Saturday, March 16, 2019

மைந்தர்அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடல் 74ம் அத்தியாயத்தில் உசவர் கூறும்  "பாம்பு என்பது அரிதாகவே பாம்பில் நிகழ்கிறது. பிற அனைத்திலும் தன்னை நிகழ்த்திக்கொள்ள இயலும் என்பது பாம்புகளின் இயல்பு. எங்கு வேண்டுமானாலும் அது தன் நஞ்சை வைத்திருக்கவும் இயலும். மானுடக் கைகளில் கூட நகங்களில் நஞ்சு எழுவதுண்டு. அன்னை கையில் நாகம் எழுந்து சீறி குழவியைக் கொத்தி கொன்ற கதைகளும் உண்டு”   என்ற வரிகள் நிறைய வெண்முரசை குறித்து யோசிக்க வைத்தது. நாகங்கள் எது எதற்கெல்லாம் படிமமாக்கப்படுகின்றது என்று ?  காமத்திற்கு , படைப்பிற்கு , வஞ்சத்திற்கு, தூக்கத்திற்கு , சொல்லுக்கு , வில்லுக்கு,ராகு கேது என்று  துரியோதனனையும் பீமனையும் ......அனைத்தும் ஆழத்தில் இருக்கும் உணர்வுகள். முதல் லேயர்.


கடோத்கஜன் இறந்து விட்டான் என்பதை எண்ணி ,அந்த கசப்பை கக்ககூடாது என நினைத்து "தெய்வங்கள் விண்ணில் காத்து நின்றிருக்கின்றன. மானுடனின் ஆணவம் முறியும் தருணத்தில் அவை புன்னகைக்கின்றன. தெய்வங்களே, என்னை நோக்கி நீங்கள் புன்னகைக்கும் ஒரு தருணத்தை நான் அளிக்கப்போவதில்லை. ஒருபோதும் என்னை நீங்கள் இரக்கத்துடன் பார்க்கப்போவதில்லை. கை சுட்டி இதோ எளிய மானுடன் என்று உரைக்கப்போவதில்லை. ஒருதுளி விழிநீரையும் நீங்கள் பார்க்கப்போவதில்லை"  என பீமன் தனக்கு அறைகூவி கொள்கிறான். ஆனால் வெய்யோனில் கர்ணன் அஸ்தினபுரிக்கு  வரும்போது கௌரவ மைநதர்கள் அனைவரும் “பெரீந்தையே!”  என ஓடிவந்து அவனை சூழ்ந்து கொள்வார்கள். இப்போது பீமனது  கனவில்  “பெரீந்தையே!” என அழைத்தபடி சிறுவனாகிய குண்டாசி அவனருகே அணுகினான். அவனுக்குப் பின்னால் சுஜாதன். “பெரீந்தையே, என்னை தூக்கு” என அவன் கைநீட்டினான். “நீயா?” என்று பீமன் கேட்டான். அவர்கள் கௌரவ மைந்தர்களான வாசவனும் வக்ரனும் என்று கண்டான். அப்பாலிருந்து கௌரவ மைந்தனாகிய சுராசதன் “பெரீந்தையே, இங்கு நிறைய இடமிருக்கிறது. எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் ஓட முடியும். இவர்கள் எவராலும் என்னை பிடிக்க முடியாது” என்று கௌரவ மைந்தர்கள் அனைவரும் வருகிறார்கள்.விளையாடுகிறார்கள்.  கூடவே கடோத்கஜனும்.  வண்ணக்கடலில் இப்படி சிறுவர்களாக துரியோதனனும் பீமனும் முதன் முதல் களிப்போர் புரியும் போது “மைந்தர்களே, இறப்பே நிகழுமென்றாலும் போர் ஓர் விளையாட்டு. ஏனெனில் வாழ்க்கை இன்னொரு விளையாட்டு. இப்புடவியோ பெருவிளையாட்டு” என்றார் கிருபர் என்று வருகிறது. இன்று  வாழ்க்கை என்னும் முக்கால் போரையும் , குருசேத்திரத்தில் முக்கால் போரையும் முடித்து பீமன் நிற்கும் போது  பின்னால் சென்று அதை வாசிக்க  இவ்வளவு சின்ன அர்த்தம் தானா வாழ்க்கைக்கு என எண்ணினேன் ...ஆனால் எவ்வளவு கடந்து வரவேண்டி இருக்கிறது. இன்னும் எவ்வளவு கடக்க வேண்டும் ? 

