இனிய ஜெயம்
சாரங்கன் அவர்களின் பதிவை வாசித்தேன், அவர் சுட்டிக்காட்டிய இரண்டு தருணங்களும் மிக முக்கியமானது.
அன்று விதி வேறாக இருந்து, துரியனுக்கு பதில் பீமன் கரடி வசம் சிக்கி, துரியா துரியா என்று அபயக் குரல் எழுப்பி இருந்தால், ஒருக்கால் இந்தப் போரே நிகழாது போயிருக்கும்.
அதேதான் அர்ஜுனன் அஸ்வத்தாமன் இடையிலும் நிகழ்கிறது. அர்ஜுனன்னின் அந்த இறுதி அம்புக்கு முந்திய கணம் வரை துரோணர் யார் ? அவர் அர்ஜுனன் கூடத் தானே. மற்றொரு ஆளுமையாக அங்கே அர்ஜுனனுடன் பொறுதிக்கொண்டிருப்பது அஸ்வதாமனும் கூடத்தான்.
அஸ்வத்தாமன் முன் அர்ஜுனன் தோற்று ஓடுவது துரோணர் அஸ்வத்தாமன் இருவருக்குமே பிடித்த விஷயம் தானே.
துரோணர் அர்ஜுனன் வசம் இறுதியாக எஞ்சி இருக்கும் அம்பு எது என பார்க்க விழைகிறார்.அதிலும் பிளவாளுமை. ஒன்று அது ஆசிரியர் ஆகிய அவரை ஒரு படி கீழ் நிற்க வைப்பது. இரண்டு அப்படி ஒரு அம்பு இருந்தால் அது அந்த அம்பு அவர் மைந்தன் அஸ்வதாமனை கொல்லக் கூடியது. அர்ஜுனன் தனது மைந்தனை கொல்லக் கூடாது எனும் சொல்லை துரோணரை கேட்க வைத்த அம்பு அது . அது என்ன என்று காணாமல் துரோணரின் மனது அமைந்து விடுமா என்ன ? அந்த அம்புக்கு தன்னை இலக்காகுவதன் வழியே, தனது மைந்தனுக்கு அந்த அம்பை காட்டிக் கொடுக்கவும் துரோணரால் இயலும்.
உயிர் கொண்டு உலவும் மகன் முன் தந்தை கொள்ளும் தவிப்பை விட, உயிர் விட்ட மகனின் பொருட்டு தந்தை கொள்ளும் வஞ்சம் பல மடங்கு ஆற்றல் கொண்டது. துரோணர் அது வரை கல்லாதது. அர்ஜுனன் அக் களத்தில் கற்று அடைந்தது.
அர்ஜுனன் கையில் எஞ்சி நிற்கும் அந்த அம்பின் ஆற்றல் ஆசிரியரே ஆனாலும் துரோணர் அறியாதது. அதன் முன் துரோணர் வீழ்ந்தே அக வேண்டும். விதி.
கடலூர் சீனு