அன்பின் ஜெ,
இமைக்கணம்" வெண்முரசில் மிக முக்கியமான நிகழ்வு.உள மயக்குகள் முன்னும் பின்னும் அலைகின்றன.இன்றைய பகுதியில் திரௌபதி உணர்வது எதை? தன் முற்பிறவிகளையா? அல்லது தற்பொழுது வாழும் வாழ்வையா? எதுவாக இருந்தாலும் மிக அற்புதமான விரிவு.
"நீ பெண் என்று கைசுட்டிச் சொல்லாத நூல்கள் உள்ளனவா உங்களுக்கு? பெண்ணெனும் விழைவு. பெண்ணெனும் பொறி. பெண்ணிலூடாக உலகை அடைந்து பெண்ணை விலக்கி உலகைக் கடந்து அடைவதே வேதநெறியின் வீடு. எனில் பெண்ணுக்கு எது வீடுபேறு? பெண்ணென்று கொண்டுள்ள எவ்வியல்பும் சிறையே என்கின்றன உங்கள் நெறிகள். பெண்மையை உதறிய பின்னரே பெண் முழுமைகொள்ள இயலுமென்றால் அது பெண் கொள்ளும் முழுமை அல்ல. முழுமுதல் இன்மையிலிருந்து எழும் இவையனைத்தும் பொய்யென்றால் பொய்யிலாடுவதையே தன்னியல்பெனக் கொண்டவள் பெண். அவளுக்குரியதல்ல இப்புடவிநெறி என்கின்றது வேதமுடிபு."
நான் பலமுறை எண்ணிக்கொண்டிருந்த வினாக்கள் இவை.பெண்ணை விலக்கி எழும் நெறிகளே வீடு பேறு எனில்,பெண்ணில்லாமல் முழுமை பெறாத இன்பமும் உலகில் இல்லை என்பதும் ஏன் எப்பொழுதும் ஒன்றாகவே எழுதப்படுகின்றன.பெண்ணுக்கு வீடு பேறு என்பது எது? பெண்மையை,தன்னுடலை விட்டெழுந்து வருவதா? அது அத்தனை எளிதானதா? திரௌபதிக்கே தன் இயல்பை,காமத்தைக் கூற இத்தனை தடைகள் எனில் யதார்த்த உலகில் சாதாரணப் பெண்ணின் உள்ளம் என்று வெளிப்படும்.உண்மையில் அது அவளுக்கேத் தெரியாது.அப்படியே வாழ்வில் எந்தக் கட்டத்திலாவது தன்னை வதைக்கும் காமத்தின் முழுமையை அவள் உணர்ந்தாலும் அவள் மனம் அதற்காக அவமானம் கொண்டு மறைக்கவே முயலுகிறது. தனக்கு ஒன்றுமே தெரியாது என்று மதலையாய் வேடமிட்டும்,ஆணின் தேவைக்காகவே தான் அதனை ஏற்பதாக பிறரை எண்ணவைத்தும் அவள் மனமும் அதனை நம்பத் தொடங்குகிறது. இது தான் இங்கு நிகழ்கிறது.பெண்மையின் முடிவில்லா தந்திரங்களுக்கு அடிப்படை இதுதான்.ஆண்களால் அதனை அத்தனை எளிதாகக் கடந்து வர முடியாது.
மெய்ம்மையை என்றுமே உணர முடியாதவளா பெண்? எனில் அவள் அதனை அறிய என்ன செய்ய வேண்டும்? தன் உடலைக் கடந்தால் வேததெறிகளைக் கண்டறிய இயலுமா? அல்லது இறுதிவரை அதனுடனே போராடுக் கொண்டே இருத்தலா?
தன் உடலிலிருந்து முளைத்தெழுந்து இப்புவியை நிரப்பும் குமிழியினூடாக அவளே இப்புவியாகிறாள்.புற உலகில் அவளை இழுத்திருப்பது கருவறையும்,முலை சுரத்தலும் எனில் அவள் இங்கேயே முழுமையடையத்தான் வேண்டும். அதனை மீறி வீடு பேற்றினை உணரவே முடியாது.
பலமுறை நான் எண்ணி எண்ணி உணர்ந்த இதே போன்ற கேள்விகளை மிக சிறப்பாக இன்றைய பகுதி அளித்திருக்கிறது.
நன்றி
மோனிகா.