Thursday, March 14, 2019

கொல்லாதலால் வெல்லாதவர்கள்:



கடோதகஜனின் மரணம் பீமனிடமும்தருமரிடமும் ஏற்படுத்தும் கொந்தளிப்புகள் முக்கியமானவை. பீமனும் மைந்தர்களைக் கொன்றவனே. அவன் விம்மி அழும் கணம் வெண்முரசின் அருங்கணங்களில் ஒன்று. இருப்பினும் கடோதகஜனை பிலத்தில் இட்டுவிட்டு வரும் பீமன் இளைய யாதவரிடம் கர்ணனைக் கொல்ல வேண்டுமென வஞ்சினம் உரைக்க முற்படுகிறான். இது வெறும் மைந்தர் துயர் மட்டுமல்ல. அபிமன்யுவின் மரணத்தில் பீமன் இந்த அளவு கொந்தளிக்கவில்லை என்பதைக் காணலாம். இருப்பினும் கடோதகஜனுக்கு கொந்தளிக்கிறான்அவன் களம்படுவான் என நிமித்திகர்கள் மூலம் அறிந்த பிறகும் கூட!! ஏன்தன் குருதி என்றாமைந்தர்களில் தனதுபிறரது என வேறுபாடு காட்டுபவனா மந்தன்?!

இல்லை. இது மைந்தர் துயர் மட்டுமன்று!!! இதனுடன் இணைவது பீமனின் குற்ற உணர்வு. உண்மையில் பீமன் கடோதகஜனின் மறைவு அரவம்பால் கர்ணன் கையால் நிகழும் என அவன் எண்ணியிருக்கவில்லை. துரியன் கையில் இருந்திருக்கலாம் என்பதாகவே அவன் எண்ணியிருக்கக் கூடும். கர்ணன் முன் அவனைக் கொண்டு வந்து விட்டது கர்ணன் பீமனை வென்று கொண்டிருந்த தருணமே. அக்கணம் பீமன் அவன் மரணத்தை உளநடுக்கோடு கண்டு கொண்டிருந்திருப்பான். ஏனென்றால் கடோத்கஜன் கர்ணனைக் கொல்ல மாட்டான். அந்த உறுதியை அவன் நெடுங்காலம் முன்பே கடோத்கஜனிடம் பெற்றிருக்கிறான். அவனும் கர்ணனைக் கொல்வதில்லைவெல்வேன் என்று வாக்கும் அளித்திருக்கிறான். கர்ணனுடனான போரில் கடோதகஜன் அவனைக் கொல்ல முயலவே இல்லை. எனவே தான் கர்ணனால் அர்ஜுனனுக்காக என்று வைத்திருந்த அரவம்பை தேடி எடுத்து இவனைக் கொல்ல இயன்றது. அந்த வாக்குறுதி மட்டும் பெறப்படாமல் இருந்திருந்தால்நிலை ஒருவேளை வேறாகக் கூட இருந்திருக்கலாம்.

கூடவே தருமரும் கர்ணன் இறந்தாக வேண்டுமென ஆணையிடுகிறார். அவர் அறியாத எதுவும் மந்தனிடம் இருக்காது என்பதால் கடோதகஜன் செய்து கொடுத்த சொல்லுறுதியை அவர் அறிந்திருக்கவே செய்திருப்பார். எனவே தான் அந்த ஆற்றாமையால் தான் அவரும் கர்ணனுக்கு எதிராக வஞ்சினம் உரைக்கிறார். ஏனென்றால் கொல்ல இயலாதவர்கள் முற்றாக வெல்வதெப்படி?மடிவதொன்றே வழி. நாளை கர்ணனும் இவ்வாறு கொல்ல இயலாமையால் வெல்லாமல் மடியப் போகிறவன் தானே!!! அதற்குக் காரணமான சொல்லுறுதியை வாங்கியவர் மீதும் தருமரின் இக்கோபம் பாயத்தானே போகிறது!!


அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்