Sunday, March 17, 2019

தனிமைஅன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடலின் 53ம் அத்தியாத்தில் பார்பாரிகனின் கூற்றாக தனிமை பற்றி வரும் இந்த  பத்திகளை நான் எங்கும் எப்போதும் சுமந்து கொண்டே திரிகிறேன்...சந்திக்கும் அனைவரிடமும் "தனிமை " உங்களுக்கு உண்டா ? என விசாரிக்கிறேன் . அவரவர் புரிதலுக்கு தக்கபடி பதில் கூற எனது புரிதலை விளக்கி அவர்களிடம் கேட்க அவர்கள் திடுக்கிடுகிறார்கள்...அல்லது மவுனம் காக்கிறார்கள்.சிலர் போனை எடுப்பதும் இல்லை.  உண்மையில் மனிதர்கள் அத்தனை தனித்தவர்களா? இல்லை நான் தான் இப்படி இருக்கிறேனா?பூரிசிரவசின் வாழ்வின் முன்னோட்டமாய் கூறும் இந்த வரிகள் ............................வெண்முரசில் பீஷ்ம, கிருஷ்ண தனிமைக்கு  அடுத்து மிகவும் பாதித்தது.

தனிமை என்றால் என்ன என ? வெண்முரசு கூறுவது  "தனிமை நம்மிலிருந்து எழுந்து நமது இயல்புகள் அனைத்தையும் தானும் அடைந்து நம் பேருருவாகவே மாறிவிட்டிருப்பது. ஒரு போதும் நம்மால் அதை வெல்ல இயலாது.நம்மை அதற்கு முற்றளிக்கலாம். அதன் காலடியில் தலை வைத்து ஓங்கிய கொலைவாளுக்கு கழுத்தை காட்டி ‘எந்தையே, இதோ என் கொடை’ எனலாம். முற்றளித்தவரை அது தன் உள்ளங்கைகளில் ஏந்திக்கொள்கிறது. ‘நீ என் மைந்தன்!’ என்கிறது. ‘உனக்கு அனைத்தையும் அளிப்பேன்’ என்கிறது. பல்லாயிரம் கைவிரித்து பெரும் படைக்கலங்களை ஏந்தி உடன் நிற்கிறது. நமக்கென களம் காண்கிறது. நம் எதிரிகளிடம் அச்சத்தை உருவாக்குகிறது. நமக்கு அணுக்கமானவரை நம்மேல் உளம் திரியச்செய்கிறது" 

தனிமையின் தன்மை யாக ....."அன்னையென கனிவது அது. தந்தையென நம்மை காப்பது. தோழன் என உடனிருப்பது. நாம் விழைவதனைத்தையும் அளிக்கிறது. எண்ணம் செல்லும் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்கெனவே சென்று நின்றிருக்கிறது. ஒவ்வொன்றையும் அள்ளி நம் முன்வைத்து ‘இதோ! இதோ!’ என்கிறது. அதன்பின் நம்மிடம் வினவுகிறது ‘இன்னும் என்ன? இன்னும் எதுவரை?’ எண்ணி ஏங்கி இறைஞ்சுகிறோம், திரும்பிவிடவேண்டும் என்று. நாம் அளித்தவற்றில் ஒரு துளியேனும் திரும்ப வேண்டும் என்று. நான் என எஞ்சும் ஒரு சிறு பகுதியையாவது. புன்னகையுடன் ‘கொண்டவற்றை கொடுப்பதில்லை தெய்வங்கள்’ என்று அது சொல்கிறது. ‘கால வடிவானவை தெய்வங்கள், அறிக!’ என்று நகைக்கிறது என்று தனிமையின் தன்மைக்கு  இப்படி ஒரு விளக்கம் அளிக்கமுடியுமா ? என்பதே நெஞ்சில் கடைசலை ஏற்படுத்துகிறது. 

