Thursday, May 3, 2018

மழைப்பாடல்



அன்புள்ள ஜெ
           
         தற்போது தான் மழைப்பாடல்  வாசித்து முடித்தேன்.ஐந்து நாட்கள் காலை எழுந்தது முதல் நடுங்சாமம் வரை வேறு எந்த எண்ணமும் இல்லை மழைப்பாடல் மட்டும் தான்.

பாலை நிலம் பகலில் வெம்மையும் அனலுமாய் கண்களை கூசச் செய்திடும் இரவில் நிலம் தன்னை இருளில் ஒளித்துக்கொள்ளும் பாலை நிலத்தில் அரிதினும் அரிதாக பெய்யும் மழையில் ஏற்படும் மின்னல் அதுவே பாலை நிலத்தை காண வழி ஓரே கணம் மொத்த விரி நிலமும் புலப்படும்.ஆனால் காண்பவர் அக்கணமே விழி இழப்பர் சகஸ்ரேனுவில் இருந்து வந்த விழி இழந்த அச் சூதர் மாறாப்புன்னகை கொண்டுள்ளார்.

இக்கடிதத்தை எழுதிக்கொண்டு இருந்த நேரம் இங்கு நல்ல மழை பெரு மின்னல்கள் எழுந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு மின்னலும்  மழைத் துளிகளை ஒளி கொள்ளச் செய்தது ஆயிரம் குறு மின்னல் துளிகள் கணம்தோறும் பிறந்தழிந்தன.
கடலில் பொய்யும் பெரு மழைகளில் எழும்மின்னல்களை ஆழி பெரும் ஆடியென நின்று பிரதிபலிப்பதை எண்ணிக்கொண்டிருந்தேன்
வானமும் கடலும் ஈறின்றி ஒன்றாகும் தருணம்.

திருதராஷ்டிரன் இசையென்ற வெளிக்குள் தனது வண்ணங்களை கண்டடைந்தவன். என் நண்பர் ஒருமுறை சொன்னார் பார்வையற்றவர்கள் இசையால் தங்களது வண்ணங்களை கண்டடைகிறார்கள்  என்று அது எத்தனை மகத்தான உன்மை ஒருபோதும் அவர்கள் காண்பதை நாம் அறிய முடியாது.திருதராஷ்டிரன் இசையால் பாலையின் அனலையும் அலைகளையும் இனிமையும் ஒரு சேர அறிகிறான்.அவன் வெளிக்குள் நுழைந்தவர் தீர்க்கசியாமர் இசைக்கு தன்னை ஒப்புக்கொடுத்த நைஷ்டிக சங்கீதக்ஞன்.

கொற்றவையில் மழையைக்கான கண்ணகிக்கு நீலி தவளையின் கண்களை தருகிறாள்.மழைப்படலின் அட்டைபடத்தில் தவளை இருக்க அதுதான் காரணம் என நினைக்கிறேன். மழையைக்கானும் இமையா பெருவிழிகள் கொண்ட தவளை.

தங்கராஜ்
கோவை