Tuesday, March 5, 2019

பெயரற்றவர்கள்




அன்புள்ள ஜெ

பூரிசிரவஸின் சாவு எதிர்பார்த்ததுதான். உண்மையில் வருத்தம் அளிக்கும் நிகழ்வு துருமனைப்போன்ற ஒருவன் சாவதுதான். அவன் அனானியான மனிதன். அவன் அந்தப்போரில்தான் அறிமுகம் ஆகிறான். வெண்முரசு தொடர்ச்சியாக ஒருபக்கம் பெரிய கதாபாத்திரங்களைச் சொல்லிக்கொண்டே செல்கிறது. இன்னொரு பக்கம் சிறிய கதாபாத்திரங்களைச் சொல்கிறது. சிறிய கதாபாத்திரங்களின் வீழ்ச்சி நமக்கு துயரத்தை அளிக்கிறது. ஆனால் நமக்குத்தெரியும் ஓர் உண்மை உண்டு. நாமேகூட இந்தச் சின்னக்கதாபாத்திரங்களை நினைவுகூரப்போவதில்லை. த்ருமனின் சாவை படித்தபோது நான் இந்நாவலுக்கு முன்னால் இதேபோல களத்தில் இறந்த சாதாரண வீரர்களின் பெயர்களை நினைவுகூர முயன்றேன். ஒன்றுகூட ஞாபகம் வரவில்லை. அவர்களுக்கு வரலாற்றில் அவ்வளவுதான் இடம். அவர்களின் சாவுகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. உண்மையும் அதுதானே? உலகப்போரில் செத்த ஒருகோடிப்பேருக்கும் எந்த அடையாளமும் இல்லை. நமது ஞாபகத்தில் இருப்பது எல்லாம் ஸ்டாலினும் ஹிட்லரும் ஐசனோவரும்தானே? வரலாறு இப்படித்தான் சென்றுகொண்டிருக்கிறது

ராஜேஷ் வைத்யநாதன்