரான் அவதரித்த யுகம். திரேதா  யுகத்தின் தொடக்கம் தான் " அட்சயதிரியை " என்று இன்று கொண்டாடபடுகிறது. ஏன் அதை தங்கம் வாங்கி வீட்டில் பதுக்கினால் நல்லா இருக்கும் என நாம் கொண்டாடுகிறோம்?  ஒரு யுகத்தின் தொடக்கநாளை வருடா வருடம் கொண்டாடுகிறோமே ஏன்? . 

இமைக்கணத்தின் முதல் மூன்று அத்தியாயங்களும் , தான் செய்த ஒரு தவறுக்காய் எமன் தனது அழித்தல் தொழில் செய்யாமல்,சிவபெருமானிடம் தவமியற்ற  சென்றுவிட, உலகின் இயக்கம் நின்று போகிறது. இறப்பு என்னும் அமுது இல்லாமல் பூமியின் உயிர்கள் தவிக்கின்றன. எமனை மீட்டுக் கொண்டுவர நாரதரின் விண்ணிலிருந்து பாதாளத்துக்கு செல்லும் பயணமும் யமனை மீட்டுக்கொண்டு வந்து உயிர்களை கரை சேர்ப்பதும் நடக்கிறது. 

தியானிகன் என்னும் புழுவை கொத்தி திங்க ,பிரபாவன் என்னும்  சிட்டுக்குருவி முயல .....தியானிகன் தலைதாழ்த்தவோ விலகிச்செல்லவோ இல்லை. தலைநிமிர்ந்து நோக்கி அச்சமின்றி நின்றது.அந்தத் துணிவை அதற்குமுன் குருவிகளோ அவற்றின் நினைவிலுறைந்த தொல்மரபினரோ அறிந்திருக்கவேயில்லை என்கிறது. ஏன் என்றால் இனி உலகில் மரணம் இல்லை. ஆதலால் பசி இல்லை. காமம் இல்லை. பிறப்பும் இல்லை. " நானும் என் கணமும் அச்சமொன்றையே மெய்யென்று கொண்டிருந்தோம். எங்கள் எண்ணங்களும் செயல்களும் அச்சத்தாலேயே வடிவமைக்கப்பட்டிருந்தன. அச்சத்தை உதறுவதன் எல்லையில்லா விடுதலையை அடையும் பேறுபெற்ற என் குலத்தான் நான் என பூச்சிகள் ரீங்கரிக்கலாம் . சிலந்தி"பெரிய விடுதலை நாம் பின்னிய வலையில் நாமே மாட்டியிருப்பது. ஒவ்வொரு கணமும் நெய்துகொண்டிருப்பதை நிறுத்தியபின் என் கால்கைகளை தூக்கி பார்த்தேன். இவற்றால் நான் என்னென்ன செய்யமுடியும் என எண்ண எண்ண என் உள்ளம் கிளர்ந்தெழுகிறது .காலைமுதல் வெறுமனே சரடில் தாவிக்கொண்டிருக்கிறேன். நேற்றுவரை என் குலம் செய்துவந்த செயல்கள்தான் இவை. ஆனால் வேட்டைக்கென அன்றி விளையாட்டென செய்கையில் இவற்றிலிருந்து எதிர்பார்ப்பும் பதற்றமும் அச்சமும் அகன்றுவிட்டன என பேருவகை கொள்ளலாம் . தேள்கள் "நஞ்சில்லையேல் என் உடல்வடிவும் பொருளிழந்துவிடுகிறது.ஆகவே இல்லா நஞ்சை நடிக்கிறேன் என கூறி குதூகலிக்கலாம். ஏன் என்றால் இறப்பு இல்லை.  அனைத்து உயிர்களும் ஆர்ப்பரிக்கும் அந்த மரணம் நின்ற காலையில் சோர்வாய் தவிக்கும் பிரபாவன் ஒன்றை அறிந்து கொள்கிறது....."இறப்பே பசியென்றாகி உலகை ஆண்டது ,பசியே விழைவென்று உயிர்களை செயல்கொள்ளச் செய்தது" என்று . முதல் வேதம் . அழியவே அழியாதது. இறப்புக்கு இறைவன் தனது தொழிலை நிறுத்திவிட "காலமும் விழைவும் முடிவில்லாதவையே. அவையிரண்டும் எனக்கு அருளப்பட்டுள்ளன. நான் வென்றுவருகிறேன்” என்று தன்னம்பிக்கையோடு கூறி அவனை சந்திக்க செல்லும் பிரபாவன் யார்? ..குத்தாட்டம் போட்டு குதூகலிக்கும் இந்த உலகில் ஏன் அவனுக்கு அவ்வளவு சோர்வு ?  

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்