நான் மகாபாரதம் படிக்கும்போது பெரிய வீரர்கள்கூட
ஒருவரை ஒருவர் நிந்திக்கும் இடங்களை வாசித்து குழப்பம் அடைந்தேன். பேடி என்றும் கோழை
என்றும் வசைபாடுகிறார்கள். அவர்களின் குலங்களைச் சுட்டிக்காட்டி திட்டுகிறார்கள். இது
அக்கால வழக்கமாக இருக்கலாம் என்றாலும் இது அந்தக்கதாபாத்திரங்களின் கிராண்டீருக்கும்
இயல்புக்கும் பொருந்தவில்லை என்று நினைப்பேன். ஆனால் வெண்முரசு அதற்கும் ஆழமான ஒரு
விளக்கத்தை அளிக்கிறது. போரில் ஈடுபட சினம் தேவை. எங்கோ ஓரிடத்தில் போரிடுவதற்குத்தேவையான
சினத்தை இழந்துவிடுகிறார்கள். அதன் பின்னர் அந்தச்சினத்தை ஈட்டிக்கொள்ளவே அந்த அளவுக்கு
வசைகளைப் பொழிகிறார்கள். அது நமக்குநாமே சினம் ஊட்டிக்கொள்வதுதான். கர்ணனும் சாத்யகியும்
துரோணரும் வசைபாடிக்கொள்ளும்போது அந்த மனநிலை மிகத்துல்லியமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
பலமுறை நுட்பமாக வாசிக்காவேண்டிய இடங்கள் அவை
மகாதேவன்.எம்.ஆர்