Thursday, March 21, 2019

துகளறு தெய்வம்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணாவுக்கு,

நலம் விழைகிறேன். கார் கடலின் கரையில்  நெருப்புக் குமிழ்கள் வெடிக்கும் குருதியலைகளால், சிவப்பேறிய ஒரு மணற்துகளின் நிலைமை என ஆகியிருக்கிறேன். யுகப்புருஷர்களின் கயமைகளில்  நிகழும் ஊழிப் போர்த்தருணங்கள், நடுங்கும் மன ஆழங்களில் விதிர்ப்பை விதைக்கின்றன. வன்மமைந்த நாகக் கணைகளும், அண்டம் வெடிக்கும் அஸ்த்திரங்களும், யானையின், குதிரையின், எண்ணற்ற வீரர்களின் குருதியருந்தி தாகம் தீர்க்கின்றன. 

தன் குருதி பந்தத்தின் உயிரரருக்க, உள்ளன்பு தரும் சலிப்பிலிருந்து நீங்க, வஞ்சினம் உரைத்து அகத்தில் கோபத்தீ எழுப்பும் போர்வீரரின் சொற்கள், உண்மையில் ஒரு களத்தில் நிற்கும் உணர்வைத் தருகின்றன.

அவ்வப்போது, இதை எழுதும் உங்கள் உளநிலை எப்படியிருக்கும் என்று எண்ணிப்பாராமல் இருந்ததில்லை.

இத்தனை காரிருள் சூழ்ந்து, கொந்தளிக்கும் கடலின் அடியாழத்தில் நிகழும் இப்போரின் நிகழ்வுகளில், அவ்வப்போது பிரகாசிக்கும்  ஒளிக்கற்றையாய் "இளைய யாதவரின்" சொற்கள், நங்கூரத்தின் திடக்கயிறென நீள்கிறது. மூச்சுத்திணறும் பாண்டவர் அக்கயிற் பிடித்து, பரப்பின் மீது வந்து உயிர்வளி நிரப்பி, போராழத்தின் இருளை எதிர்கொள்ள மீண்டும் செல்கின்றனர்.

வெண்முரசின் இளைய யாதவர் எந்தவொரு தருணத்திலும் கடவுள் என்று உயர்ந்தேத்தப் படவில்லை. அவரின் சொற்கள் வழியேவே அக்கடவுள் தருணத்தை நாமடைகிறோம். ஒரு உன்னத காவியத்தின் ஒப்பற்ற இலக்கிய ஆசானாக நாங்கள் உங்களைக் கண்டடைவது இத்தகைய தருணங்களில் தான். 

மிகப் பேராச்சரியமாக கௌர வர்களின் நிரையில் துரியோதனன் மொழிகளில் ஒப்பற்ற சொற்கள் அமைகின்றன. தொடர்ந்து படித்து வரும் நம் வெண்முரசு வாசகர்கள் துரியோதனன் ஒப்பற்ற ஆத்மா என்பதை நிச்சயம் அறிந்திருப்பர்.

இன்றைய கார் கடல் அத்தியாயத்தின் இறுதிக்கூற்றாக இளைய யாதவர் கூறும், "“உமிழ்வனவற்றை நாம் அகற்றிவிடுகிறோம்” என்றபின் வாய்விட்டு நகைத்து “தெய்வங்களுக்கு முன்னால்தான் மானுடர் மிகச்சிறப்பாக நடிக்கிறார்கள்” என்ற தருணம் மேற்சொன்ன படி நிகழ்ந்த ஒப்பற்ற தருணம்.


போரில் இருளெனப் பெருகும் கீழ்மைக் கணங்களை எழுதிவரும் போது,இப்படி ஒரு இறைவாக்கியம் எழுத எப்படிப்பட்ட ஒரு பண்பட்ட  மனம் அமைந்திருக்க வேண்டும்? 

மீண்டும் வணங்குகிறேன். 

பேரன்பும் பெரு நன்றியும்,
சங்கர் கிருஷ்ணன்.
புதுச்சேரி 

பின்குறிப்பு: வெண் முரசில் இளைய யாதவர் உரைக்கும் இறைக்கருத்துக்கள்  தனிப் புத்தகமாக வரும் என்ற நம்பிக்கையோடிருக்கிறேன். தமிழில் வழங்கப்படும்  ஒப்பற்ற கீதையாக அப்புத்தகம் யுக யுகங்களாய் திகழும்.