அன்புள்ள ஜெயமோகன்,
கார்கடல் நாவலில் குருஷேத்திரக் களம் தொடர்ந்து வெவ்வேறாக உருவகப்பட்டு வந்து கொண்டேயுள்ளது. முதல் தளத்தில் அது ஒரு அதிகாரத்திற்கான போட்டியாக. ஒவ்வொருவரும் தனக்கான பெருஞ்செயல் நிகழ்த்தும் களமாக, தன் பிரஞ்கையால் ஒதுக்கப்பற்றவற்றின் விஸ்வரூபமாக என அடுத்தடுத்து அதற்கு பல படி நிலைகள் உள்ளன. அதன் இன்னொரு உச்சம் இன்றைய அத்தியாயம். இது வெற்றிக்கோட்டின் இறுதியடிக்கு முன்னெழும் எதிர்விசை. அங்கு விழிகளே திரையாகிறது. விழியணைத்து காட்சியெழுப்ப வேண்டியதுள்ளது. கர்ணணுக்கு மட்டுமல்ல. துரியோதனன் உட்பட அனைவருக்கும். ஒருவனைத் தவிர. அவர் சகுனி. இந்த இடம் எவ்வளவு விஸ்தீரணமான தத்துவ விவாதங்களில் மூலமும் தொடமுடியாத இடமென நினைக்கிறேன். நேரடியான கனவின் மூலமும் புனைவின் மூலமும் சென்றுசேரும் இடம் போலுமது. இருள்மனதின் தேவையும் மகத்துவமும் உணர்த்தும் வெண்முரசின் மகத்தான தருணங்களில் ஒன்றாக நிலைகொள்ளும் இடமிது. மீண்டுமீண்டும் உளவெழுச்சியுடன் நன்றி மட்டுமே சொல்லமுடியும் எங்களால்.
அன்புடன்,
பாலாஜி பிருத்விராஜ்