கார்கடல் 79,81,82 அதிகாரங்களில் துரோணரின் விற்கள் விளைவுகளை அனுகுண்டுகளைபோல் ஏற்படுத்துகிறது.
82ம் அத்தியாத்தில் "இடிமுழக்கத்துடன் மின்னொளிச் சிதறல்களுடன் எழுந்த அது பிரம்மாஸ்திரம் என அவன் உணர்ந்தான். தேரிலிருந்து இறங்கி அப்பால் பாய்ந்தான். எரியுமிழ்ந்து தேரை ஓங்கி அறைந்தது அது.மாபெரும் கரிய போர்வையைத் தூக்கி அவர்கள்மேல் மூடியதுபோல இருள் பரவியது. யானைத்தோல் கூடாரக் கூரை என வானம் அண்மையில் வளைந்திருந்தது.கருமைக்குள் நூற்றுக்கணக்கான செம்மலர்கள் என துரோணரின் வாளிகள் வெடித்தன. அலறல்கள் நீருக்குள் என கேட்டன" என்றும்
80ம் அதிகாரத்தில் "எரிந்த தேருடன் இளைய யாதவர் புரவிகளை அறைந்து அறைந்து ஓட்ட அவை தேரை இழுத்தபடி சுழன்றன. தழல்கொழுந்துகள் எழுந்து வெடித்து நீலச்சுடருடன் கொப்பளித்தன. மிகத்தொலைவில் வெண்குடைபோல் புகை எழுந்து விண்ணில் கவிந்தது. பின் அது காற்றால் கரைத்து உருவழித்து அள்ளிச்செல்லப்பட்டது. அதன் பின்னரே செவி நடுக்குறும் அதன் வெடியோசை எழுந்தது. ஒருகணம் கழித்து வெட்டுண்ட கால் ஒன்று பெருந்தொடையுடன் வந்து அவர்களின் தேர் மகுடத்தில் விழுந்து குருதிச்சேற்றில் வழுக்கி கீழே உதிர்ந்தது......."புகையும் புழுதியும் கலந்து குடையென எழுந்து சுருண்டு சிவந்த மரம்போல் வானில் பறந்து காற்றில் அள்ளிச் சிதறடிக்கப்பட்டு முகில்களை நோக்கி எழுந்தன. அவர்களின் மேல் மண்ணும் புழுதியும் பொழிய உடல் வளைத்து நிலம் நோக்கி குனிந்து அதிலிருந்து தப்பினர்" என்றும் அவரைச் சூழ்ந்து கிடந்த மானுட உடல்கள் ஒன்றுகூட முழுவடிவில் இல்லையென்பதை அர்ஜுனன் கண்டான். ஆயிரம் வாள்களால் கொத்தி துண்டுகளாக்கி வானிலிருந்து அள்ளி வீசப்பட்டதுபோல் கிடந்தன கைகளும் கால்களும் நெஞ்சுகளும் தலைகளும் என்றும் வாசித்தபோது ஹிரோஷிமா, பொக்ரான், செர்னோபில் அணுவுலை, எல்லாம் ஞாபகம் வந்தது.
கார்கடலின் 79ம் அத்தியாயத்தில் “தந்தையே, இப்போரை இப்போது நம்மால் முடித்துவைக்க இயலாது. இன்று இப்போர் நிகழ்வது களத்தில் நிகழ்ந்த கொலைகளில் இருந்து எழுந்த வஞ்சத்திற்காகவே. இது முழுமையாக ஓடிச் சுழன்று பின்னரே நிற்கும்.என்றும் “ஒவ்வொரு சொல்லிலும் இந்த யுகத்தை முடிக்கும் நஞ்சை நான் கொண்டிருக்கிறேன்” என்று இளைய யாதவர் கூறுவதையும் வாசிக்கும்போது இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டை பயன்படுத்த ஆலோசித்தது [ திரைபடங்களில் பார்த்தது] போல் இருக்கிறது. வெடிபொருள் விற்பன்னர் ஆல்பிரட் நோபெலுக்கும் பூமியின் ஒரு மெய்யியல் கிடைத்து அதை ஆயுதமாகவும் ஆய்த தொழிற்சாலைகளாகவும் மாற்றினார். ஆனால் சமாதானத்துக்கான "நோபெல்" விருதை ஏற்படுத்தினார். என்ன லாஜிக்கோ? ஒரு வேளை அழிவை வியாபாரம் பண்ணி மாபெரும் பணக்காரனாய் வாழ்ந்துவிட்டு சமாதானத்தை பறக்கவிடுவதுதான் போரா? அடுத்து வரும் நாவல்களில் உயிரோடு இருப்பவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்றே நினைக்கிறேன்.
இன்னும் ஒரு ஆயிரம் வருடம் கழித்து அப்போது வாழும் இந்தியர்கள் மேற்குலகம் இதேபோல் புதிதாய் ஆயுதம் ஒன்றை கண்டுபிடிக்க இந்தியர்கள் : "வெண்முரசு என்னும் நாவலில் வருகிறது" நாங்கள் இதை எல்லாம் ஆயிரம் வருடத்திற்கு முன்னேயே கண்டுபிடித்துவிட்டோம்" என எதாவது பலகலைகழகங்களில் உளருவார்களோ? என்பதை நினைத்தால் ஒருமாதிரி கண்ணைகட்டிகொண்டு வருகிறது. அப்போதும் ஒருவன் "அடேய் பாவிகளா அது எல்லாம் நமது மெய்யியல்கள்" என்று கூவி,இதை எழுதியே தீர்க்கணும் என எண்ணி வெண்முரசை " நீல முரசு " அல்லது " இந்திய முரசு " என தலைப்பு வைத்து எழுத ஆரம்பிப்பான் என்றே நினைக்கிறேன்.
ஸ்டீபன்ராஜ் குலசேகரன்