Thursday, March 28, 2019

வெண்முரசும் மார்க்ஸியமும்

பிரியத்துக்குரிய நண்பர்  ஸ்டீபன்ராஜ் குலசேகரன் அவர்கட்கு,

வெண்முரசு விவாதங்கள் தளத்தில் நிறைவு எனும் தலைப்பிலான உங்களின் பதிவில் வெண்முரசு எனும் புனைவுக்  களத்துக்குள் மார்க்சிய தத்துவம்  சார்ந்த வினா ஒன்றை எழுப்பி இருந்தீர்கள்.

மிக விரிவான பதிலைக் கோரும் கேள்வி ஆனால் வெண்முரசு எனும் புனைவுக்குள் அதை நீங்கள் கண்டடைவதே 'புறவயமாக ;அதன் கூறுகளை சுட்டிக் காட்டி அறிவதை விட மேலான அனுபவமாக இருக்கும். 

முதல் கட்டமாக நீங்கள் வாசிக்க வேண்டியது, ஜெயமோகனின் இந்த ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூலில்[கிழக்கு பதிப்பகம்] , ஜோதிப் பிரகாசம் அவர்களுடன் ஜெயமோகன் நிகழ்த்திய உரையாடலை. இந்திய ஞான மரபு எனும் ஒட்டு மொத்தம்,அதில் இந்து ஞான மரபு என் இந்த நூல் மையம் கொள்ளுவதன் கூறுகள் மீதான உரையாடல் அது. அது உங்களின் இந்த வினா மீதான பல புதிய திறப்புகளை அளிக்க வல்லது. 

இரண்டாவதாக நீங்கள் வாசிக்க வேண்டியது  தர்மானந் கோசாம்பி. எழுதிய பண்டைய இந்தியா. மற்றும் எஸ் ஏ டாங்கே எழுதிய பண்டைய இந்தியா நூல் [இரண்டு நூலும் என் சி பி ஹச் ] . இந்த இரண்டு நூல்களும் மாகாபாரதம் காலம் வரையிலான இந்திய சமுதாயம்,அதன் இனக் குழுக்களின் இயக்கத்தில் , உற்பத்தி விநியோக உறவுகளின் அடித்தளத்தில், வைத்து ஒரு அரசாங்கமாக எவ்வாறு உருத்திரண்டு எழுந்தது எனும் சித்திரத்தை, மார்க்சிய வரலாற்றுப்  பொருள்முதல்வாத இயக்கத்தின் பார்வையில் விளக்குகிறது.

இன்றளவும் இந்திய வரலாற்றின் பல கூறுகளை இணைத்து பொருள்கொள்ள வழிகோலுவது மார்க்சிய வரலாற்று பார்வையே. இந்தப் பார்வை வெண்முரசில் தொழில்நுட்பமாக அன்றி, புனைவுக் களத்தின் படைப்பியக்கக் கூறுகளில் ஒன்றாக  தொழிற்பட்டிருக்கிறது.  

நேர்காணல் ஒன்றினில் ஆசிரியர் ஜெயகாந்தன், ஒரு யுக புருஷனாக கிருஷ்ணனுக்கு நிகராக மார்க்ஸை சொல்கிறார்.  அவர் சொல்லை அடித்தளமாகக் கொண்டு  வெண்முரசுக்குள் மார்க்சிய நோக்கு எனும் உங்கள் வினாவை விவாதிக்கப் புகுந்தால். முதலில் தென்படும் அடிப்படை ஒற்றுமை  மார்க்ஸுக்கும் கீதாச்சாரியனுக்கும்  இடையிலான ஒற்றுமை, டைலடிக்ஸ் எனும் முரண் இயக்கம் மற்றும் சமத்துவம். 

அதே சமயம் கீதையின் நாயகன் ஒரு விஷயத்தில் மார்க்சியத்தை விட பல படிகள் முன்னால் நிற்கிறார். அது முரண் இயக்கங்கள் இடையே அவர் மெய்ம்மை கொண்டு சுட்டிய சமன்யம்.  மார்க்ஸ்  கையாளும் துலா இரண்டு பக்க தட்டுக்கள் மட்டுமே கொண்டது. கீதையின் ஆசிரியர் கையாளும் துலாவில் பல தட்டுக்கள். அவற்றுக்கிடையே சமன்வயம் கண்டதே நீலனின் சாதனை. 

அதே போல முற்றிலும் புறவயம் கொண்ட நோக்கு என்பதாலே [அது வரலாற்று ஆய்வு என்றாலுமே கூட] மார்க்சியத்தின் பார்வைக்கு சில எல்லைகள் உண்டு. உதாரணமாக ஒரு அரிசி மூட்டையை மார்க்ஸ் சரக்காக பார்கிறார் என்றால் எந்த அடிப்படையில்? முதலில் உண்ணும் பொருளாக அரிசி மூட்டைக்கு ஒரு பயன் மதிப்பு இருக்கிறது. பயன் மதிப்பு கொண்டதாலேயே அதற்க்கு ஒரு பரிவர்த்தனை மதிப்பும் உண்டு. 

இதை அப்படியே ஒரு வைரக் கல்லுக்குப் பொருத்திப் பார்த்தால். மார்க்சியம் இதை லட்சம் மூட்டை அரசி பரிவர்த்தனைக்கான சரக்காக மட்டுமே பார்க்கும். மாறாக ஒரு வைரம் என்பது மனிதனுக்கு அது மட்டும் தானா ? 

கார்கடலின் இறுதி அத்யாயத்தில் எழுந்து வரும் அஸ்வத்தாமன் அணிந்திருக்கும் ருத்ரமணிக்கான தன்மை மீதான விவரணைகளை மட்டும் பாருங்கள்.  விழைவு.மண் விழைவு.  

இந்தக் கூறு மார்க்சிய வரலாற்று அடிப்படை உருவாக்க நோக்கில் இடம்பெறாது. ஆக மார்க்சியம் சுட்டும் வரலாற்று வளர்ச்சி,அதே சமயம் அதை கடந்து நீலன் போன்ற ஒருவர் எதை எதிர்கொண்டு கையாண்டாரோ அது, அதையும் இணைத்து முன்நகர்வதே வெண்முரசின் அழகு.

கடலூர் சீனு