Thursday, December 18, 2014

விதுர ஞானம்
அன்புள்ள ஜெ,

நிலத்தடி நெருப்பாக சுழன்று கொண்டிருந்தது இன்று (பிரயாகை 57 - http://www.jeyamohan.in/66898) கொப்பளித்தே விட்டது. சுருதையின் கொந்தளிப்பைத்தான் சொல்கிறேன். அவள் முன் தத்தளித்த விதுரரைக் கண்ட போது விக்கித்து நின்று விட்டேன். விதுரர் மட்டுமல்ல மனைவியை அவளின் பாவனைகள் மூலமாக மட்டுமே தெரிந்து கொண்டிருக்கும் அத்தனை ஆண்களும் சந்திக்க நேரும் ஓர் தருணம் தான் இது.

சுருதை எதற்காக பேசுகிறாள்? அவளின் மகன் அவமானப் படுத்தப் படுவதை அவள் அனுமதிக்கக் கூடாது என்பதற்காகவா? இல்லை, அவளின் தந்தைக்கு அஸ்தினாபுரத்தில் விதுரரால் எந்த அரச மரியாதையையும் தரப் படவில்லை என்பதற்காகவா? இல்லை, அவளின் தந்தை நாடிழந்த போது சென்று உதவாததற்காகவா? இவையெல்லாம் தான் காரணங்கள் என்று அவளே சொல்கிறாள். 

இல்லை, விதுரர் அவள் எதிர்பார்த்த வேண்டிய கனிவையும், காதலையும் அவளுக்குத் தரவில்லை என்பதா? இல்லை, குடும்பத்துக்கு ஒதுக்க வேண்டிய நேரத்தைக் கூடத் தராமல் அரசாங்கமே கதி என்றிருந்ததாலா? இல்லை, அவரின் குந்தியின் மீதான ரகசிய அபிமானமா?

ஆனால் இவையெல்லாம் தான் காரணங்களா? இவையெல்லாம் அவளின் மனம் கண்டடைந்த காரணங்கள். விதுரர் அவ்வாறு இருந்தமைக்கு காரணம் அவர் சூதர் என்ற அவரது தாழ்வுணர்ச்சியே என்று அவளும் மிகச் சரியாக அவரின் பலவீனத்தில் உதைக்கிறாள். 

இவ்வளவு கசப்பு எங்கிருந்து அவளில் வந்தது? அவள் உண்மையிலேயே விதுரரை விரும்பவில்லையா? அவள் அகம் அவரை விரும்புகிறது. ஆனால் அவள் அகப்பை அவரை அதற்குரியவராக காணவில்லை. ஆம். அவள் சுமக்க விரும்பிய கருவினைத் தரும் தகுதி அவருக்கு இல்லை என்றே அவள் நினைக்கிறாள். அது தான் ஆழ்மனத்தில் கசப்பாக உருவெடுக்கிறது. உலகில் 90 சதவீத பெண்களுக்கு அவர்கள் விரும்பிய தகுதி வாய்ந்த ஆண் அமைவதில்லை. அதனால் தான் "எத்தனை சிறந்த மணவுறவிலும் மனைவியின் உள்ளத்தில் ஆழ்ந்த கசப்பு ஒன்று குடியிருக்கும் என்று நூல்கள் சொல்கின்றன. அது சிறந்த மணவுறவாக இருக்கும் என்றால் அந்தக்கசப்பை அவள் மேலும் மேலும் உள்ளே அழுத்திக்கொள்வாள். அதன்மேல் நல்லெண்ணங்களையும் இனியநினைவுகளையும் அடுக்கி மறைப்பாள். ஆனால் அழுத்த அழுத்த அது வீச்சு மிக்கதாக ஆகிறது. உன்னில் இப்போது வெளிப்படுவது அதுதான்", என்று நூல்களைத் துணைக்கு அழைக்கிறார் விதுரர். 

இங்கே இடும்பி நினைவுக்கு வந்து செல்வதைத் தவிர்க்க முடியவில்லை. எந்த பெண்ணும் அத்தகைய பெருங்காதலை அடையவே முயல்கிறாள். ஆனால் அனைவருக்கும் அது கிடைப்பதும் இல்லை. அதனால் தான் இடும்பியைப் பார்த்ததும் குந்தியே பொறாமை கொண்டாள். ஒரு பெண்ணிடமிருந்து உன்னைக் கருவாகச் சுமக்க விழைகிறேன் என்று கேட்கும் ஆண் தான் உலகில் நல்லூழ் கொண்டவன். ஏனென்றால் அவன் இவ்வுலகில் பிறந்த காரணம் நிறைவாகிறது. இக்காரணம் மனித மனதிற்கு அப்பாற்ப்பட்டது. தூய விலங்குத் தன்மை கொண்டது. 

அப்பெருங்காதலை அடைய முடியாதவர்கள் கசப்புடன் தான் வாழ்வார்கள். அக்கசப்பு வாழ்வில் தொடர்ந்தோ அல்லது ஏதோ ஓர் தருணத்திலோ கட்டாயம் வெளிப்படும். இங்கே சுருதையில் வெளிப்படுவது அது தான். இதை ஜெ மிக நுட்பமாக சுருதையின் மொழிகளில். "உங்களிடமில்லாதது அதுதான்… ஷாத்ரம். நீங்கள் இவ்வுலகில் எதையும் வென்றெடுக்க முடியாது.", என்று வெளிப்படுத்துகிறார்.

இதை உணர்வது மட்டும் தான் விதுரருக்கு இத்தருணத்தைக் கடந்து செல்வதற்குரிய ஒரே வழி. ஒரு வேளை அவரின் 'விதுர நீதி' அடையப் போகும் உயரங்கள் மூலமாகவாவது தனக்கு வாய்த்ததும் தகுதியானது தான் என்றுணர முடிந்தால் சுருதையும் நிறைவடையலாம். இல்லையென்றால்இவர்களின் குடும்ப உறவும் ஓர் ஒட்டு போட்ட கண்ணாடிப் பாத்திரம் போன்றது தான். 

அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்.