Friday, December 26, 2014

அடைந்தவர்



இனிய ஜெயம்,

சகுனியின் ஒற்றர்கள்  வழியே ஹஸ்தினாபுரி மக்களின் மனதில் நிகழும் [அல்லது வெளிப்படத் துவங்கும்] விசித்திரங்கள்  அப்பட்யே  சாலையில் இறங்கிப் பார்த்தால் இன்றும் நிகழ்வதே.

அதிகாரத்தில் இருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கிறார்களோ அவ்வளவு தூரம்  சதிகளை விரித்துப் பெருக்கிக் கொள்கிறார்கள்.

சதிகளை பிறர் அறியாத நுட்பங்களை இன்னும் விரிவாக வைப்பவன் அங்கே உடனடியாக 'கவனம்' பெறுகிறான். அவன் 'ஒரு நொடி' புகழாளன். அந்த ஒரு நொடி தன மேல் குவியும் கவனத்துக்காக அவன் எதையும் செய்வான்.

விதுரரின் மைந்தர்களின் மதுரா பயணம். தர்மன் நகர் நீங்குகையில் யாதவர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பு அனைத்தும் இன்று சத்ரியர்கள் மனதில் வேறு அர்த்தம் கொள்கிறது.

மனம் நேராக திரௌபதியின் சுயம்வரம் நிகழ்ச்சிக்கு செல்கிறது. அங்கே என்னென்ன அரசியல் கணக்குகள் நடக்கிறதோ.  கணக்குகளின் பரமபதத்தில் கர்ணணன் விலக்கி வைக்கப் பட வேண்டியவனாக அறியப் படுவான்.

சகல தகுதியும் கொண்ட அவனை விலக்கி வைக்க சிறந்த ஆயுதம் கர்ணனை குலம் சொல்லி நிந்திப்பதே இல்லையா?

இன்று விதுரர் அடையும்  கல்வி அவர் வாழ்வில்  முக்கிய தருணம். அவர் இதுவரை  எதன் பொருட்டு வாழ்ந்தாரோ அது முற்றிலும் அவரை கைவிடும் தருணம். மக்கள் முற்றாக அவரைக் கை விட்ட பின்னரும், பழி சுமத்திய பின்னரும் அவர்  இதே விதுரராக இருப்பார் எனில் அப்போத்துதான் அவர் நீதிமான்.

விதுரர் கிருஷ்ணனை உணரும் கட்டம் முக்கியமானது. இதுவரை விதுரரை கட்டுப் படுத்திய  'மக்கள் மனதில் தான் யார்' எனும் கருதுகோள் அவரை விட்டு விலகி விட்டது. நிறை நிர்வாணம்.  அதன் பின்னும் நீதிமானகவே எஞ்சும் விதுரனின் அகத்தை நோக்கிதான் கிருஷ்ணன் புன்னகைக்கிறான்.

ஆம் கிருஷ்ணனின் புன்னகையை விதிரார் கண்டு விட்டார்  இனி அவர் எக்காலமும் நீதியின் நிமித்தம் துயரம் கொள்ளும் ''பாக்கியவான்''.

கடலூர் சீனு