Friday, March 1, 2019

நாக்கு



அன்புள்ள ஜெயமோகன் சார்.

கார்கடலின் 66ம் அத்தியாயம் "நாக்கிலே சனி" என்பதற்கு சிறந்த உதாரணம். மாபுருஷர்கள் அனைவரும் அவ்வளவுதானா ? என எண்ண வைத்தது. "தமிழ்நாட்டுக்கே நாக்கில் தான் சனி " எனும்போது இவர்களின் வெறுப்பை புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் ஒன்றுதிரட்ட வெறுப்பை கக்கி வெறி ஏற்றி எவ்வளவு நேரம் போரிட முடியும்? உணமையிலே இவர்களுக்கு செயல் சலிப்பூட்டுகிறது என நினைக்கிறேன். சலிப்பே இல்லாத இளைய யாதவர் இருக்கும் படை சுற்றி சுழல்கிறது.நஞ்சு குடித்தவன் பாண்டவபடையில் குலாந்தகனாக போரிட்டுகொண்டிருக்கிறான். நஞ்சு என்னும் சொற்களை வைத்துகொண்டு  கவுரவபடையினர்  தங்களுக்குள் பூசலிடுகின்றனர். ஆவநாழியில் தூங்குவது அம்பில் மட்டும் அல்லாமல் வார்த்தைகளிலும் வெளிபட்டு சென்று தைக்கிறது. அந்தணராகிய கிருபரை கூட கர்ணன் ரத்தகொதிப்புக்கு தள்ளுகிறான். அந்தண, ஷத்ரிய, சூத  குலங்களின் தன்மைகள் எல்லாம் காற்றில் பறக்கிறது.வெறும் வஞ்சதிற்க்காய் களத்தில் நிற்கிறார்கள். கர்ணனின் வீழ்ச்சி திடுக்கிடவைக்கிறது. மாமலையாய் மனதுக்குள் இருந்தவன் மண்ணாய் பறக்கிறான். 

துரியோதனனும்  எப்போதும் ஊழுக்கே அறைகூவிகொண்டிருக்கிறான். துரியோதனன்  "“எந்தப் போரும் ஊழுக்கு எதிரானதே. ஊழே வெல்லும் என்றால் நிமித்திகர்களே எவர் நாடாள்வது என்று முடிவெடுத்தால் போதும்” என கூறும்போது அவன் மீது பரிதாபமே எழுந்தது. வேறு என்னதான் செய்ய? கவுரவபடையினர் இனி பாண்டவபடையில் எதாவது பெரும் ஓட்டையை ஏற்படுத்தவிடால் இப்படி வெந்தே இறந்து விடுவார்கள். வெண்முரசில் அவ்வப்போது மனிதர்களின் குணங்களை குறித்து அழுத்தமாய் சொற்கள் தெறிக்கும் ,கிருபர் கூறும்" அந்தணர் சொல்லால் வீரர், வணிகர் சூழ்ச்சியால் வீரர், சூதர் கனவுகளில் வீரர் என்று கூற்று உண்டு. நீ உன் ஆணவப்பேச்சை நிறுத்தி ஊன்விழிகளால் களத்தை பார். அதன்பின் உன் ஆற்றலை உணர்ந்து எதிரியை கணக்கிட்டு களம் நின்று போரிடு”  என கூறியதை குறித்து வைத்திருக்கிறேன். மனிதர்களை தனித்தனியாய் அளக்க முடியாது என்றாலும் பொதுவாய் அளந்து  முன் செல்ல. வாழ்க்கைக்கு எனக்கு வழிகாட்டும். கவுரவபடையினர் ஊன் விழிகளை தொலைத்து விட்டார்கள் என நினைக்கிறேன். அனைவரும் மனதில் உள்ள வேறு எதோ நம்பிக்கைக்கு போரிடுகிறார்கள்.ஆனால் மாபெரும் குருஷேத்திரத்தில் இரவில் ஊன்விழி வழிகாட்டுமா?  அல்லது மனதின் வேறு விழிகள் அவர்களுக்கு தேவைபடுகிறதா? 

ஜெயமோகன் சார், சொற்களில் நச்சு சேர்ப்பவனின் மனம் நன்றாய் எனக்கு தெரியும். ஏன் என்றால் அவர்களில் நானும் ஒருவன். செயல் இருக்கும், இலக்கு இருக்கும் ஆனால் அடிமனதில் ஆழ்ந்த கசப்பு ,எதன் மீதே என்று தெரியாத கசப்பு " இருந்துகொண்டே இருக்கும். அனைத்தையும் அது அழிக்கும்.அச்சமும் தயக்கமும் தாழ்வுணர்ச்சியும் கொண்டது.தன்னை உயர்த்தி அடத்தவனை கீழாய் பார்க்கும் அகம்பாவத்தில் தொடங்குவது அது. அஸ்வத்தாமன் உத்தரபாஞ்சாலனை "பேடி " என கூற சஞ்சயன் கூறுகிறான்  "ஒரு சொல்விடாமல் அனைத்தும் எவ்வகையிலோ உள்ளே சென்று சேர்ந்துள்ளன. அந்த ஆவநாழியை அவன் அறிந்ததே இல்லை. ஆனால் நா அறிந்திருந்தது. தேவையென்றபோது இயல்பாகச் சென்று உரியதைத் தொட்டு எடுத்தது. கொலைநச்சு கொண்டது. எரிந்து எரிந்து எழுவது" என. எவ்வளவு உண்மை. சும்மா அன்பு காட்டுகிறவன் மீது எல்லாம் அவன் மீது வெறுப்பை கக்க சொற்களை பொறுக்கி ஆவநாளியில் சேர்க்கும் குணத்திற்கு என்ன பொருள்?. ஆனாலும் நேருக்கு நேர் பொருதும்போது  அவன் நானே என கண்டுகொள்கிறேன். நச்சு சொற்களின் பயன்கள் அடுத்தவனை அறிவது என்றால் அது அறமா? அல்லது  இளைய யாதவன் எதையாவது வைத்திருப்பானா? இங்கிருந்து தான் அனைவரும் "நான்" என்று உணரும் தன்மை தொடங்குகிறதா? .ஐந்து மலங்களும் வெளியேறிய பின்தான் விடுதலை என்றால்? அதற்குதான் கிருஷ்ணன் " பயனை எதிர்பாராமல் செயல்புரி " என்கிறானா? 


கர்ணன் நேற்று தர்மனை நச்சால் கொன்றான் இன்று சகதேவனை.எவ்வளவு நாட்களாய் இந்த நச்சு சொற்களை சேகரித்து "நாகமணி" ஆக்கிவைத்திருப்பான். இப்படி அனைவரையும் நச்சு சொற்களால் கொல்வதுதான் கர்ணனின் விடுதலையா? .நாக அஸ்திரத்தின் இருள்.

ஸ்டீபன் ராஜ்