Sunday, March 10, 2019

மைந்தர் பலி



அன்புள்ள ஜெ,

கடோத்கஜனின் வீழ்ச்சியும் துருமசேனனின் வீழ்ச்சியும் அருகருகே வந்தன. அப்போது ஓர் எண்ணம ஏற்பட்டது. இந்த மைந்தர்கள் எவருக்கும் பெரிய பகைமையோ வஞ்சமோ கிடையாது. மிக எளிமையானவர்கள். அவர்கள் தங்கள் தந்தையருக்குக் கட்டுப்பட்டார்கள். தங்கள் தந்தையரை மதித்தார்கள். இதுதான் அவர்களின் தப்பு. அதற்காக அவர்கள் வரிசையாகக் களத்திலே உயிர்கொடுக்கிறார்கள். இது முன்னரே வெண்முரசில் வந்திருந்தது. எந்த நாவலில் என்று தெரியவில்லை. எந்தப்போராக இருந்தாலும் பலியாவது இளைஞர்கள்தான் என்று. ஆகவே பழங்குடிகள் தங்கள் மைந்தர்களில் ஒருவரை தாங்களே பலிகொடுப்பார்கள். அதன் வழியாக தாங்கள் எல்லாவற்றுக்கும் தயாராக இருப்பதை எதிரிகளுக்கு அறிவிப்பார்கள். இந்தப்போர் முழுக்க பிள்ளைகள்தான் செத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் தந்தையர் இந்தப்போர் தொடங்குவதற்கு முன்னரே இதையெல்லாம் தெரிந்திருந்தோம், தெரிந்துதான் முடிவெடுத்தோம் என்பதை அறியாதவர்கள் போல பாவலா காட்டுகிறார்கள். அறியாதவர்களாக நடந்துகொள்கிறார்கள். இதுதான் ஆச்சரியமானது. மனம் போடும் வேஷம் என்று தோன்றுகிறது. அந்தத்துக்கம் அவர்களே இழுத்துப்போட்டுக்கொண்டதுதானே?


எஸ்.சங்கர்