வெண்முரசு எழுதுகையில் ஜெ முதன்மையாகச் சொன்ன ஒன்று அவருக்கே பாரதத்தில் இருக்கும் தொன்மங்களை, விடையிலா, விளக்கவியலா இடங்களை எழுதி எழுதிக் கண்டடைவது. நாவல் தொடர் இந்த அளவு பெருகி வந்திருக்கையில் அதில் பயின்று வரும் சில தொன்மங்கள் தொடர்ச்சியாக எழுதப்பட்டு எழுதப்பட்டு நீவி விடப்பட்ட பட்டு போல மிளிர்ந்து கொண்டிருப்பதைக் காணலாம். மிகச் சிறந்த உதாரணம் பாற்கடல் கடையும் தொன்மம். மற்றொன்று செய்யவளின் தவ்வை. அதே போன்ற நவீன தொன்மம் என ஆவநாழியைச் சொல்லலாம். ஆவநாழியை உள்ளத்திற்கும், ஆவங்களை சொற்களுக்கும் ஒப்புமைப் படுத்தியமை அபாரம். குறிப்பாக கார்கடல் 66 ஆம் அத்தியாயத்தில் கர்ணனும், அஸ்வத்தாமனும் முறையே சகதேவனிடமும், திருஷ்டதுய்மனிடமும் கீழ்மைச் சொற்களைப் பேசிய பிறகு உணரும் ஒழிந்த ஆவநாழி போன்ற சொல்லொலிழந்த உள்ளமும், அதன் பிறகு கொள்ளும் நிறைவும் முக்கியமானவை. அதன் பிறகே அவர்கள் இருவருமே எதிர் நின்றவரை எவ்வளவு நெருங்கி அறிந்திருக்கிறோம், அணுக்கமாக உணர்ந்திருக்கிறோம் என அறிகிறார்கள். சொற்களின் நச்சு என்பது சேர்த்து வைப்பதை விட உமிழப்பட்டு விட்ட பிறகே அணுக்கமும், பூரண விருப்பமும், சமர்ப்பணமும் சாத்தியமாகின்றன. ஆவநாழி அபாரமான தொன்மம் ஜெ!!!
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்