Saturday, March 2, 2019

போர்க்களத்தில்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

பலவருட வாழ்வின் விளைவாக எட்டப்படும் சாத்தியம் உள்ள அறிதலை போர் இறப்பின் எதிர் நிறுத்தி 'இப்போது' என்று வாய்ப்பு அளிக்கிறது.  வாழ்வு உயிரோட்டம் உள்ளதாக இருப்பதற்கு இறப்பின் இன்றியமையாமை இமைக்கணத்தின் ஆரம்ப அத்தியாயங்களில் நிறுவப்பட்டது.  இங்கு கார்கடலின் களம் நீண்ட வாழ்வை அரைகுறை  உயிரோட்டத்துடன் நிகழ்த்தும் சாமானிய வாழ்வின் மாற்றாக, முழுமையான உயிரோட்டத்துடன் உச்சத்தில் வாழ்ந்து  கடந்து செல்லும் சாத்தியத்தை வழங்குகிறது.  இங்கு குறுகிய காலத்தில் வாழ்வின் மீதான ஒரு முழுமையான பார்வை, மெய்மைக்கான திருக்கதவம் திறக்க கண்ணன்.  உண்மையில் மொத்தவாழ்வில்  தீவிரமான, முழுமையான ஈடுபாட்டுடன் திகழ்ந்த கணங்கள் மட்டுமே உயிர் வாழ்ந்த கணங்கள் மற்ற பெரும்பொழுது வெறுமே உடல் வாழ்ந்த கணங்கள் என்று கருதுகிறேன்.   

குண்டாசி, விகர்ணன், பூரிசிரவஸின் எரிகாட்டில் இருக்கிறேன்.  இவர்கள் மூவர் துரியோதனனுக்கு உண்மையாக இருந்தவர்கள்.  குண்டாசியும், விகர்ணனும் உண்மையில் செஞ்சொற்றுக்கடன் தீர்த்தவர்கள்.  பூரிசிரவஸ் மேலானவன்.  கர்ணனும் துரோணரும் துரோகிகள்தான்.  குண்டாசிபோல அவர்களும் நாங்கள் வெறுமே உனக்காக சாக மட்டுமே செய்வோம் தெளிவுபடுத்தி இருக்கலாம்.  பாண்டவர் பக்கம் கண்ணன் இருக்கும் களம் மெய்மையின் வாசல் போல் உள்ளது.  இந்தபக்கம் உள்ளவர்கள் இங்குமங்குமாக மனம் கொண்டு பின் அப்பக்கம் சென்று  மெய்மையின் வாசல் நோக்கியே செல்கிறார்கள்.  இங்கு இக்கணத்தில் முற்றிலும் லௌகீகமானவனாகத் தெரிபவன் துரியோதனன் மட்டுமே. 

அன்புடன்
விக்ரம்
கோவை