Sunday, March 24, 2019

அஸ்வத்தாமன்




அன்புள்ள ஜெயமோகன் சார்,

கர்கடலின் 87ம் அதிகாரம் "அஸ்வத்தாமன் அணுகி வருந்தோறும் புரவிக்கனைப்பொலி பெருகிப் பெருகி வந்தது. அது நான்குபுறங்களிலும் இருந்து எழுந்து அவர்கள் அனைவரையும் சூழ்ந்தது" என ஆரம்பிக்கிறது.  சக்ரவர்த்தி என்று அறிவித்துகொள்ளும் ஒருவன் செய்வது அஸ்வமேதயாகம்.தனது குதிரை செல்லும் இடமெல்லாம் தனது என அறிவிப்பது. அந்த ஆசையில்தான் துரோணர் குதிரையாய் தனது மகனை தேர்ந்தெடுத்து "அஸ்வத்தாமன்" என பெயரிட்டாரா? . குதிரை ஓன்று பிறக்கும்போதே ஏன்  ஒரு யானையும் அஸ்வத்தாமன் என்ற பெயரில் பிறக்கிறது?. இரண்டும் காட்டு விலங்குகள். இரண்டையும் மனிதன் போருக்கு பயன்படுத்தி இருக்கிறான். இரண்டும் காட்டின் ....காட்டு வேதம் நாட்டுக்கு வந்ததின் இரு கண்களா? அதில் ஒன்றை ஏன் அர்ஜுனன் குருடாக்கி மனிதர்கள் மேல் நம்பிக்கை இழக்கவைக்கிறான்? அதை பயன்படுத்தி மற்றொன்றை அழிக்கமுடியும் என்றால் அது என்ன ? ஏன்?

காவல் தெய்வமென திகழும், ஷாத்ர குணம் கொண்டத. மண்வெல்லும், குருதி கோரும், ஒருபோதும் விழைவடங்காத ருத்ரமணி தலை சூடி நாராயணவேதம் என்னும் அம்புகொண்டு வரும் அஸ்வத்தாமனை எப்படி காட்சி படுத்துவது என்றே தெரியவில்லை. அதற்கு எதிரில் பீலி சூடி நிற்ப்பவனையும் ,காற்றின் அதிபதியாகிய மாருதி மைந்தனையும் இணைத்து கற்பனை செய்வது இயலவே இயலவில்லை. நாராயணவேதத்தின் முன் இளையயாதவர் சரணாகதி அடைய சொல்ல பகீர் என்றது. இப்போதும் அதுதானே நாராயண வேதத்தின் இயல்பு. முதன்முதலில் கிருஷ்ணர் பணிவதை தொடங்கி வைத்ததால் தான் நாராயணின் ஒரு அவதாரமா? ...ஆனால் எல்லா வேதங்களுக்கும் எதிர்ப்பு இருப்பது போல் பீமன் நிற்கிறான். அது காற்று, உலகின் உயிர் . காட்டாள ஆத்மா. அதுவும் நம்மோடு கல்லறை வரை வருவது. சரணாகதி அடைவது அல்லது எதிர் நிற்பது ....இரண்டில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுத்து வாழும் இந்த வாழ்வில் மாபெரும் சூறைக்கு பின் வாழ்வது எல்லாம் வெறும் தற்செயல் என்றே நினைத்து இருந்தேன். கனைத்து கொண்டு வருவதற்கு முன் என்ன செய்யவேண்டும் என்ற விருப்பு வெறுப்பு அற்ற ஒரு மனமும்,அடுத்தசொல்லும்அறிந்து இருந்தால் பிழைத்து கொள்ளலாம் என இப்போது  புரிகிறது.

பதினோரு ருத்ரர்கள் என்று எங்கோ வாசித்தது இப்பொது ஞாபகம் வந்தது "சினம் கொண்ட ரைவதன், சூலம் ஏந்திய அஜன், புலித்தோல் அணிந்த பவன், நுதல்விழிகொண்ட பமன், உடுக்கொலிக்கும் வாமன், நாகம் அணிந்த உக்ரன், சடை விரித்த வ்ருஷாகபி, மான் ஏந்திய அஜைகபாத், மழு சூடிய அஹிர்புத்ன்யன், மண்டையோட்டு மாலையுடன் பஹுரூபன், சாம்பல் மூடிய மஹான். கோபம், ஆயுதம், வேட்டை, ஒற்றை எண்ணம், நான் ,நான் என அனைவரிடமும் அறிவித்துகொண்டே இருத்தல், காமம், விரிந்து பரவும் எண்ணம், வேகம், முற்றொழித்தல், மரணம், காற்றில் கலத்தல்  என்ற கலியுலக அல்லது உண்மையில் உலகை அழித்து ஆக்கும் மானுடரின் குணங்கள் என்றும் தெரிகிறது. எதுவும் அழியவில்லை ......இருக்கிறது. தங்களின் அவிக்கு அடுத்ததை தேடிக்கொண்டு....அஸ்வத்தாமனும் விடுதலை அடைந்துவிட்டான். 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்