அன்புள்ள ஜெயமோகன் சார்,
கார்கடலின் 79 ம் அத்தியாயம் ஆசிரியருக்கும் இரு மாணவர்களுக்கும் இடையே நடக்கும் போர். துரோணரிடம் அஸ்வத்தாமனை கொல்வேன் என வெறி ஏற்றி அவரோடு போர்புரிந்தாலும் அவனது உள்ளம் சுருண்டே இருக்கிறது. அதுபோல துரோணரும் அவனை திட்டி போர்புரிந்தாலும் அவரது உள்ளமும் சுருண்டே இருக்கிறது. இந்த நொடி வரை எனது தொழிலில் திகைக்கும் தருணம் என்பது ஆசிரியரை எப்படி ஹேண்டில் பண்ணுவது? நமக்கு முதலீட்டாளரிடம் இருந்து முதல் வர வைக்க என்ன பண்ணுவது? இந்த இருவரும் நம்மளை வெறி ஏற்றுவதிலேதான் குறியாய் இருப்பார்கள். ஏனென்றால் இருவருக்கும் நாம் தேவை இல்லை. நமக்கு அவர்கள் தேவை என்னும் இக்கட்டை போல் வெறி ஏற்றுவது வேறு ஒன்றும் இல்லை. நாம் என்ன செய்தாலும் குறை சொல்லி, பதில் தெரிந்தாலும் கேள்வி மேல் கேட்டு கொல்வார்கள். என்ன பதில் சொன்னாலும் நாம் யோசிக்காத ஒரு விடையை லாஜிக்காக சொல்லி நம்மை திகைக்க வைப்பதில் என்ன சந்தோசம் என ஆத்திரமாக இருக்கும். லாஜிக்காக சரியாக விடை சொன்னாலும் ,செயலை செய்தாலும் நக்கலாய் சிரித்து நாம் சொன்னது ,செய்தது தப்பு என்று நம்மளையே நம்ப வைத்துவிடுவார்கள். ஆனால் வாழ்க்கை அவர்கள் முன்தான் நம்மளை கொண்டு நிறுத்தும்.அதில் இருந்து தப்பவே முடியாது. அது ஊழ்.
த்ருச்டதுய்மன் துரோணரிடம் மாட்டிகொண்டு படாதப்பாடுபடுவது எனது வாழ்க்கையில் " நான் என்ன பாடுபட்டேன் " என்று நினைத்து நினைத்து நெஞ்சம் மறுகியது. அவரது பழிவாங்குதலுக்கு துருபரை அப்படிதான் தேர்சக்கரத்தில் கட்டி அர்ஜுனன் இழுத்து வந்தான். இப்போது த்ருச்டதுய்மனை அவரே கதற கதற இழுத்து செல்கிறார். சிகண்டி வேண்டாம் என கூற பீஷ்மரின் நிலையை துரோணர் கூற சிகண்டி அதுவேறு கதை என்கிறான். சிகண்டி இல்லை என்றால் பதினோராம் நாளே போர் முடிந்து இருக்கும். இப்போது த்ருச்டத்ய்மனை காப்பாற்றி அழைத்து செல்கிறான். ஆனால் சுருதகீர்த்திக்குதான் கொஞ்சம் பீதியாகிறார். இளைமைக்கு முன் வியப்பு.ஆனால் அதற்குள் அவனை தொகுத்துகொள்கிறார். நல்ல ஆசிரியன் மாணவனையும் நல்ல மாணவன் ஆசிரியனையும் இடைவிடாது தொகுத்துகொண்டே இருக்கவேண்டும் என நினைக்கிறேன். ஆசிரியரை மட்டும் அல்ல, நாம் சந்திக்கும் அனைவருமே ஆசிரியர்கள் என்பதனால் அவர்களை தொகுத்துகொண்டே இருக்க வேண்டும்.அவர்களை சந்திக்கும்போது எல்லாம் புதிதாய் பிறந்தால் செத்தோம்.
அர்ஜுனனும் போரிடுகிறான்..ஆனாலும் துரோணர் முன் முடியவில்லை அப்போது அர்ஜுனன் "தன்னை வெல்வது எது என அவன் ஓர் மெல்லிய எண்ணமென உணர்ந்தான். அதனுடன் முழுத் தன்னிலையும் வெகுண்டெழுந்து போராடியது. அதனூடாக அதை ஆழ நிறுவிக்கொண்டது. அவர் அந்த அம்புகளை அவனுக்களித்தபோது அவன் அவரை பணிந்தான். அந்தப் பணிவாலேயே அவன் தோற்றுக்கொண்டிருந்தான்" என நினைக்கிறான். குருபக்தி மட்டும் அல்ல குருமீது உள்ள பயம்.அர்ஜுனன் தோற்று ஓட “நில், உன் மைந்தனுடன் செல்ல உன்னை அனுப்புகிறேன்” என்று துரோணர் கூவினார். “நீ கற்றவற்றை எல்லாம் இன்று கண்டேன். இனி உன்னிடம் இருப்பவை என்ன என்று காட்டு.” வெறியுடன் நகைத்து அவர் கூச்சலிட்டார். “அறிவிலி… நீ காடுமலை ஏறிச்சென்று அடைந்த அம்புகள் எங்கே? அவற்றின் திறமென்ன என்று எனக்கு காட்டு…” அர்ஜுனன் தன் உள்ளத்தில் அம்புபட்டதுபோல் உணர்ந்தான். அவர் விழிகளை கூர்ந்து நோக்கினான். அவன் நோக்கை சந்தித்து கரவுமறைந்து அவை திரும்பிக்கொண்டன. அவன் அவருக்குள் புகுந்து ஆழத்திலிருந்த ஒன்றை கண்டான்".....ஜெயமோகன் சார் இது எனக்கு நன்றாய் தெரியும். எனதுக்கு குருவுக்கு பயந்து பயந்து அவர் முகத்தில் விழிக்காமல் சுற்றிய நாட்களை இப்போது எண்ணினாலும் நெஞ்சு கூசுகிறது. ஒரு சொல் ,ஒரு சொல் என எத்தனை நாட்களை கடத்தி இருப்பேன்? ....இப்போது தான் புரிகிறது "என்னை கடந்து நீ யார்?" என்று தான் கேட்கிறார்கள். மாபெரும் குருநாதரை கொண்டவர்கள் ஒரு பக்கம் மாபெரும் பலவீனர்கள். துரோணரை வீழ்த்த அர்ஜுனனிடம் சொல் இல்லை? அதற்குதான் கிருஷ்ணரா?
ஸ்டீபன் ராஜ் குலசேகரன்