Wednesday, December 31, 2014

துரோணரின் பிம்பம்



துரோணர் குரு தட்சனையாக துருபதனை கேட்டவுடன், அதற்கு சம்மதித்து. அதை நடத்துவதற்கு என்ன காரணம் சொல்வது என்று விதுரர், பிதாமகர், சகுணி திட்டம் இடுவதை படித்த போது எனக்கு அமெரிக்கா தான் நினைவுக்கு வந்தது. எந்த நாட்டிலும் சென்று போர் செய்வதும் அதற்கான 'உத்தம' காரணத்தை எடுத்து உலகுக்கு  சொல்வதையும் இந்த திட்டமிடல் போலத்தான் செய்வார்களோ?

“ஆம், அனைத்துச் சிற்றரசர்களுக்கும் நடந்தது என்ன என்று தெரிந்திருக்கும். ஆனால் இதை ஏற்றுக்கொள்வார்கள். அவர்களெல்லாம் நம் அடிமைகள் என்பதுதான் உண்மை. ஆனால் அவர்கள் ஷத்ரியர் என்பதனால் நட்புநாடுகள் என்ற பாவனை அவர்களுக்கு தேவைப்படுகிறது. அதை நாம் கலைக்கையில்தான் அவர்கள் சினம் கொள்கிறார்கள். அது கலையாதபோது எதையும் ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் நம் நட்புநாடாக இருப்பதற்கு நம்முடைய படைபலமன்றி வேறென்ன காரணம் இருக்கிறது? ...” என்றார் விதுரர்.

இது தான் இன்றைய உலக அரசியலின் நிலை போலும்.

சரி இவ்வளவு தந்திரமாக இவர்கள்(அஸ்தினாபுரம்) காரணம் ஜோடித்து போர் செய்ய என்ன காரணம்? மக்கள் நன்மைக்கா? இல்லை மண் ஆசையினாலா? ஒரு தனி மனிதரின் தேவை அதை நிறைவேற்ற இத்தனை செயலுகளும் நடக்கிறது. அவர் ஒரு குரு. குரு சொன்னால் தட்டலாகாது. குரு கூறுவதை நிறைவேற்றியே தீர வேண்டும்.  இது தான் மத குருக்களுக்கும் பொருந்துமோ, அதனால் தான் உலகிலும் வரலாற்றிலும் கொலை வெறி அடங்கியதில்லையோ?

துரோணர் இவர் ஒரு சிஷ்யனிடமும் சரியான ஒரு குரு தட்சனையை கேட்க மாட்டார் போலும். பிறப்பிலிருந்து இறப்புவரை அல்ல, இறப்புக்கு பிறகும் நிலை பேறு இல்லை என்று சாபம் வாங்கிய மனிதருக்கு வாழ்வில் பிடிப்பிருப்பதே பெரிய விஷயம். துரோணருக்கு அதையும் மீறி அவர் அகங்காரம் இவ்வளவு திடமாக இருப்பது ஆச்சரியம் தான்.

இந்த போரீன் மூலம் இவர் நிருப்பிக்க நினைப்பது ஓரே ஒருவனிடம் - துருபதன். அந்த ஒற்றை மனிதனிடம் இந்த ஒற்றை மனிதன் பழி தீர்க்க தான் இத்தனை உயிர்கள் அழிக்கப்பட்டதா? இறந்த பின்னும் முழுமை அடைய போகாத ஆன்மா இந்த தனி மனிதனிடம் வெற்றி பெற்று என்ன செய்ய போகிறது? தன் உள்ளத்தில் இருந்த அனல் கட்டியை எடுத்து வெளியில் வைக்க தெரியாத எளியவர்.

இந்த காரியத்தை வேறு மனிதர்கள் செய்தால் புரிந்து கொள்ள தக்கது. ஆனால் வாழ்நாள் முழுதும் வில்லை கற்று தேர்ந்து அதை ஒரு யோகமாக கொண்ட ஒரு மனிதரா இதை செய்வது. நம்பிக்கை துரோகம் அதை விட பெரிய விஷம் உலகில் இருக்க முடியாது போலிருக்கிறது. அதற்கு பீமனும், துரோணரும் ஒருவரே தான். ஆளை முழுதாக ஆக்கிரமித்து அவர்களின் உள்ளத்தில் முழுமையாக நிரம்பிவிடுகிறது. பின் அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை இல்லை போலும்.

துருபதனை அடித்து இழுத்து வந்து ஒரு புழு போல் அவன் முன் போடுகிறான். அவன் முன் என்னென்னமோ பேசும் துரோணரை எளிய சில வாக்கியங்களால் குத்தி குலைத்து விட்டு மீண்டும் செல்கிறான் துருபதன். இனி அந்த வாக்கியங்களே அவர் மனதில் தீயாய் எரிய கூடும். நிறைவடைய ஒரு ஆன்மா. கசந்து முடிந்தது அந்த போர்.

அர்ஜுனன் மனதில் மட்டும் அல்ல வண்ணக்கடல் முழுதும் என் மனதில் வளர்ந்து வந்த துரோணர் இந்த ஒரு நிகழ்வால் நொறுங்கினார். எளியவரானார்.

ஹரீஷ்

வெண்முரசு குழுமத்தில் இருந்து...