Sunday, March 3, 2019

மாற்றம்அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடலின் 67ம் அத்தியாயத்தை படிக்கும் போது தோன்றியது , மலை மக்களாய் இருந்து ஷத்ரியர் ஆக கொஞ்சம் முன்காலை வைத்த பால்ஹிக குடிகளே  குருஷேத்ரதுக்குள் இருக்கும்போது தமிழ், மலையாள அரசர்கள் என்று எவரும் இல்லையா? இல்லை இப்போதே பாரத்தின் மைய நிலத்திற்கும்  தமிழ் குடிகளுக்கும்  பெரிய தொடர்பு இல்லாமல் இருக்கும் போது அன்று இன்னும் அதிகமாக இடைவெளி  இருந்திருக்க கூடும்.ஆனாலும் "கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி  மூத்த குடி " ஆதலினால் நிறைய வட்டசெயலாளர்கள் மட்டும் இருந்து பெரிய சாம்ராஜயம் இருக்கவில்லையா?  ஏன் கேட்கிறேன் என்றால் தமிழ்  பத்தாயிரம்  வருடம் முன் தோன்றியதாக  வரலாறு  கூறப்படுகிறது . மகாபாரதம் 3000வருடத்திற்கு முன் நடந்ததுதானே?  இல்லை பால்ஹிகர் போல் ஒரு ரத்த பந்தம் இல்லாததினால் சாத்தியம் இல்லாமல் போய்விட்டதா?  செந்நா வேங்கை 16ம் அத்தியாயத்தில் பூரிசிரவசின் மனைவிகள் போருக்கு தங்கள் மைந்தரை அனுப்பமாட்டோம் என கூறும்போது அவர்களுக்கு பதில் மொழியாய் "நீங்கள் மணமுடித்து இங்கு வரும்போதே  அங்கு எந்நிலையிலும் போர்வெடிக்கும் என்ற நிலையே இருந்தது. ஆனால் நீங்கள் இந்த ஆடையணிகளை, அரண்மனையை, செல்லுமிடமெல்லாம் அரசி எனும் மதிப்பை, ஏவலரின் வணக்கத்தை, காவலரின் சூழ்கையை, அவையனைத்திற்கும் மேலாக பிற தொல்குடிப்பெண்கள் மீதெழும் தலையை விழைந்தீர்கள். அதில் திளைத்தீர்கள். இன்று அதற்கு விலைகொடுக்க வேண்டுமென்று வருகையில் தயங்குகிறீர்கள். நன்று, இது மலைக்குடியின் சிறுமையென்று எடுத்துக்கொள்கிறேன். ஷத்ரியப் பெண்டிர் எவரும் இதை செய்யமாட்டார்கள். ஏனெனில் பெறுவதனைத்தும் களத்தில் கொடுப்பதற்கே என்று சொல்லிச் சொல்லி அவர்கள் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள்” என கூறுகிறான். ஆனால் தமிழ் நிலத்து பெண்கள் புலியை முறத்தாலே துரத்தியவர்கள். ஆகையால் பெண்கள் தடுத்திருக்கவும் வாய்ப்பில்லை.

குருஷேத்ரம் மாபெரும் யட்சிதான் போல.  பால்ஹிக நாட்டில் ஏழடுக்கு மாளிகையில் வசித்த பூரி அதை விட்டுவிட்டு யட்சியை காண வருகிறான். அதற்கு முன் அவள் குடித்த ரத்தத்திற்கு பழிவாங்க தந்தையோடு செல்கிறான். திரிகரனுக்கு மறுப்பாய்  பூரி  “உத்தண்டர் கூறியதே சரி என நான் எண்ணுகிறேன். இது நம் போர் அல்ல. நமது அறங்கள் எதற்கும் இங்கு இடமில்லை. இவர்களிடம் நாம் எந்த நெறியையும் எதிர்பார்த்திருக்கலாகாது. நமது பிழைக்காக இவர்கள்மேல் வஞ்சம்கொள்வதில் பொருளில்லை” என்றான். “மேலும் இவர்கள் நீர்ப்பாசி என நோக்க நோக்க பெருகிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களுடன் வஞ்சம் கொண்டால் நாமும் அவ்வண்ணமே பெருகவேண்டும். நாம் மலைமக்கள், அவ்வாறு பெருகுபவர்கள் அல்ல. அங்கே மலைமுடியில் காலம் மிக மெல்லவே ஒழுகுகிறது. ஒவ்வொன்றும் மாற்றமின்மையில் உறைகின்றன. நாம் அங்கு வாழ்வோம். நம் பிழைக்கு இரு இளவரசர்களை அளித்தோம் என்றே கொள்வோம்” என்கிறான். ஆனால் சோமதத்தர் ஆணை என கூறியவுடன் அடிபணிந்து செல்கிறான்.அப்போதே தெரிகிறது மலை குடிகளுக்கும் ஷத்ரியர்களுக்குமான குணத்தின் இடையில் ஊசலாடுகிறார்கள் என. இதுவும் உலகம் இருக்கும் வரைக்கும் இருக்கும் என நினைக்கிறேன். நடுத்தர குடிகள்   உயர்தர குடிகளை போல் பாவனை செய்து மால்களில் சுற்றி வருவதை பார்க்கும்போது இது தோன்றும். ஆனால் இப்போது விளங்குகிறது.

கடைசி வரியான "தந்தை கொண்ட அந்த உவகையை எப்போது துயரென்றும் வஞ்சமென்றும் மாற்றிக்கொண்டன தெய்வங்கள்? அவற்றின் கணக்குகள் என்ன?" என்ற வரிதான்  திகைக்க வைத்து  ஏன்? ஏன்? என எண்ணவைத்தது. மகன் தன்னை விட ஒரு அடி  முன் செல்வது எங்கோயோ வெறி ஏற்றுகிறதா?  அப்போது ஒரொரு வீடும் குருஷேத்ரம் தான்.

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்