தனித்தவர்களை குறித்து "பேருருக்கொண்டவர்கள் தனித்தவர்கள். பெருங்கொடை பெற்றவர்கள் தனிமையால் நோயுற்றவர்கள். தெய்வஅருள் பெற்றவர்கள் தங்கள் வாழ்விடங்களைவிட பெரிதானவர்கள். ஆகவே புதுநிலம் தேடுபவர்கள். அடைந்தவற்றைவிட விரிந்தவர்கள். ஆகவே புதியவற்றை அறிபவர்கள். குருதிச்சுற்றத்திலும் குலப்பெருக்கிலும் விழாக்களத்திலும்கூட தனித்தவர்கள். தனித்தவர்கள் நோயுற்றவர்கள். நோயுற்றவர்கள் நோயுற்றவர்களுடன் மோதும் ஒரு பெரும் நோய்க்களம் இப்புவி. பசியற்றவர்கள் உண்ண முடியாதவர்களைக் கொன்று அங்கே வெறியாடுகிறார்கள். பெருந்தனிமைகள் சுழல்காற்றுகள்போல் இந்தப் பெருநிலமெங்கும் அலைந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றையும் அள்ளி இடம் மாற்றுகின்றன. எழுப்பப்பட்டவற்றை இடிக்கின்றன. இடிபாடுகளை அள்ளிக்குவித்து கோபுரங்களாக்குகின்றன. பெருந்தனிமைகள் கொண்டு இப்புவியில் நாற்களம் ஆடுகின்றது ஊழ் 
தனிமனிதர்கள் தங்கள் தனிமையை கண்டுகொண்டு வளரும் விதத்தை வளர்ந்து மரமானபின் பார்த்து மிரள்வதை அல்லது அடங்குவதை  " தன் தனிமை ஒரு நற்கொடை என எண்ணுகிறார்கள் இளமைந்தர். தான் தான் என தருக்கி நிமிர அதுவே வழிகோலுகிறது. பிறரை அப்பால் நின்று நோக்க, இளிவரல் கொள்ள, முற்றொதுக்கி தங்களுக்குள் ஆழ, தங்கள் ஆழங்களிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து நோக்கி ‘ஆம், இதுவும் நான்!’ என்று பெருமிதம் கொள்ள அவர்களுக்கு அது வாய்ப்பளிக்கிறது. பின்னர் அத்தனிமை தன் ஆயிரம் கைகளால் தன்னைச் சூழ்ந்து கவ்விக்கொண்டிருப்பதை உணர்கிறார்கள். அதிலிருந்து மீள தன்னால் இயலாதோ என்று ஐயுற்ற பின் தன் வாயில்களில் ஒன்றை மெல்ல திறக்கிறார்கள். அதனூடாக ஐயத்துடன், தயக்கத்துடன் வெளியே எட்டிப்பார்த்து ‘இங்குளேன்’ என்கிறார்கள். ‘அங்கெவர்?’ என வினவுகிறார்கள். ‘வருக!’ என கைகாட்டுகிறார்கள். ‘அருகணைக!’ என்று கூவுகிறார்கள். ‘எவர் அங்கே? எங்கிருக்கிறீர்?’ என்று கதறுகிறார்கள். ‘எவரேனும் இருக்கிறீர்களா?’ என்று உளம் விம்முகிறார்கள்.எவருமில்லை என அறிந்து அகம் கரைந்து விழிநீர் சிந்துகிறார்கள். எவருமில்லையே என வஞ்சம் கொண்டு பற்களைக் கடித்து மீண்டும் தங்களை இறுக்கிக்கொள்கிறார்கள். எவரும் தேவையில்லை என்று வீம்பு கொண்டு மீண்டும் தருக்கி எழுகிறார்கள். எவருமற்றவன் நான் என்று தனக்கே சொல்லிக்கொள்கிறார்கள். அதை ஊழ்க நுண்சொல்லென ஓராயிரம் முறை உரைத்து பெருகி எழுகிறார்கள். எவருமற்றவனாகிய நான் எனும் சொல்லிலிருந்து எவருக்குமற்றவன் நான் என சென்றடைகிறார்கள். ஏதுமற்றவனாக ஆகிறார்கள். பிற அனைவரையும் ஆக்கி புரந்து அழிப்பவன் என்று தன்னை சமைத்துக்கொள்கிறார்கள்" என்று வாசிக்கும் போது .... சிறுவயது ஞாபகங்கள் ...அசட்டுத்தனங்கள் எல்லாம் வந்து வந்து செல்கிறது. 
மாமானிடர்கள்,அவர்களின் தனிமையின் தேவதை பற்றி அடுத்து இன்னும் வெண்முரசில் இருக்கிறது.அதை வாசிக்கும்போது கிறிஸ்து " என் தேவனே என்னை ஏன் கைவிட்டீர் " என்று கதறியதின் அர்த்தம் புரிகிறது. அரசியல்வாதிகள், மேம்போக்கான நடிகர்கள் தவிர  தமிழகத்தை கட்டி எழுப்பியவர்கள் இன்னும் தனித்தவர்களாகதானே இருக்கிறார்கள்.பொது சமுகத்திற்கு அவ்வளவு பயமா? பாரதியை ஏன் விலக்கினார்கள் என்றும் காந்தியை ஏன் இப்போதும் விலக்குகிறார்கள் என்றும் புரிகிறது.அந்த தனி வாழ்வுக்கு எல்லாம் நான் இல்லை.  
ஜெயமோகன் சார், தனிமையை தவிர்க்க எப்போதும் இருக்கும் இந்த மனதை ரிப்பேர் பண்ண இனி"முதலில் இருந்து தொடங்கவேண்டும்" என்று எண்ணினால் நெஞ்சு நடுங்குகிறது.
ஸ்டீபன் ராஜ் குலசேகரன்