ஆனால் ஜெயமோகன் சார் வண்ணக்கடல் 10ல் கௌரவர்கள் யார் யார் என ?  சைலஜ கலர் வாயிலாக   “துரியோதனன், துச்சாதனன், துச்சகன், துச்சலன், ஜலகந்தன், சமன், சகன், விந்தன், அனுவிந்தன், துர்தர்ஷன், சுபாகு, துர்பிரதர்ஷணன், துர்மர்ஷணன், துர்முகன், துர்கர்ணன், கர்ணன், விகர்ணன், சலன், சத்வன், சுலோசனன், சித்ரன், உபசித்ரன், சித்ராக்ஷன், சாருசித்ரன், சராசனன், துர்மதன், துர்விகாகன், விவித்சு, விகடானனன், ஊர்ணநாபன், சுநாபன், நந்தன், உபநந்தன், சித்ரபாணன், சித்ரவர்மன், சுவர்மன், துர்விமோசன், அயோபாகு, மகாபாகு, சித்ராங்கன், சித்ரகுண்டலன், பீமவேகன், பீமபலன், வாலகி, பலவர்தனன், உக்ராயுதன், சுஷேணன், குந்ததாரன், மகாதரன், சித்ராயுதன் என்னும் ஐம்பது மைந்தர்களும் மூத்தகணத்தவர் எனப்பட்டனர்.”
“நிஷங்கி, பாசி, விருந்தாரகன், திருடவர்மா, திருதக்ஷத்ரன், சோமகீர்த்தி, அனூதரன், திருதசந்தன், ஜராசந்தன், சத்யசந்தன், சதாசுவாக், உக்ரசிரவஸ், உக்ரசேனன், சேனானி, துஷ்பராஜயன், அபராஜிதன், குண்டசாயி, விசாலாக்ஷன், துராதாரன், திருதஹஸ்தன், சுஹஸ்தன், வாதவேகன், சுவர்ச்சஸ், ஆதித்யகேது, பகுயாசி, நாகதத்தன், உக்ரசாயி, கவசீ, கிருதனன், கண்டி, பீமவிக்ரமன், தனுர்த்தரன், வீரபாகு, அலோலுபன், அபயன், திருதகர்மன், திருதரதாசிரயன், அனாதிருஷ்யன், குண்டபேதி, விராவீ, சித்ரகுண்டலன், பிரமதன், அப்ரமாதி, தீர்க்கரோமன், சுவீரியவான், தீர்க்கபாகு, சுவர்மா, காஞ்சனதுவஜன், குண்டாசி, விரஜஸ் என்னும் ஐம்பதுபேரும் இளைய கணத்தவர் எனப்பட்டனர்” என்று கூற படுகிறது.  குண்டாசி பீமனை  ஏன் பெரியப்பா என கூப்பிடுகிறான்? ஒரு வேளை கௌரவ மைந்தர்களிலும் ஒரு குண்டாசிஇருக்கிறானா? 

கெளரவமைந்தர்கள் அவர்களின் இயல்பின்படி கடோதகஜனோடு விளையாடுவதாய் பீமன் நினைக்கும் போது [அல்லது கனவா ? இல்லை முன் கால பகற்கனவா?  ஆசையா? ] "கடோத்கஜன் தன்னைப் பற்றியிருந்தவர்களை உதிர்க்கும்பொருட்டு திமிறியபடி இரு இடைவெளிகளுக்கு நடுவே ஒளிமிகுந்த பற்களைக் காட்டி நகைத்து “நான் தோற்கவில்லை. இவர்கள் யாரும் என்னை பற்ற முடியாது” என்றான். பீமன் “விளையாடுங்கள்! விளையாடுங்கள், மைந்தர்களே!” என்றான். ஆனால் அவன் உள்ளிருந்து விம்மல் எழுந்தது. கண்ணீர் பெருகி காதுகளை நனைக்க அவன் பெரும்கேவல்களுடன் அழுதுகொண்டிருந்தான் என படித்தபோது கண்ணீர் பொங்கி ஒரு மாதிரி நெஞ்சு விம்மியது. இவ்வளவு இழப்புக்கு பின்தான் ஒருவன் அழும்போது நாமும்  அழுவது என்றால் மனதின் ஸ்டரக்சர் தான் என்ன ? ஆனால் நேர் வாழ்க்கையில் தோற்ற அல்லது இழந்ததற்காய் ஒருவன் கண்ணீர் சிந்தும் போது கூடவே கண்ணீர் சிந்திய எவனையும் எனது வாழ்க்கையில் கண்டதில்லை. கண்ணீரும் ஒரு நாகம் தானா? இப்போது தெய்வங்கள் புன்னகைக்குமா? அப்போது " அஹம் பிரம்மாஸ்மி " ..நான் தானா ? 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்