எழுத்தாளர் அவர்களுக்கு,
அர்ஜுனன் துரோணர் மேல் ஏவிய அந்த கடைசி அம்பை பற்றிய ஒரு கடிதம் வந்தது.
எனக்கு பட்ட பொருளை முன் வைக்கலாம் என்று இந்த கடிதம். எப்போதும் போல நான் முற்றிலும் தவறாக இருக்கலாம்... என்றால் வாசகர்களே சுட்டி காட்டட்டும்.
துரோணர் பரத்வாஜருக்கும் ஒரு வேடர் குல பெண்ணுக்கும் பிறந்தவர். தந்தையால் உபநயனம் அளித்து தன் மகன் என்று சொல்லி ஏற்க படாதவர். அதற்காக ஏங்கியவர். பின் அக்நிவேசரை அடைந்து வில்லில் தேர்ந்து, பரசுராமரை தேடி ஓடியவர். ஷாத்ரியனாகும் பொருட்டு. பின் ஷரத்வானை அடைந்தும் அவர் நிலை பெறவில்லை. துரோணரின் வாழ்கையையே இந்த பிராமணனா ஷாத்ரியனா என்ற அலைகழிப்பு என்று ஒரு வகையில் சுருக்கிக்கொள்ளலாம்.
அர்ஜுனனும் ஒரு வகையில் தந்தை அன்னை என்கிற இரு நேரடி ஆளுமைகள் இல்லாத ஒருவன் தான். ஆனால் அவன் ஒரு சிவயோகி. சரி அவ்வளவு போக வேண்டாம் என்றால் அவன் பெண்களில் கண்டதும் கடக்க வேண்டியவைகளையே. அவன் கடந்து கடந்து வென்று மேல் எழுபவன். ஒரு வகையில் அவனை மொத்தமாக இப்படியே சுருக்கி கொள்ளலாம். அவனில் ஆன் பெண் போன்ற தன்மைகளின் ஊசாலாட்டம் இருக்கிறது, ஆணால் அவைகளுமே அவனுக்கு கல்வியாகின்றன. ஆண்மை கொண்டு நிற்கவேண்டிய இடங்களையும், தன் பெண்மை கொண்டு பணிய வேண்டிய பாதங்களும் அவனுக்கு தெரிந்தே இருக்கின்றன.
அவன் தன் ஆவநாழியில் எல்லா அம்புகளும் ஒழிந்த பின்பும் துரோனாரிடம் இருந்து பெறாத ஓர் அம்பு, அவன் கண்டடைந்தது - அது தன்னை கண்டடைந்து தான்.
ஸ்வம் - தன்னையே முதன்மை யாக செலுத்த வேண்டும் குருவை வெல்ல.
ஆனால் அர்ஜுனன் அதை கொண்டு துரோணரை தாக்கும் எண்ணத்தை கை விடுகிறான். அர்ஜுனன் கடைசியில், துரோணர் தன் எல்லா ஆயுதங்களையும் கை விட்ட பின்னர், அவர் நெஞ்சத்தில் அதை செலுத்துவதும் - ஒரு உருவாகமாகவே வருகிறது.
நன்றி
வெ. ராகவ்