Tuesday, December 30, 2014

பெண்கள் மீளும் இடம்


[திவிஜன் குப்தா. அம்பா அம்பிகா அம்பாலிகா ஓவியம்]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


நான் மழைப்பாடலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். நாலைந்துநாள் ஒன்றுமே செய்யத்தோன்றவில்லை. வாழ்க்கைக்கு என்னதான் அர்த்தம் என்ற நினைப்பு வந்துவிட்டது. பெண்ணின் வாழ்க்கையில் சிறுமியாக இருக்கும்போதுதான் சந்தோஷமே இருக்கிறது. அப்போதுதான் அவளுக்காக அவள் வாழமுடிகிறது. அதோடு அந்த வாழ்க்கை முடிந்துவிடுகிறது. அதன்பிறகு அத்தனை பெண்களும் அந்த இளமைப்பிராயத்தை நினைத்து நினைத்து ஏங்கிக்கொண்டேதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு சந்தோஷம் என்று பிறகு எதுவுமே இல்லை. ஏனென்றால் சுதந்திரம் இருந்தால்தானே சந்தோஷம். அன்றும் இன்றும் அதேதான் நிலைமை இல்லையா?

அம்பிகை அம்பாலிகையை கட்டிபிடித்துக்கொண்டு நமக்கு யாருமே இல்லையடி என்று சொல்லும் இடத்தில் கலங்கிவிட்டேன். என்ன ஒரு வாழ்க்கை. அங்கே அவர்களை சிறைப்பிடித்துக்கொண்டுவருகிறார்கள். பிள்ளைகள் அவர்களை மீரி பிறக்கின்றன. ஒன்றுக்குமே அர்த்தம் இல்லை. அவர்கள் அதன்பின்னர் போட்டது எல்லாமே வேசம். அதுக்குள் அவர்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. அவர்கள் கைகளைப்பிடித்துக்கொண்டு காட்டுக்குள் போகும் இடம் கண்ணீர் வரவழைத்தது. அதேபோல சத்யவதி சியாமையிடம் சொல்கிறாளே,. நீ யமுனைக்கரைக்கு போய் நாம் விளையாடியதை எல்லாம் நினைத்துக்கொண்டிரு என்று அதுவும் நினைக்க நினைக்க கண்ணீர் வரவழைத்தது. ஒரு பெண்ணாகத்தான் அதை உணரமுடியும்

நான் அப்போது என் சின்னவயசிலே வாழ்ந்த திருவாரூருக்கு போவதைப்பற்றி நினைத்துக்கொண்டு அழுதேன். மழைப்பாடலே போதும். அதுவே தமிழிலே நான் வாசித்த ஈடு இணை இல்லாத நாவல் என்று தோன்றுகிறது


சந்திரா