Saturday, March 9, 2019

போர்நிலத்தில்...
அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடலின் 70ம் அத்தியாயத்தில் துரோணரின் போர்சூழ்கையை குறித்து வெண்முரசு எகாஷ்கரரின் வழியாய் "பின்னர்தான் அவர் பாண்டவ மைந்தரை நினைவுகூர்ந்தார். முதுமையால் அவர் இளையவரை நினைவுகூர எப்போதும் பிந்தினார். ஆகவே அவர்களை எண்ணாமலேயே எல்லாச் சூழ்கைகளையும் வகுத்தார். வில்லுடன் இளையோர் எதிரில் வரும்போதுகூட அவர்கள் போருக்கெழுந்திருக்கிறார்கள் என அவர் உள்ளம் எண்ணவில்லை. அவர்களின் அம்புகளில் சில அவருடைய கணிப்புகளைக் கடந்து தாக்கி உள்ளத்தை அதிரச்செய்யும்போது மட்டுமே அவர் அவர்களை வில்லவர் என உணர்வார் " என கூறியதை வாசித்தபோது பெரும் வியப்பாய் இருந்தது.  ஏனென்றால் இது முதுமைக்கு மட்டும் என்று தோன்றவில்லை. நமக்கு கீழ் உள்ளவர்கள் என நினைக்கிறவர்களையும் " இவனால் இது முடியாது " என  முன் முடிவோடு எதிரில் நிற்பவர்களையும்  அணுகும்போது அவர்களின் விஸ்வரூபம் நிலைகுலைய வைக்கும். ஆனால் எப்போதும் இளைய தலைமுறையின் ஆற்றல் என்பது வேறு. ஏனென்றால் உலகின்  நிகழ் துடிப்பு  அது.அபிமன்யு துடித்து அடங்கியபின் இளைய பாண்டவர்கள் இருளுக்குள் அவர்கள் ஒரு  குழுவாய் சேர்ந்து கொண்டு போரிட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதே இப்போதுதான் என் உள்ளத்துக்குள் ஏறுகிறது. எனது மனம் மாபெரும் வீரர்களை மட்டும் வாசித்து மற்றவர்களை தவிர்த்து வந்திருக்கிறது. ஆனால் இது குருஷேத்ரம்.இங்கு சிறிய புறாக்கள் கூட பெரும் பணியை ஆற்றும்போது இளைய பாண்டவர்கள் மேல் கவனம் குவிக்காமல் வாசித்ததை எண்ணினால் நாணம் தான் வருகிறது. 

துரோணர் இளைய பாண்டவர்களின் தாக்குதலை  கையாளும்போது தனது வித்தை தனது மாணவர்கள் மூலம் அடுத்த தலைமுறைக்கும் கடத்தபட்டிருக்கிறது என்பதை  "அர்ஜுனன் பீமன் மாணவர்களாக இருக்கும் போது  அவர்களின் தவற்றை திருத்தி" கற்றுகொடுத்த தனது வித்தையை எண்ணி .....இப்போதும்  ஆசிரியராக  தன்னை எண்ணிக்கொண்டிருப்பதை  கண்டு மனம் குழம்பியது. "சீற்றம்கொண்டு அம்பெடுக்கையில் இருக்கும் விசை நாணிழுக்கையில் இல்லாமலாகும். அவர்களின் அம்புகள் எழுந்து தன்னை நோக்கி வருகையில் அவற்றை அறைந்து வீழ்த்தும்போதுகூட அவர்கள் ஆற்றும் பிழைகளை உள்ளம் கணக்கிடும். அரிதாக அவர்கள் பெருந்திறலுடன் வெளிப்படுகையில் மகிழ்வுறும்" என போர்க்களத்தில் நின்று கொண்டிருப்பதை பார்க்கும்போது நமக்கே அவர் மீது கடுப்பு வருகிறது.

அதே துரோணர் "தன் சூழ்கை பின்னடைய அதை சொல்லால் ஆளமுடியாததை ஒரு தருணத்தில் தன் உடலுக்கும் உள்ளத்துக்குமான தொடர்பு அற்றுப்போய்விட்டதைப் போலவே உணர்ந்தார். அது அளித்த பதற்றத்தை அவரால் கடக்கமுடியவில்லை. அந்தச் செயலின்மையில் சுருதசேனனும் சுதசோமனும் சர்வதனும் அம்புகளால் அவருடைய படைகளை அறைந்து வில்லவர்களை வீழ்த்தினர்" என வாசிக்கும்போது சொல்லை ஆள்வதற்கு என்னதான் தேவை? என்னதான் பண்ணவேண்டும் ? என மனம் சோர்வு அடைத்தது.வண்ணகடலில்  42,43,44,45,46 ,57 அத்தியாயங்களில் வெறும் சொற்கள் வழியாகவே அர்ஜுனனை பெரும் வில்வீரனாக தயார் படுத்தியவர், தனது மகன் அஸ்வத்தாமனுக்கு  அர்ஜுனனால் ஆபத்து வரும் என முன்கூட்டி அறிந்து "நாளை உன் குலத்துக்கும் உனக்கும் பெரும்பழியை அவன் அளித்தாலும்… உன் பிதாமகர்களையும் அன்னையரையும் உடன்பிறந்தாரையும் மைந்தர்களையும் உன் கண்ணெதிரே அவன் கொன்றாலும் உன் கை அவனை கொல்லக்கூடாது.”  என சரியாய் சொற்களை அளித்து சத்தியம் வாங்கியவர், பிரயாகை 5ம் அத்தியாத்தில் சரியாய்  தனது வஞ்சத்திற்கு “நான் கோரும் குருகாணிக்கை ஒன்றே. பாஞ்சால மன்னன் துருபதனை வென்று தேர்க்காலில் கட்டி இழுத்து என் காலடியில் கொண்டுவந்து போடுங்கள்” என சொற்களை அளித்தவர் இந்த  இருட்டில்  சரியான சொற்களுக்கு  தடவுகிறார். 

அபிமன்யு இறந்தபின்  பீமன் யார் அபிமன்யுவை தாமரை வியுகத்தினுள் அனுப்பியது என கேட்டு கோபப்படும்போது "யுதிஷ்டிரர் “படைசூழ்கைகளை அறிந்தவர்கள்தான் இங்கு போரிடுகிறார்களா? நான் போர்க்கலை அறியேன். நான் நெறியறிந்தவன் மட்டுமே. போர்க்கலை அறிந்தவன் அவன் என்று சூதர்கள் பாடுகிறார்கள். நான் அவனை சூதர் சொல் வழியாக மட்டுமே அறிவேன். அவனுக்கு வெளிவரத் தெரியாதென்று எனக்கு எப்படி தெரியும்?” என கேட்பதும் ஞாபகம் வந்தது.  இவ்வளவிற்கும் யுதிஷ்டிரர் சொற்களிலே வாழ்ந்தவர். 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்