அன்புள்ள ஜெயமோகன் சார்,
கார்கடலின் 68ம் அத்தியாத்தை திகிலோடு எதிர்பார்த்து கொண்டிருந்தேன். சோமதத்தரும் பூரியும் என்ன ஆவார்களோ என்று?.ஏன் என்றால் அது அவர்களுக்கு சம்பந்தம் இல்லாத களம்.உள்ளம் கொதித்து கொண்டே இருக்கிறது. இன்று நான் சந்தித்த அனைவருக்குள்ளும் குருஷேத்ரத்தில் நிற்ப்பவர்களை கண்டடைந்து கொண்டே இருக்கிறேன். அப்போது எனக்கும் தெரிகிறது நான் யார் என்று? . பின்தொடரும் நிழலின் குரலில் வீரபத்திர பிள்ளை எழுதிய கவிதை :
"ஜன்னலைத்திறந்து, பாதையில் போகும் பொறுக்கியை வேடிக்கை பார்க்கும் வீட்டு மனிதா,இது உனக்கு
வீடு உனக்கு பாதுகாப்பல்ல ஏனெனில் உன்னிடம் என்ன உள்ளது?
அசட்டு உணர்ச்சிகளும், கணந்தோறும் பழமைகொள்ளும் சில பொருட்களும் மலச்சிக்கல்களும் தவிர?
தெரு மனிதர்களை இகழாதே, உன்னால் ஒரு போதும் அவர்களை புரிந்து கொள்ள முடியாது
எல்லை வகுக்கப்படாத எதையும் பார்க்கவோ உணரவோ உனக்கு அனுமதி இல்லை
உனக்கு அத்தனையும் ரேஷனில் வழங்கப்படுகின்றன ..காலம்,வெளி, ஒளி,நீர் எல்லாமே
குடும்ப அட்டையை கையில் வைத்தபடி -குடும்பத்தலைவன் என்று குறிப்பிட்டிருப்பதன்
அபத்தமான பெருமிதத்துடன், மகிழ்ந்துபோன ஆத்மாவாக உன் வீட்டுக்குள் வாழ்கிறாய்
கதவிடுக்கில் பீறிடுகிறது தெருவின் திறந்த காற்று
உன் ஆஸ்துமாவிற்கு அது எமன். மூடுடா கதவை"
இந்த கவிதை சாதாரணமாக ஒரு லட்சியவாத புரட்சிகாரனின் கவிதை என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இன்று குருஷேத்ரத்திலும் அர்த்தம் கொள்ளுகிறது. பூரி வீட்டின் பாதுகாப்பை உதறி வந்தவன். வீட்டின் குடிகள் தான் அவர்களுக்கு ஆணிவேர்.ஆதலால் எல்லைகள் இன்றி பறந்து விரிந்து இருளில் கிடக்கும் படையை புரிந்து கொள்ளமுடியவில்லை. அவனைபோலவே கடோத்கஜனும். இவர்கள் போரில் இருந்தாலும் அவர்களுக்கு சில ஆற்றல்கள் ரேஷனில் வழங்கபட்டுருக்கிறது. ஆழியென, வஞ்சம் என. குடும்ப உறுப்பினர்கள் என்ற அடையாளத்தோடுதான் வந்து நிற்கிறார்கள். அந்த பெருமிததோடுதான் சுற்றிவருகிறார்கள். ஆனாலும் கதவிடுக்கின் காற்று என ஊழ் பிறீட்டு கிளம்புகிறது. அது அவர்களுக்கு எமன். ஆனால் கதவை மூடதான் முடியாது. இந்த வரிகள் தர்மர், கர்ணர், அர்ஜூனர் அனைவருக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன். அப்போது தெரு மனிதன் யார்?
ஸ்டீபன் ராஜ்