Saturday, March 9, 2019

கதையின் அடுக்குகள்
இனிய ஜெயம் 

எப்போதும் போல நண்பர்கள் படை சூழ சிறப்பாக நிகழ்ந்தேறியது பிப்ரவரி மாத கூடுகை. கலை திகழ் காஞ்சி நிலத்தின் தொன்மை குறித்து, அங்குள்ள பழங்குடிகள் குறித்து, கோவில்கள் மற்றும் பண்பாட்டு செழுமை குறித்து, மகேந்திர வர்ம பல்லவன், மற்றும் அவர் எழுதிய மந்தவிலாசப் பிரஹசனம், அதன் தன்மை, இப்போதும் தொடரும் சாக்கியார் கூத்து மரபு, இவற்றை விரிவாக முன்வைத்து, வண்ணக்கடலின் கலை திகழ் காஞ்சி பகுதியின் அத்தனை நுட்பங்களையும் விரித்துப் பேசினார் தாமரைக்கண்ணன்.

புதிய வாசகர்கள் சிலர் வந்திருந்ததால் நான் கடந்த மாதம் பேசியவற்றை மீண்டும் சுருங்க சொல்லி 


அதன் தொடர்ச்சியாகவே பேசினேன்.  இந்த பின்நவீனத்துவ சிந்தனைகள் மேலை மரபில் ஒரு அலையாக உயர்ந்து இப்போது ஓய்ந்து விட்ட ஒன்று. ஆனால் இலக்கியத்தில் இந்த பின்நவீனத்துவ அழகியல் கூறுகள் ஆற்றச் சாத்தியம் கொண்ட சிலவை உண்டு. அவற்றை கையகப்படுத்திக் கொண்டு அவற்றை இந்திய அழகியலின் சட்டகத்துக்குள் பொறுத்தி ஒரு உலகைச் சமைக்கிறது வெண் முரசு. 

பொதுவாக இந்த பின்நவீனத்துவம் அப்டிங்கறது இன்னான்னா என்று ஆரம்பித்து  பாடப்புத்தகங்களில் பயின்றது அனைத்தயும் மனப்பாடம் செய்து , உங்கள் டூத் பேஸ்டில் உப்பு இருக்கிறதா எனும் கேள்வி போல, வெண் முரசில் பின் நவீனத்துவம் இருக்கிறதா என்று கேட்கக் கூடாது. காரணம் நான் சொன்ன சென்ற பதிவில் இருக்கிறது. மேலை மரபுக்கும்,கீழை மரபுக்கும் மிக மெல்லிய,ஆனால் முக்கியமான வேறுபாடு இருக்கிறது.  பின் நவீனத்துவம் பேசிய, ஒற்றை மைய்யத்தை மறுத்து, பன்மைத்துவத்தை முன்வைப்பது எனும் ''தீர்வு'' அவர்களின் தனித்துவமான பிரச்னையில் இருந்து எழுந்தது. அது இந்தியப் பிரச்னை அல்ல. 

உதாரணமாக மேலை பின்நவீனத்துவம் இலக்கியங்களில் பயின்று வரும் காமம், கிறிஸ்துவ ஒழுக்கவியலுக்கு மாற்றான கிரேக்க பாகனீயமதங்களின்  அடிப்படை கொண்ட காம சித்தரிப்பு.  இங்கே அப்படி கிறிஸ்துவம் உருவாக்கியதைப் போன்ற  ஒற்றை மையம் என்ற ஒன்றில்லை. உரையாடல் வழியே நிகழும் சமன்வயம் வழியே அமைந்த ஒன்று . இங்கே உள்ள மையம் என்பது 'உறைந்தது போன ஒற்றை 'அல்ல உரையாடல்கள் வழியே கொண்டும் கொடுத்தும் 'இயங்கிக்' கொண்டிருந்த ஒன்று  . இப்படி பல அடிப்படையான வேறுபாடுகள், மேலை கீழை இரண்டு மரபிலும் பின்நவீனத்துவ கூறுகளை அடையாளம் காண்பதில் உண்டு. 

இந்தப் பின்புலத்தில் வைத்து வெண் முரசு சாக்தம் எனும் மரபின் பல்வேறு உள்ளோட்டங்களை எவ்வாறு சித்தரிக்கிறது என்பதை மட்டும் தனியே எடுத்து வாசித்தால், இங்கே பின்நவீனத்துவ அழகியல் ஆற்றச் சாத்தியம் கொண்டது என்ன,அதை வெண் முரசு எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறது என்பது விளங்கும். 

