அன்புள்ள ஜெயமோகன் சார்,
குந்தி கடோதகஜனுக்கு ஏன் ஜோசியம் பார்க்கிறாள் ? முதலில் ஏன் அவள் ஜோசியம் பார்க்கிறாள் ? .... நான் தொழில் செய்ய திருப்பூர், ஈரோடு பண முதலைகளை அணுகிய போதெல்லாம் அவர்கள் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு கடைசியில் உங்க ஜாதகத்தை கொடுங்க என்று கேட்பார்கள். முதல் தடவை ஒருவர் கேட்டபோது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏன் என்றால் எனக்கு பிறந்த தேதி, நேரம் எதுவும் தெரியாது. நண்பன் ஒருவனின் ஆலோசனை படி எல்லா கட்டங்களும் சரியாய் இருக்கும்படி 40 ரூபாய் கொடுத்து கம்பியூட்டர் சென்டரில் எடுத்து கொடுக்க ஆரம்பித்து அதுவே இப்போது வரை வழக்கம். ஆனால் எதுவும் நடந்தபாடில்லை. அப்படி கொடுத்த பலபேர்களில் ஒருவரிடம் ஜாதகம் என்ன சொல்லிச்சு என கேட்க அவர் கூறினார் " எனக்கு தொழிலில் வெற்றி கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..ஆனால் அதற்கு சிலவற்றை விலையாக கொடுத்தே ஆகவேண்டும் ...அது உனது கட்டத்தில் இல்லை, நான் விலை கொடுக்கமுடியாது அதுதான் யோசிக்கிறேன்" என கூற தூக்கி வாரிபோட்டது. குந்திக்கு வெற்றி கிடைத்துவிடும் என்பதில் சந்தேகமே இருந்திருக்காது. மருமகன் கிருஷ்ணன் இருக்கிறான், தர்மர் பாரதவர்ஷத்தை ஆள்வான் என்று அவன் பிறந்தபோதே எழுதபட்ட அவனின் ஜாதகம், பாஞ்சாலியின் ஜாதகம் எல்லாம் கையில் இருக்கிறது. ஆனால் அதற்கான விலை என்ன ? என்பதில் தான் அவளின் தேடல் இருந்திருக்கும். ஆதலால் அடுத்த தலைமுறை மைந்தர்களின் ஜாதகத்தை ஆராய்கிறாள். கடோத்கஜன் முதல் பேரன். அவன் வீழ்வதில் இருந்து ஆரம்பிக்க,பீமன் உள்நுழைந்து "“எவர் களம்பட்டாலும் குடி முற்றழிந்தாலும் இப்போரிலிருந்து பின்னடையமாட்டீர்கள். எனில் இதை எதற்காக பார்க்கிறீர்கள்? ஐயம் வேண்டாம், இப்போருக்குப் பின் நீங்கள் உயிருடன் இருப்பீர்கள். எண்ணிய வெற்றியை அடைந்து அதில் திளைப்பீர்கள்” அதற்கான விலையாக கொடுக்கும் குருதியையும் கண்ணீரையும் கணக்கில் எடுக்க வேண்டாம் என்கிறான். அவனுக்கும் தெரிந்திருக்கிறது.
வெண்முரசு பீமனின் உடம்பை வர்ணிக்கும்போது எல்லாம் அவன் கால்கள் சிறிதாய் இருக்கும் என்று கூறுகிறது. ஆதலால் தனது மைந்தனின் கால்கள் குறித்து கவலை கொள்வதில் வியப்பு ஏதும் இல்லை. ஆனால் தர்மர் அனைவரின் ஜாதகத்தையும் பார்த்துவிட்டுத்தான் வந்திருப்பார் என சுதசோமன் கூறும்போது அபிமன்யுவின் மரணம் மனதுக்குள் மின்னியது. தொடையில் பலவீனமானவனின் ஜாதகமும் மனப்பாடமாய் அவருக்கு தெரிந்திருக்கும்
ஸ்டீபன்ராஜ்