Tuesday, December 16, 2014

பிரயாகை-48சொல்ல மறக்காத கதைஅன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

ஒரு துளியில் உள்ளத்தை மூழ்கடிக்கும் பெருங்கடல் கண்ணீர். கண்களில் இருந்து வழியும் கண்ணீரைவிட உள்ளத்தில் இருந்து வழியும் கண்ணீர் ஒரு துளியாக இருந்து உலகத்தையே மூழ்கடிக்கும் பரப்பும் ஆழமும் கொண்டது.

வெண்முரசில் கண்ணீர் பாய்ந்து பாய்ந்து உள்ளத்தை மூழ்கடித்த பலதருணங்கள் இருந்தது என்றாலும். கத்ரு வினதையின் கதையின் வழியாக குந்தி தனது கண்ணீரைக்காட்டிய இடத்தில் எனது உலகம் மூழ்கிவிட்டது ஜெ.

கதைச்சொல்லி குந்தி கதைபாத்திரம் ஆகும் தருணத்தில் கதை வாழ்க்கையாகி வாசகனை கண்ணீர்விட வைத்துவிடுகின்றது. கத்ரு வினதையின் கதையில் குந்தி இருப்பதை கண்ட உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கடைசிவரியில் நீங்கள் குந்தியானதை உணர்ந்தேன் ஜெ.

எந்த கதைக்குள்ளும் தன்னை கொண்டுவந்து நிறுத்த அன்னைகளால் மட்டுமே முடியும். கதையாசிரியன் அன்னையாகும் தருணம் கண்டு சிலிக்கின்றேன்.

குந்திக்காக அழுவதா? குந்தியின் கண்ணீர் ஆழத்தில் விழுந்து கரைவாதா?

//தெரிந்த கதை என்றாலும் மிகச்சில சொற்களிலேயே அது உள்ளே இழுத்துக்கொள்ளும் விந்தையை எண்ணிக்கொண்டான் அர்ஜுனன்.//- அர்ஜுனன் சொல்வதுபோல இந்த கதை உள்ளே இழுத்துக்கொள்ளும் கதைதான் என்றாலும் மீளமுடியாத ஆழத்திற்கு இழுக்கும் என்று நினைக்கவே இல்லை. யுகயுகத்திற்கு முன் நடந்தகதை ஆனால் யுக யுகமாய் நடந்துக்கொண்டே இருக்கும் கதை. கண்ணீர் வற்றாதக்கதை.  

நேற்றுப்பேரரசி இன்று நாடோடி அதுவும் நாட்டில்கூட இருக்க முடியாத நாடோடி. மனிதவாடையே இல்லாத காடோடி. மரங்களும் பாறைகளும் அரக்கர்களாக இருக்கும் பெரும் கொடிய வனத்தில் தாய்ப்பறவை என்று உணரும் தருணத்தில் இருப்பவள். அந்த தருணம் வந்த உடனே கணவனை நினைப்பவள். பெண் எத்தனை எளிதாக பெண்ணாகிவிடுகின்றாள். பெண்ணான அந்த கணத்திலேயே தாயாகிவிடுகின்றாள். தாயான கணத்திலேயே இழந்த குழந்தைக்காக விடும் கண்ணீரைக்காட்டிவிடுகின்றாள். அன்னையின் இடத்தை அடைய இறைவனும் தோற்பானோ?

ஏழையின் கண்ணீர் படைக்கலம் என்கின்றார் வள்ளுவர். அன்னையின் கண்ணீர்  பனி முள்ளா? விழுந்ததே தெரியவில்லை அடி ஆழம்வரை குத்திக்கிழிக்கிறது.குந்தியின் தாய்மைக்கண்ணீரை இனி ஒருத்தடவை தாங்கும் சக்தி எனக்கு இருக்குமா? என்று தெரியவில்லை.

சதசிருங்கம் காட்டிலிருந்து அஸ்தினபுரிவரும் செல்லும் அன்று எண்ணநதியில் தோன்றிய கர்ணனை வெட்டி, எண்ணநதியை இரத்தநதியாக்கிய குந்தி அஸ்தினபுரி நீங்கி பெரும்காட்டில் வாழும் நாளில் அவனை நினைத்து கதையின் வழியாக கண்ணீரை காட்டுவது நெஞ்சை அள்ளுகிறது.

மனிதர்களின் வாழ்க்கை அவர்கள் அறிந்தோ அறியாமலோ கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலையில்தான் உள்ளது. இது இறைவன் லீலையா? இதுதான் விதி என்பதா? 