அடுத்த பின்னாவீனத்துவ  கூறு பெருங்கதையாடல்கள் மீதான பகடி.  அது இந்த கலை திகழ் காஞ்சி பகுதியில், வாலி சுக்ரீவன் கதையில் எவ்வாறு தொழில்படுகிறது என்பதை, மந்தவிலாச பிரஹசனம், சாக்கியார் கூத்து இவற்றின் அடிப்படைத் தன்மைகளைக் கொண்டு, தாமரைக் கண்ணன் ரசிக்கவேண்டிய அம்சங்கள் அனைத்தயும் குறிப்பிட்டு பேசினார். 

அடுத்த கூறு சப்லைம் எனும் உன்னதமாக்கல். பின்நவீனத்துவ அழகியலின் படி, நாணயத்தின் ஒரு பகுதியாக எல்லாமே தர்க்கம் எனும் மயக்கையும், நாணயத்தின் மறு பகுதியாக எல்லாமே கனவு எனும் மயக்கையும், ஒருங்கே முயங்கி அளித்து அதன் வழியே ஒரு சப்லைம் உணர்வை அளிப்பது. 

அடுத்து வெண் முரசு கைக்கொள்ளும் சவால், பல்வேறு நூறு நூறு பன்மை  நிலை கதையாடல்கள் வழியாக ஒவ்வொரு தனித் தனி அலகையும்  பகுத்தும் விவாதித்தும் முன்சென்று அடைய முயலும் ஒரு சமன்வய முழுமைப் பார்வையை முக்கியமாக குறிப்பட வேண்டும் . 

அனைத்துக்கும் மேலாக வெண் முரசு, ''இன்றைய'' மனிதனுக்கு  உருவாக்கி அளிப்பது, ஒரு மிகப்பெரிய கனவு. இது பினவீனத்துவ காலமுங்க என ஒரு வெள்ளைத் தோல் தத்துவவாதி பாடும் மயானப் பாடலுக்கு ஜால்ரா அடிக்க வந்தவனல்ல எழுத்துக் கலைஞன்.  எந்தக் காலத்தயும் கடந்து நிற்கும்  மாபெரும் கனவுகளை உருவாக்கி அதை மானுடத்துக்குக் கையளிக்க வந்தவன் அவன். அதன் சாட்சியம் இப்போது நாம் வாசித்துக் கொண்டிருக்கும் வெண் முரசு. 

அடுத்தது நிலம். இந்த வண்ணக் கடலின் நிலம் என்னவாக இருக்கிறது? வண்ணக் கடல் நாவலின் இறுதியில் இளநாகன் குறித்த சூதர் பாடல் வருகிறது, அதாவது வியாசர் எழுதிக்கொண்டிருக்கும் காவியத்தில், சூதர்கள் சொல்லில் வாழும் அச்தினாபுரி நோக்கி, இங்கிருந்து அங்கே சென்ற இளநாகன் கதையை சொல்லும் சூதர்களின் கதை சேர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

அறிவியல் ஆதாரமே அற்ற கடல் கொண்ட தென்னாடு எனும் நிலத்தை, இலக்கியத்தில் மட்டுமே வாழும் ஒரு கற்பனை நிலத்தை, இன்றிலிருந்து மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் மகாபாரதம் நிகழ்ந்த காலத்தில் 'ஜீவித்திருந்ததாக' நிகர் புனைவு ஒன்றை புனைந்து காட்டுகிறது வண்ணக் கடல். பீஷ்மர் பார்க்கும் மொகன் ஜதாரோ ஜீவித்திருந்த காலம் நான்காயிரத்து ஐநூறு. அதன் பிறகு ஆயிரம் ஆண்டுகள் கழித்து, கைவிடப்பட்ட அந்த நிலத்தையே, பீஷ்மர் தனது பயணத்தில் காண்கிறார். 

ஜனமேயனின் காலத்தில் வியாசர் மனதில் உழன்று கொண்டிருக்கிறது இளநாகனின் கதை.  எனில் பாரதப் போர் முடித்து இரண்டு தலைமுறைகள் கடந்தது விட்ட நிலையில், இளநாகன் நிகழ்த்தும் பயணம் இது. இந்த பின்புலத்தை வகுத்துக் கொண்டால், இந்த பகுதியில் வரும் கூத்தர் வேதாந்திகள் என்று குறிப்பிட்டு சொல்லும் விமர்சனம்  விரிந்து பொருள் கொள்வதைக் காண முடியும்.

 அவை போக இந்தப் பகுதியில் மிக முக்கியமாக கவனித்து வாசிக்கவேண்டிய இடம் துரியன்  தனக்குள் இருக்கும் பெண்மையை கொல்லும் சித்தரிப்பு. இதை அடிப்படையாகக் கொண்டு வெண் முரசு நாவலுக்குள் ஒரு நெடிய பயணம் செய்ய முடியும்.  சிகண்டி தனக்குள் இருக்கும் பெண்மையை கொன்றொழித்த அதே இடத்துக்கு,அதே ஸ்தூனகர்னி  நோக்கி துரியன் தவமிருக்கிறான்.  

