Wednesday, March 27, 2019

போரின் வழிகள்அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடல் 86ம் அத்தியாத்தில் படைபிரிவினர் எப்போதும் போல் தங்களின் தலைவர்கள் தர்மம் தவற இறந்து போனவரை திட்டி தீர்க்கிறார்கள். என்ன பண்ண? அது எல்லாம் அவர்களின் வாழ்க்கைக்குள்ளே இல்லை. அது வேறு யாரோ எடுக்கும் முடிவு. இப்போது துரோணரை திட்டி தீர்க்காவிட்டால் அவர்களின் தரப்பில் இதுவரை இறந்தவர்களின் வாழ்க்கைக்கும் இனி இறக்கபோகும் தங்களின் வாழ்க்கைக்கும் என்ன பயன் என எண்ணினால் நெஞ்சே வெடித்துவிடும் அல்லவா? எனது வாழ்வில் ...நான் கண்ட...ராஜீவ் காந்தியை கொன்றபின் நிகழ்ந்தவைகளும் ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கபட்டபின் நிகழ்ந்ததும் தொகுத்தால்  படைப்பிரிவினர் திட்டுவது எல்லாம் ஒன்றும் இல்லை. உங்களின் கட்டுரையாகிய "தன்னை அறியும்கலையில் " கோர்க்கி புறவயமாய் பார்த்து தனக்குள் உள்ளே இருக்கும் ஒளியை மறைத்துக்கொண்டு ஸ்டாலினுக்கு சப்போர்ட் பண்ணிகொண்டிருந்ததை "கோர்க்கிஉண்மையை தனக்குத்தானே ஒப்புக்கொள்ள மறுத்தார். அதை என்னால் நுட்பமாக உணர முடிகிறது. அவரே உருவாக்கிய கனவு. அதன் சரிவை இல்லை என கற்பனைசெய்ய அவர் விரும்பினார். சரியாகிவிடும், இதெல்லாம் சிறு பிசிறுகள் மட்டுமே என சமாதானம் செய்துகொள்ள முயன்றார். உண்மையைக் காண்பதை அவர் கடைசி நிமிடம் வரை ஒத்திப்போட்டார்.காரணம் உண்மை அவ்வளவு கொடூரமானது. என்று எழுதி இருக்கிறீர்கள். கோர்க்கிக்கு மட்டும் அல்ல எல்லாருக்கும் உண்மை கொடூரமானதுதானே?  காந்தியின் மறைவுக்கு பின் ஏன் நேரு தனது  குடும்பத்திடம் கொஞ்சம் சாய்ந்தார் என்பதற்கும் இதுதான் காரணமாய் இருக்கலாம். 

 யுதிஷ்டிரர் “நாம் ஐவரும் ஓரிடத்தில் இருக்கவேண்டும். நம்மை அவன் தனித்தனியாக எதிர்கொள்ளக் கூடாது. நாம் இளைய யாதவன் விழிதொடும் தொலைவில் இருக்கவேண்டும்”  என ஏன் இவ்வளவு பதறுகிறார் என நினைத்தால் ஆச்சரியமாய் இருந்தது. சூதாடி அனைத்தையும் இழந்தவர். அப்போது எல்லாம் அழுது குற்றவுணர்வு கொண்டு அழுததோடு சரி. ஏனென்றால் இது யுதிஷ்டரின் கலியுகம். இங்கு என்ன நடக்கும் என அவருக்கு நன்றாகவே தெரியும். வழக்கம் போல் பீமனுக்கு ஆணை இட அவன் அதை காதிலே வாங்காதது போல் நடித்து கடுபேற்றுகிறான். அது அவனின் இயல்பு. இல்லை என்றால் துரியோதனனே பீமனின் களங்கமின்மை பற்றி புகழ்வானா? 

பாண்டவர்கள் தங்களுக்குள் பூசலிட ஆரம்பித்தாலே நெஞ்சு பதைக்க ஆரம்பிக்கிறது. ஏன் என்றால் எப்போது எல்லாம் வாக்குவாதம் செய்து தங்களுக்குள் அடித்துகொண்டு தர்மரை கடுப்பேற்றி அவரை அழவைக்கிறார்களோ  அதற்கு பிறகு அவர்கள் நான் எண்ணவே முடியாத ஒரு கொடுங்காரியத்தை செய்யபோகிறார்கள் என எனது மனது  எண்ண ஆரம்பித்துவிட்டது. உண்மையில் அவர்கள் செய்த காரியத்திற்கு பூசலிடவில்லை, அடுத்து செய்யவேண்டியதற்கு பூசலிடுகிறார்கள். பீமன் , அர்ஜுன் எல்லாம் பின்னோக்கி திரும்பி பார்க்கிறவர்களா என்ன?  அடுத்துயாரோ ?

ஆனால் எல்லாரும் ஏன் திருஷ்டத்யும்னனை ஆணிலி என கூறுகிறார்கள்? ஏன் சாத்யகி வந்ததும் சண்டைபிடிக்கிறான்?  ஒருவேளை அவன் பூரிசிரவசின் தலையை அறுத்ததற்கு குற்றவுணர்வு கொண்டு தர்மரை அடிக்கபோகிறது போல் செல்கிறானா? இல்லை இளைய யாதவரின் திருவிளையாடலா? ஸ்டீபன் ராஜ் குலசேகரன்