Monday, March 25, 2019

நிறைவு



அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடலின் நிறைவு அத்தியாயம்  படித்துமுடித்ததும் " இவ்வளவு சீக்கிரமாக முடிந்துவிட்டதா?" என்ற எண்ணமே எழுந்தது.  பதினைத்து யுகங்களின் வரலாறு. பதினைத்து நாடகங்கள். சஞ்சயன் கூற்றின் படி படைவீரர்கள் இறந்த உடலின் மீது நடப்பதை எண்ணினால் தலை சுற்றுகிறது.. எனக்கு  இறந்த உடலை அது எவ்வளவு மனதுக்கு நெருக்கமானவராக இருந்தாலும்  தொடுவதற்கு ஒரு மாதிரி இருக்கும். அது என்னவகை உணர்ச்சி என்று ஓரோர் துஷ்டி வீட்டிலும் நின்று எனக்குள் ஆராய்ந்து கொண்டிருப்பேன். படைவீரர்கள் அப்படி நடனம் ஆடுவது ஏனோ எனக்கு ரஷ்யாவில் ஜார் மன்னரின் ஆட்சி வீழ்த்தபட்டதும் பிறகு ஜனங்கள், புரட்சியாளர்கள் அவர்களின் நாய்களை கூட விட்டுவைக்காமல் வெறிபிடித்து ஆடியதுபோல் இருக்கிறது. வேட்டைக்கு போகும் ஆயிரமாயிரம் சுடலைமாடன்கள் போல.

ஏகாக்க்ஷர் கூற்றாய் ....கர்ணன் படைத்தலைமை கொள்ள சகுனியும் துரியோதனனும் முடிவெடுக்க கர்ணனும் ஒத்துகொள்கிறான். ஆனால் மற்ற யாரின் சப்தமும் இல்லையே ஏன்? கம்னியூஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ கூட்டம் போலவே இருக்கிறது. 

பார்பாரிகன் கூற்றாய் ......பீஷ்மரிடம் கர்ணன் ஆசீர்வாதம் வாங்குகிறார். ஆனால் அவர் " துரோணர்" என ஏன் கூறுகிறார்?


அரவானின் கூற்றாய்.......கர்ணனுக்குள் வாழும்  அவனை வழிநடத்தும் நாகங்கள் கூறப்படுகிறது. ....கர்ணன் படைத்தலைமை நடத்த தயாராகி விட்டான்.  ஜெயமோகன் சார், வெண்முரசு நவீன நாவல் என்பதினால் கேட்கிறேன் .... மார்க்ஸிசம்  ஒரு வேதம்போல் உலகை ஆட்டிப்படைத்த காலம் இந்த பூமியில் இருந்திருக்கிறது. கண்டிப்பாய் அதன் விதை மகாபாரதம் எழுதபட்டகாலத்தில் இருந்திருக்கும். வணிகம் பற்றி வெண்முரசில் விரிவாய் இருக்கிறது. உற்பத்தி, சுங்கம், வணிகம் என்று நிறைய இடங்களில் வருகிறது. மார்க்ஸிசம் பற்றி வெண்முரசில் இருக்கிறதா? இல்லை என்றால் இனி வருமா

ஸ்டிபன்ராஜ் குலசேகரன்