பீஷ்மரின் கண் முன்னால் பீமனை அடித்தே கொல்ல வேண்டும் என்ற துரியனின் வெறிக்கு துணை செய்ய, ரௌப்யை கிடைக்கிறது. இருந்தாலும் அதை புறக்கணித்து துரியன் விலகுகிறான். அதற்க்கு அவன் சொல்லும் காரணம்.இனி எனக்கு தெய்வங்கள் இல்லை என்பது. ஏன் துரியன் தெய்வங்கள் அற்றவன் ஆனான்? தனது கைகளால் ஒரு சிறு பெண் குழந்தையை கொல்ல முடிந்த எவரும் தெய்வங்கள் அற்றவர்கள்தான். கொலை வெறி கொண்டுதான் துரியன் தவம் செய்கிறான். ஆனால் ஒரு கொலை செய்வது என்பது என்ன என்பதை உணர்ந்த பிறகு அவன் வேறு வகையில் முற்றிலும் தோற்றவனாக இருக்கிறான்.  

துரியனால் இப்போது செய்ய முடிந்த கொலையை, செய்ய முடியாமல்தான் போரில் பீஷ்மர் வில் தாழ்த்துகிறார்.  தன்னை நூறு சதவீத ஆண் மகன் ஆக்கும் முயற்சியில்தான் பீஷ்மரும் இருக்கிறார். அம்பையை வெல்கிறார், பின் தனது பயணத்தில் கிராமம் ஒன்றில் கிடைக்கும் அழகியையும் மறுப்பதன் வழியே வென்று முன் செல்கிறார், எந்த பெண்ணையும் வென்ற பீஷ்மரால்,தன்னுள் உள்ள அந்த பெண் குழந்தையை வெல்ல இயல வில்லை. அங்கே தன்னுள் உள்ள பெண்மையை வெல்ல இயலா பீஷ்மர், தன்னுள் உள்ள பெண்மையை வென்ற சிகண்டி முன் தோற்று சரிகிறார். 

துரியனுக்கோ வேறு சவால்கள். அவன் தன்னுள் இருந்து எந்த பெண் வடிவை கொன்று விலக்கிநானோ,அதுவே அவன் கண் முன்னால் அவனது மகளாகவும், த்ரௌபதியாகவும் உயிர் கொண்டு உலவுகிறது.  திரௌபதி முன்னால் விழுந்தது அவமானப்பட்டு மயங்கி விழும் துரியனை,சுமந்து சென்று கர்ணன் மஞ்சத்தில் படுக்க வைக்கிறான். விளக்கை அணைக்குமுன் கர்ணன் காண்கிறான். துரியனின் கரங்களின் அருகே அவன் வேண்டாம் என மறுத்து விட்டு வந்த ரௌப்யை இருக்கிறது. துரியனே வேண்டாம் என்றாலும், அவனை விடவில்லை ஆயுதம். விதி வேறென்ன. 

முடித்த பின் முதல் கேள்வியாக,அப்போ கடைசி நாள் போர்லதான் திரும்ப துரியன் அதே சுனைக்கு போய்,இப்போ பாத்த ரௌப்யை யை எடுத்துக்கிட்டு வரான் இல்லையா  என வினவினார் திருமாவளவன்.  

இதுக்குத்தான் கதையை 'விலா வாரியாக' பிரித்தடுக்கக் கூடாது என மனத்துக்குள் எண்ணிக் கொண்டேன்.  பொதுவாக இலக்கிய அறிமுகம் அற்று நேரடியாக வெண் முரசுக்குள் வரும் வாசகர்களை முன் வைத்தே புதுவையில் நான் பேசுகிறேன். ஆகவே நான் அளிக்கும் அடிப்படைகள் அனைத்தும் பெரும்பாலும் ஜெயமோகன் அவர்களை அடியொற்றியதாகவே இருக்கும். வாசகர்கள் ஜெயமோகன் எழுதும் வெண் முரசை நோக்கித்தான் உள்ளே வருகிறார்கள் என்பதை மனதில் இருத்தியே இதை செய்கிறேன். உதாரணமாக என் உரையாடலில் ஒரு பட்டு நூல் எனும் வார்த்தை வந்தால் அது ஜெயமோகனின் கட்டுரை நோக்கிய 'சுட்டி' என்றே அமையும். இப்படி நானே வகுத்துக் கொண்ட விதிமுறைகளின் படி, நிகழ்த்திய அந்த உரையாடல் அன்று வந்த புதிய நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன் . :)

கடலூர் சீனு.