Tuesday, March 12, 2019

மாயை



அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடலின் 72ம் அத்தியாயம் முதலில் புரியவில்லை. திடீரென  NARNIYA , HARRY POTTER, NIGHT AT THE MUSEUM  படங்களை பார்த்துகொண்டிருக்கிறோமா? என சந்தேகம் வந்தது. ஆனால் 73ம் அத்தியாத்தை படித்தபின் புரிந்தது " தூக்கம்" அல்லது "அனலற்ற ஆத்மாவின் உறக்கம் " தான் அந்த மாயைகள் என.பகற்கனவுகள். நித்திரை அன்னையை பற்றி பல இடங்களில் வெண்முரசு கூறி இருக்கிறது. தாமசம் பிறகு தூக்கம் பிறகு வியாதி என ஒரு இடத்தில் வருகிறது. அனைத்தும் இந்த இரு அத்தியாயங்களிலும் சரியாக பொருந்தி வருகிறது. கர்ணனின் வியாதிக்கு காரணம் இப்போது புரிகிறது.நாக அம்பு இருந்தும் அதன் பயன் அறியாத அல்லது தன்னிடம் இருக்கும் சொற்களுக்கு கூட பயப்படுபவன் என்ன செய்யமுடியும் ? உயிர் பயமும் துரியோதனனின் அபய குரலும் அவன் தூக்கத்தை கலைத்திருக்கிறது. அரக்கதனத்தில் இருந்து விடுதலை. ஆனால் நாகவாழி இன்னும் இருக்கிறது. அவரவரின் உள்ளத்தில் இருக்கும் சொற்களுக்கு தக்கபடி செயல்.அதற்கு தக்கபடி வாழ்க்கை .


செந்நா வேங்கை 19 ம் அத்தியாத்தில் கிருஷ்ணரின் சொற்கள் நிலைபெற வேண்டும் என்பதற்காகதான் போர் என பீமன் கூற கடோத்கஜன்  “தந்தையே, எவருடைய சொல்லும் மானுடரின் அழிவுக்கு நிகரானதல்ல. சொல்லுக்காக மானுடர் சாவதைப்போல் வீண்செயல் வேறில்லை” கூறுகிறான். அதற்கு பீமன் பிறகு ஏன் நீ போரிட வந்தாய் என கேட்க  “நான் என் மூதன்னைக்கு அளித்த சொல்லுக்காக. அதன்பொருட்டு கொல்கிறேன். ஆனால் ஒரு மானுடன் இன்னொருவனை கொல்லவேண்டுமென்றால் அது தனிப் பகைக்காகவும் தனிப் போரிலும் மட்டுமே நிகழவேண்டும். பிற இறப்புகள் அனைத்தும் வீண்கொலையே.”  என்கிறான்.  மூதன்னைக்காய் வந்து நின்றவனின் நெஞ்சிலும் நாகவாளி சுற்றுகிறது. ஆனால் கிருஷ்ணர் “அவர் தன் தொல்மரபிலிருந்து பெற்ற மெய்மையை சொல்கிறார்” என்றும்  “ஆனால் இப்போரில் ஒவ்வொரு படைக்கலமும் நமக்கு தேவை.”என்றும் கூறி கடந்து செல்கிறார். அப்போது கிருஷ்ணரிடம் " உங்களின் சொற்கள் என்ன ? " என்று மனதிற்குள் கேட்டேன். 73ம் அத்தியாத்தில் திருஷ்டதுய்மன் தனக்குள் "அப்படியென்றால் சற்று முன்னர் இளைய யாதவர் பதினெட்டு பெருங்கைகளிலும் படைக்கலங்களுடன் தேர்த்தட்டில் எழுந்து கௌரவப் படைகளுடன் போரிட்டுக்கொண்டிருந்தது கனவு. அவருக்கெதிராக பதினெட்டு கைகளுடன் பெருகும் படைக்கலங்களுடன் எழுந்து வந்த பிறிதொரு இளைய யாதவரும் கனவே...என்று நினைத்து கொள்ளும்போது " இளைய யாதவர் யார்?  எந்த சொல்லின் குமி அவர்? .....இன்னும் எழுந்து வராத சொல்லா? 


வெற்றி பெற்றதும் வெறுமையை உணர்ந்து கடந்து செல்லுதல் தேவம் என  வெண்முரசு கூறுகிறது. திருஷ்டதுய்மன் வாயிலாக இன்று உணர்ந்தேன்.

ஸ்டீபன்ராஜ் குலசேகரன்