Tuesday, May 1, 2018

அறம் பலநிலைகள்




அன்புள்ள ஜெ

யுதிஷ்டிரர் அடைந்த நிறைவை பல தளங்களிலாக வாசிக்கவேண்டியிருந்தது. அலையலையாக வந்துகொண்டே இருந்தது அந்த விவாதம். முதலில் வெறுமையின் பெருவெளியில் அறமென ஒன்று உண்டா என்ற கேள்வி எழுந்ததுமே அது சரிதானே என தோன்றியது. ஒவ்வொருவருக்கும் அவரவர் அறம் என்ற வரி வந்ததுமே சரிதானே என்று தோன்றியது. அறம் என்பது கைகால்போல ஒரு திரண்டுவந்த ஒன்றுதான் என்ற கருத்து சரியாக இருந்தது. ஆனால் ஒட்டுமொத்தமாக ஓர் அறம் இருந்தாகவேண்டும், அதன் துளியே எல்லா அறங்களும் என்பது இன்னும் பெரிய தரிசனம். நம் அறம் அந்தப்பேரறத்துடன் முரண்படுமென்றால் அது அழியும். அழிவதே மறம். வாழ்வது அறம் என தெளிவுவந்தது. ஒருகேள்வி இன்னொரு கேள்விக்கு என்று சென்றுகொண்டே இருக்கும் அந்த விவாதம் பிரமிக்கச்செய்தது. ஆங்காங்கே இயல்பாக அமைந்த கீதையின் வரிகள் அவற்றை புதியபார்வையில் அணுகச்செய்தன

குமார் சுப்ரமணியம்