Friday, March 15, 2019

போரின் விசை




அன்புள்ள ஜெயமோகன் சார்,

இப்போது எல்லாம் வெண்முரசு படிப்பது திரில்லரை படிப்பது போலதான் இருக்கிறது. எல்லா திரில்லர்களிலும் கொலையாளி தெரிந்தவனாகவோ ரத்த பந்தத்தில் உள்ளவனாகவோ இருப்பான். வெண்முரசு மாபெரும் திரில்லராக இருக்கிறது,படிக்கும்போதும் படித்து முடித்தபின்னும் நெஞ்சு துடிப்பதும் உடல் வளைந்து நெளித்து பதட்டத்தை தனிப்பதுமாக ஒரு அரை மணிநேரம் செல்கிறது. ஆனால் வாழ்க்கை என்னும் மாபெரும் திரில்லரில்  ஓன்று இரண்டு திருப்பங்கள் மட்டுமே நடக்கும் பிறகு உப்பு சப்பு இல்லாமல் தேமே என்று கடந்து செல்லும். அதை செறிவாக்க இவ்வளவு பெரிய செறிவான ஒரு ஆக்கம் .  வெண்முரசில் பிரகஸ்பதி ,சுக்ரர். பலராமர் , பரசுராமர்[கர்ணனின் ஆசிரியர்], கிருபர், சொல்வளர்காட்டில் வரும் குருநிலையின் ஆசிரியர்கள் என நிறைய ஆசிரியர்கள் வந்து  செல்கின்றனர். சுக்ரர்,பிரகஸ்பதி தவிர நிறையபேர் மகாபாரதத்தின் நிகழ்காலத்தில் உள்ளவர்கள்.பாண்டவர்களும்,கவ்ரவர்களும் கர்ணனும் , குருஷேத்ரத்தில் இருக்கும் முக்கால்வாசி வீரர்களுக்கும் துரோணர் தான் குரு. ஆனால் ஏன்  அனைவரும் ஒரு ஒவ்வாமையோடு அவரிடம் இருக்கிறார்கள்? உண்மையான ஆசிரியர்களுக்கு மாணவர்கள் தான் எதிரியா? அவரின் சொல்லும் கடந்து செல்லப்படவேண்டும் என இயற்கை நினைக்கிறதா? ஆனால் மகாபாரதமே சீடர்களால் தொகுக்கப்பட்டதுதான். முதலில் வரலாற்றோடு இணைந்து தனக்கு தனிக்குரல் இருப்பவன் தான் உண்மையான ஆசிரியன். அந்த தனிக்குரல் காலகாலத்திற்கும் நிற்கிறது. அவன் வரலாற்றை மாற்றியது மாறிக்கொண்டே இருக்கும் , அந்த வரலாற்றை எப்படி நாமும் கொஞ்சம் மாற்றுவது என சீடர்கள் தூண்டபடுவதுதான் காரணம் என நினைக்கிறேன். துரோணரின் வஞ்சம் தான் குருஷேத்ரத்தின் மாபெரும் கண்ணி ஆனாலும் அவருக்கு மட்டுமே உண்டான தவிப்புகளும் தனிகுரல்களும் இன்னும் நிற்கிறது.  உலகம் இருக்கும் வரை இருக்கும்.

கார்கடலின் 78ம் அத்தியாயத்தில் சாத்யகி திருஷ்டத்யும்னனிடம் “இன்று நீங்கள் ஆற்றப்போவதென்ன என்று பாண்டவப் படையே காத்திருக்கிறது” என கூற திருஷ்டத்யும்னன் முகம் மாற . “பிறவிப்பொறுப்பு…” என்கிறான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “பிறப்பிலேயே பெரும்பாலும் வாழ்க்கை முடிந்துவிடுகிறது அனைவருக்கும்” என்கிறான். சாத்யகி “நான் என் வாழ்க்கையை தெரிவுசெய்தேன்” என்றான். திருஷ்டத்யும்னன் அவனை கூர்ந்து நோக்கி “என்ன வேறுபாடு?” என கேட்க சாத்யகி திகைப்புடன் நோக்க “நாம் நம்மை படைக்க பலிபீடங்களை கொண்டிருக்கிறோம். எனக்கு அது தந்தையால் அளிக்கப்பட்டது. நீர் அதை ஈட்டிக்கொண்டீர்.”என்கிறான். பிறகு.” யுதிஷ்டிரர் தேருக்குப் பின்னாலிருந்து புதிய கவசங்களுடன் வந்து “பாஞ்சாலனே, இன்றைய போர் உன்னுடையது. நேற்று உன் தந்தை களம்பட்டதற்கு இன்று நீ பழிநிகர் செய்தாகவேண்டும். இங்குள்ள அத்தனை படைவீரர்களும் அதை எதிர்பார்க்கிறார்கள். உன் குடிதெய்வங்களும் மூதாதையரும் விண்ணில் காத்திருக்கிறார்கள்” எனகூற திருஷ்டத்யும்னன் தலைதூக்கி “பழிநிகர் கொள்ளவே நான் பிறந்திருக்கிறேன் என்கிறான்.இது துரோணரின் ஒரு மாணவனின் பதில்.

திருஷ்டத்யும்னன் நினைவுகள் பின்னோக்கி தனது ஆசிரியரிடம்  தான் கல்வி பயின்ற நாளுக்கு செல்கிறது. துரோணர் தினமும் கூர்மின்னும் அம்பின் மீதே கண்விழிக்கிறார். [அந்த கூர்மின்னும் அம்பு என்ன ? ] ஏன் அம்பில் கண்விழிக்கிறீர்கள் என திருஷ்டத்யும்னன் அவரிடம் கேட்க " “அம்பு வெறும் படைக்கலம் அல்ல. அது ஒரு கருவியென இங்கே தோன்றியது. மானுடனைக் காத்தது, உணவூட்டியது, அவன் கையும் நாவும் கண்ணும் நகமும் பல்லும் ஆனது. அவன் குடிபெருகச் செய்தது. அவனுடன் உறக்கிலும் விழிப்பிலும் இருந்தது. அதை தவமென இயற்றினர் நம் முன்னோர். தவம் சென்றுபடியும் செயல் கலையாகிறது. கலை அழகை உருவாக்குகிறது. அழகின்பொருட்டு அது சுற்றிலும் தேடுகிறது. தொட்டுத்தொட்டு அனைத்து அழகுகளையும் அறிந்து அதை தான் நடிக்கிறது” என்று கூறிவிட்டு துரோணர் கூறுகிறார்  “கலை முதிர்கையில் அது வேதமாகிறது. கலை என்பது நிகழ்வு. நிகழ்வின் நெறிகளை மட்டும் தொட்டுச் சேர்த்தால் அது சொல். சொல்லிச் சொல்லி கூர்கொண்ட சொல் வேதம்” என்கிறார். இது திருஷ்டத்யும்னனுக்கு புரிந்திருக்கும் போல அதனால் தான் போர்க்களத்தில் ஞாபகம் வருகிறது. நான் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.


ஸ்டீபன்ராஜ் குலசேகரன்