அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
கார்கடல் 62. இரவு போருக்கு யுதிஷ்டிரர் ஒப்புக்கொண்டு விட்டார். இளைய யாதவர் சம்மதம் தந்துவிட்டார். அது அறமீறல் அல்லவா? என்று ஒரு கேள்வி எழ அது அவ்வாறல்ல இதுவரை பகலில் இரவின் மனிதர்களை எதிரிட்டு போர் செய்ததன் அறமின்மை காட்டப்பட்டு இங்கு இரவில் போர் என்று நீதியின் தட்டுகள் சமன் செய்யப்படுகிறது. அவர்கள் மனிதருடன் பெரும்போர்கள் நிகழ்த்தியிராதவர்கள், விலங்குகளை மட்டுமே தேவைக்கும் தற்காப்பிற்கும் வேட்டையாடியவர்கள். அவற்றையும் கொன்றதற்காக வருந்துபவர்கள்
இரவுக்குள் என்று கூறப்பட்டாலும் எங்காவது போரில் பகல் வெளிப்படுமா என்று பார்த்தால் அத்தியாயம் முழுவதிலும் எங்கும் இரவு நீங்காமல் நிகழ்ந்தது. இசைஞானி இளையராஜாவின் இசையில் ஒரு பாடல், அதன் இரவைக் குறிக்கும் சொற்களை நீக்கிவிட்டாலும் அதன் இசை மட்டுமே இரவை அனுபவத்தில் கொண்டு வரும் அதிசயத்தை வியந்திருக்கிறேன். இங்கு சொற்களால், வெறும் நினைக்கச் செய்வதாக அல்ல, இரவின் போர் சொந்த அனுபவமாக ஆனதுகொண்டு வியந்தேன். பகலில் ஏராளமானவை கண்முன் கிடைக்க எது தேவை எது தேவையற்றது என்ன செய்யவேண்டும் என்று தேர்வதற்கு இருள் எப்போதும் தேவைப்படுகிறது.
இரவில் வாணவேடிக்கை கண்டு களிக்கும் சிறுவனது குதூகலத்தைத் தந்தது இந்த வரிகள் வானில் பறந்து நீண்ட நேரம் வண்ணச்சிதறல்கள் காட்டி, மழைபோல் பொழிந்து, விரைந்து கோலமிட்டு கலைத்து, ஒளியின் நடனம் என்று.
"தேர்மகுடங்களின்மேல் விண்ணிலிருந்து பெரும்பாறைகள் உதிர்வதுபோல் இறங்கி அவ்விசையிலேயே கதைகளால் அடித்து உடைத்து சிதர்களாக தெறிக்கச் செய்து, வில்லேந்திய வீரர்களையும் மழுவும் கதையும் பாசமும் ஏந்திய மல்லர்களையும் தலையுடைத்தும் உடல் சிதைத்தும் கொன்று, என்ன நிகழ்கிறது என்று அவர்கள் உணர்ந்து ஒருங்கிணைத்துக் கொள்வதற்குள் மீண்டும் கழை பற்றி ஏறி தன்னை தெறிக்கச்செய்து மையநிலைக்கே மீண்டு, ஒருவரோடொருவர் ஒலியிலா ஒற்றைச்சொல்லில் மீண்டு வந்ததை அறிவித்து, மறுபடியும் நாற்புறமும் தங்களை எய்துகொண்டனர் இடும்பர்"
இன்னொன்று - உடைக்கும் கதை, துளைக்கும் அம்பு, ஈட்டி, வேல் இவையல்லாமல் வாள் போருக்கு உரிய கருவியே அல்ல என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது கார்கடல். அது வெறும் பூசனைகளில் விலங்குகளை பலியிட, குற்றம் புரிந்தவர்களுக்கு அரச தண்டனையின், அரசின் குறியீட்டு முக்கியத்துவம் கொண்டது என்று தோன்றுகிறது. மொத்தமொத்தமாக உடைத்து நொறுக்கி கதை கொண்டு செல்லமுடிகிறது. ஏராளமாக துளைகள் இட முடிகிறது. வில்-அம்புகளின் கலியுக வடிவமான மிஷின் கன்கள் அதிவிரைவில் சல்லடை இடுகின்றன. வாளுக்கு அந்த பரிணாம வளர்ச்சி உண்டா? வாட்களின் பெருமை பேசுபவர்களே கொண்டு செல்லுங்கள் உங்கள் வாட்களை, சென்று கிடாவெட்டும் பூசாரிக்குக் கொடுங்கள் அல்லது பழையராஜாவின் வரலாற்றுப் பெருமைக்கு என கொடுங்கள் அல்லது அதன் நவீன வடிவம் சா மில்லில் மரம் வெட்டும் எந்திரம் என்று பெருமைகொள்ளுங்கள்.
"நின்ற இடத்திலேயே கரைந்து எதிர்ப்புறத்தில் அவன் தோன்றினான். அவன் அறைகள் ஒவ்வொன்றும் சூழ்ந்திருந்தோர் காதுமடல்களை குளிரச்செய்யும் காற்றுவிசை கொண்டிருந்தன."
"காதுமடல்களை குளிரச்செய்யும் காற்றுவிசை" நல்லதொரு அடிவாங்கிய இன்பத்தை அளித்தது. இருட்கடலின் ஆழத்தில் மௌனமான அல்ல ஒலிகுறைக்கப்பட்ட நல்ல அடி.
அன்புடன்
விக்ரம்
கோவை