அன்புள்ள ஜெயமோகன் சார்,
கார்கடலின் 80ம் அத்தியாயத்தில் அர்ஜுனனிடம் இளைய யாதவர் கேட்டார் “அவரிடம் போர்புரிவதெப்படி என்று அறிவாயா?” அர்ஜுனன் “அவருக்குள் நுழைவதற்கான சிறு பழுது ஒன்றை சென்ற முறை கண்டேன் என்று நினைக்கிறேன்” என்றான். “ ஆம் நம் எதிரியை நாம் வெல்வது நாம் அறிந்த அவருடைய சிறுமை ஒன்றினூடாகவே.ஒவ்வொரு சிறுமையும் ஒரு விரிசல்.ஒரு திறந்திட்ட வாயில். ஒரு சிறுமையினுடே பல்லாயிரம் சிறுமைகளை அம்பெய்து அம்பெய்து கண்டுபிடிக்கமுடியும் .வளைதேடும் நாகங்கள் போல் நமது சித்தம் எதிரியின் ஆளுமையில் முட்டி முட்டி தவிக்கிறது.பல்லாயிரம் அம்புகள் சென்று சென்று அறைந்து அறைந்து வீணாகி ஓன்று எப்படியோ உள்ளே செல்கிறது.அது அறிந்த வழியை பிறிதொன்று சென்று பெரிதாக்குகிறது.வழிகள் திறக்க திறக்க அவர் வீழ்ச்சியடைகிறார்.நீ நுழைவதுக்கான வழியை மட்டுமே கண்டடைந்து இருக்கிறாய்.அது நீ அவரை நீ எதிர்த்து நிற்பதற்கான ஓர் அடித்தளம் மட்டுமே.அதனூடாக களத்தில் அவர் மேல் ஓர் அம்பை நீ செலுத்த இயலும் என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனன் “ஆம்” என்றான். இளைய யாதவர் “பார்த்தா ,ஒருவரை நீ வெல்கிறாய் எனில் அதன் பொருள் அதன் பொருள் அவரைவிட ஒரு அணுவளவேனும் நீ முழுமையாய் மேலேழுந்திருக்கிறாய் என்பதே.உன் ஆசிரியரை விட நீ உயரந்தாலோழிய இக்காலத்தில் அவரை கொல்ல இயலாது என என்பதை வாசிக்கும் போது நான் என்ன செய்யவேண்டும் என்று தெரிந்து கொண்டேன். ஆனால் பல்லாயிரம் அம்புகளை எதிரியை நோக்கி விடமுடியுமா? அவ்வளவு அம்புகள் என்னிடம் இருக்கிறதா? எவ்வளவு நேரம் களத்தில் நிற்கமுடியும் ? நிற்பதற்கு என்ன செய்யவேண்டும் ? என ஒரே சஞ்சலம்.
79ம் அதிகாரத்தில் அர்ஜுனனிடம் "இதில் ஏறிக்கொள்… இந்தத் தழலே உனக்குக் கவசம்” என்றார். அவன் அதில் பாய்ந்தேறிக்கொள்ள மீண்டுமொருமுறை மண்ணை அறைந்து இடியோசை முழக்கியது முதலோன்வாளி. துரோணர் “நில்… பேடியே, நில்” என்று கூவினார். “அமர்ந்துகொள்க… அனலைக் கடந்து அந்த அம்பு வரவியலாது” என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனன் தழல்களின் நிழலில் அமர்ந்தான் என்று வருகிறது.அந்த அனல் என்ன ? அதன் நிழல் என்ன ? அந்த தழல் நிழலைத்தான் நானும் தேடிக்கொண்டு இருக்கிறேன்.பிரம்ம சூத்திரம்,அக்னி, வாருண, சாத்திரங்கள் என பல்லாயிரம் மெய்யியல் பின்னி பிணைந்து போராடும் இந்த பூமியில் எனக்கான தனலை தேடுவதும் அதில் இருந்து அனைத்தையும் தொகுத்து கொள்வதை நினைத்தால் தலையே சுற்றுகிறது. அதைதான் இளைய யாதவர் "அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களின் கொடையால் நிறைந்தவர்களே .ஆயினும் ஆசிரியர் அளிக்காத ஒன்றிலிருந்தே அவர்கள் தன்னை கண்டு எழ இயலும் .அதனூடாகவே முழுமை கொள்ளவும் கூடும். இது தவமென்று எண்ணுக என்று இளைய யாதவர் கூறுகிறார். துரோணரிடம் ஆரம்பித்த கல்வி அர்ஜுனனுக்கு இன்னும் தொடர்கிறது.
ஸ்டீபன் ராஜ் குலசேகரன்