நாம் ஓவ்வொருவரும் கண்ணனை அடைய தான் ஏங்குகிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் பிடித்ததாக இருக்கும். இசை கேட்டு உருகுவது, படிப்பது, விளையாடுவது, சமைப்பது, நல்ல படைப்பூக்கத்துடன் உழைப்பது என்று ஆட்களுக்கு ஏற்றார் போல் வெவ்வேறு வகையில் உவகையை அடைவோம். அப்படி எதன் மூலம் நம் ஆன்மாவானது உவகை கொள்கிறது என்று தெரிந்துவிட்டால் நாம் அதை திருப்பி திருப்பி செய்வோம், ஒரு வகையில் அதற்கு அடிமை ஆகிவிடுவோம்.
நம் ஆன்மா நிறையும் இந்த தருணங்களில் எல்லாம் நாம் கண்ணனை தொட்டு தொட்டு திரும்பி வருகிறோம். கண்ணனோடு கண பொழுது காதல் கொண்டு மீள்கிறோம். 'தடை' ஏதும் இல்லை என்றால் நாம் அந்த உன்னத நிலையிலிருந்து மீள மாட்டோம். நம் அகம் விழைவது அதையே. நித்யம் அவனுடன் காமத்திலாடுவது.
ருசி அறிந்த இந்த ஜீவாத்மா, பரமாத்மாவான கண்ணனை தேடி கொண்டே இருக்கிறது. அப்படி பார்க்கையில் நாம் ஒவ்வொரு வரும் ராதையே. நமக்கு பிடித்த விஷயங்களை செய்யும் போது நாம் இயல்பான மன நிலையில் இருப்பதில்லை காலத்தை மறந்து இடத்தை மறந்து அந்த நேரத்து பொறுப்புகளை மறந்து ஒரு பித்து நிலையிலாழ்ந்து மதுரத்தை சுவைக்கிறோம். எவ்வளவு சுவைத்தாலும் போதவில்லை.
அப்படி தங்களுக்குள் இருக்கும் ராதையை அடையாளம் கண்டுபிடிக்காத ஜீவன்கள் உன்மையிலேயே பாவம். அப்படி பட்டவர்கள் தான் குடி பழக்கத்தில் விழுவார்கள். கிருஷ்ண மதுரம் கிடைக்காத பாவப்பட்டவர்கள் குடித்து நிரம்ப ஏதோ ஒன்று வேண்டுமல்லவா? இல்லை என்றால் லௌகீகத்திலேயே உழல்பார்கள்.
தங்களை ராதையாக நினைத்து கிருஷ்ணனை துதிக்கும் விரஜர்களைபற்றி படித்தபோது, என்ன இது? என்று தோன்றியது. புரியவில்லை. நீலத்தை படிக்கும் போது அது எவ்வளவு உன்மை என்று புரிகிறது. மானுடர் அனைவரும் கண்ணனின் காதலிகள் தான். அவனோடு இணைபவர்கள் தான். அதை பார்த்து ராதை கோபம் கொண்டால் நியாயமா?
ஹரீஷ்
வெண்முரசு விவாதக்குழுமத்தில். . .