Wednesday, March 6, 2019

பகைமை



ஆசிரியருக்கு,
       
பெரும்பாலானவர்கள் குருஷேத்திரத்திற்கு  வரும்போதே ஏதோவொரு வஞ்சத்துடனோ அல்லது ஏதோவொன்றை பெறுவதற்கான விழைவுடனுமே வருகிறார்கள்.பூரிசிரவஸ் மட்டுமே எவர்மீதும் வஞ்சமின்றியும் பெறுவதற்கான விழைவேதுமின்றியும் பெற்றவற்றிற்கான நன்றிக்கடனிற்காக மட்டும் களம் காண்கிறான். சாத்யாகியும் இவனைப் போன்றவனே.தன் தலைவனுக்காக வருகிறான்.
    

பூரிசிரவஸ்  போரின் போக்கில் எழும் தன்னிரக்கத்திலிருந்து மீளவென சாத்யாகியின் புதல்வர்கள் பதின்மரையும் சாய்த்து சாத்யாகியிடம்  வஞ்சத்தை உருவாக்குகிறான்.
  

 நன்றிக்கடனுக்கென வந்து பழிசேர்த்து  தமையனையும்  தன்னுடன் ஆகுதியாக்கியபோது இவனுக்கென வஞ்சம்கொள்ள, சூழுரைக்க யாருமில்லை என எண்ணி  மனம் பாரமானது.தந்தையும்  பூரியும்  வந்து வஞ்சமுரைத்து வெல்லமுடியாமல்  பலியானாலும் சற்று நிறைவளித்தது.
    
 பூரிசிரவரஸ் வயதானவன் என்றாலும்  உள்ளத்தினாலோ இளந்தோற்றத்தினாலோ  அசங்கனுடனேயே  ஏதோவொரு வகையில் பொருந்தித் தோன்றுகிறான்.அசங்கனுக்காக தந்தை போரிட்டு பழிதீர்த்தார்.பூரிசிரவஸிற்காக பழிதீர்க்கப்படவில்லையானாலும்  இவர்களின் வஞ்சங்கள்  தொடராமல்  இங்கேயே தொடங்கி இங்கேயே முடிந்தது ஆறுதளிக்கிறது.
       
கா.சிவா