Sunday, March 10, 2019

இருளும் ஒளியும்



ஜெ

எப்போதெல்லாம் வெண்முரசின் சில அத்தியாயங்கள் நேரடியாக உலக இன்பதுன்பங்களைச் சொல்ல ஆரம்பிக்கின்றனவோ அப்போதெல்லாம் இன்னொரு பகுதி வந்து இது குறியீட்டுப்போரும்கூட என்று சொல்ல ஆரம்பிக்கிறது. இந்தப்பகுதி துருமசேனனின் போர், கடோத்கஜன் சாவு வரும்போது வருகிறது. இது குருக்ஷேத்திரப்போரை வேறு அர்த்தத்தில் காட்டுகிறது

படைப்பு முதற்பொழுதில் இப்புடவியைச் சமைத்த பிரம்மன் இரு கைகளிலும் ஊடும் பாவுமென கடுவெளியில் இருந்து இருளையும் ஒளியையும் எடுத்துக்கொண்டான். இருளால் மண்ணை உருவாக்கினான். ஒளியால் அனலை உருவாக்கினான். ஒளியையும் இருளையும் கலந்து நீரை சமைத்தான். இருளால் யானையை உருவாக்கினான். ஒளியால் செம்பருந்தை உருவாக்கினான். இருளையும் ஒளியையும் கலந்து நாகங்களை படைத்தான். வேர்கள் இருளால், தளிர்கள் ஒளியால். விதைகள் இருளால், மலர்கள் ஒளியால். ஆற்றல் இருள். விசை ஒளி. சொல் இருள், பொருளே ஒளி. ஒன்றிலாது ஒன்றிலாது முடையப்பட்டு ஒன்றுடன் ஒன்று போரிட்டுக்கொண்டிருக்கின்றன அவை.

மிக ஆழமான ஒரு பகுதி இது. இதனைத்தொடர்ந்து வரும் பகுதிகளையும் இப்படியே கவித்துவமாக விளக்கலாம். இருளால் மண் உருவாக்கப்பட்டது என்பது ஒரே சமயம் ஒரு பழங்குடித் தொன்மம் மாதிரியும் உள்ளது. கூடவே ஒரு ஆழமான தரிசனமாகவும் உள்ளது


ராஜ்