வாரணவதம் வரும்நாளில் கங்கையில் படகு பயணத்தில் துவாரகை என்னும் பெரும்வாயில் நகரம் என்பதைப்பற்றி பேசிப் பெரும் களிக்கொண்ட குந்தி வாரணவத அரண்மனை தீக்கிறையாகும் நாளில் சிறு சுரங்கப்பாதையில் முட்டிப்போட்டு நடக்கும் வாழ்க்கை இருக்கும் என்று நினைத்து இருப்பாளா?
துவாரகை…” என்று குந்தி மெல்ல சொல்லிக்கொண்டாள். புன்னகையுடன் திரும்பிதுவராகை, பெருவாயில்கொண்டவள். மகத்தான பெயர்இந்தப்பெயரை அவன் எப்படி அடைந்தான்?” என்றாள்-பிரயாகை-45

வாழ்க்கை எப்போதும் பெரிய பாதையை கனவில் காட்டி, சிறுபாதையில் தள்ளிவிடும் பெரும் நெருப்பு சூழும் கணம்தானா?
அடுத்தக்கணம் என்ன என்று தெரியாத இந்த வாழ்க்கையில்தான் எத்தனை கனவுகள். கனவுகளில் எத்தனை பெரிபெரிய வாயில்கள்.
நான் இத்தனை நேரம் பேசிக்கொண்டிருந்தேன். குரலில்லாமல் என்னை கேட்டுக்கொண்டிருந்தேன். பேசும்போது குரல் எழுகிறது. அது துணையாக ஒருவர் அருகே நின்றிருக்கும் உணர்வை அளிக்கிறது. தன்குரலைக் கேட்கவே மானுடர் பேசுகிறார்கள்.”-பிரயாகை-21

தன் குரலைக்கேட்கவே மானுடர் பேசுகிறார்கள் என்று துருபதன் சொன்னது குந்திக்காகவும்தான். குந்தி இன்று தனக்காக கதைசொல்கிறாள். அன்னைகள் அனைவருமே குழந்தைகளுக்ககா சொல்லும் கதையை தனக்காகவே சொல்லிக்கொள்கிறார்கள்.

“இளையவனே, இந்தக் குளிரில் மைந்தர் உடலுடன் ஒன்றாகி அமர்ந்திருப்பதை என் வாழ்வின் பேறு என்றே எண்ணுகிறேன்…” என்றாள் குந்தி. “அதை உங்கள் தந்தை அந்நாளிலேயே அறிந்தார். நான் இப்போதுதான் அறிகிறேன்.” பின்பு பெருமூச்சுடன் “எங்கோ என்னை நோக்கிப் அவர் புன்னகைக்கக் கூடும்” என்றாள்

பெரும்துன்பங்கள் ஏன்? என்று மனிதன் நினைக்கின்றான் ஆனால் அது வாழ்வின்பேறு என்று குந்திப்போன்ற சிலர் அறிந்து இருக்கிறான்றார்கள். அதை உண்மையும்கூட. அதை விலைகொடுத்து வாங்கமுடியாதது. தெய்வங்கள் அன்றி வேறு யாரும் தரவும் முடியாதது. துன்பம் வரும் வேளையில் சிரிக்க சொன்னவள்ளுவன் கால்ப்பற்றி பின் அவன் தோள் ஏறி அதைத்தாண்டி மேல் ஏறி செல்லும் ஒரு கணம் அது. மண்ணில் மாமனிதர்கள் ஆவதற்கு மண்ணில் விதையாக புதைப்படவேண்டும். 

பெண்ணை பலகீனமானவள் என்று சொன்னது யார்? குந்தி என்ற பெண்ணின் அக வல்லமையை நினைக்கையில் என் அகம் கோல்விழும் முரசுபோல் அதிறுது. சுரங்கவழியில் வரும்போது அவள் கண்ணீர்விடவில்லை. அரசியாக இருந்து பழகிவிட்டேன், மீண்டும் யமுனையை நீந்திக்கடந்த யாதவப்பெண்ணாக ஆகவேண்டும் என்று சொல்கின்றாள். பீமனிடம் உள்ள புன்னகை அவளிடமும் வந்து அவளை மலரவைக்கிறது. புன்னகைக்கிறாள். குந்தி “அரசியாக இருந்து பழகிவிட்டேன். மீண்டும் யமுனையை நீந்திக்கடந்த யாதவப்பெண்ணாக மாறவேண்டியிருக்கிறது” என்றாள்-பிரயாகை-47.கண்ணன் பணியும் பாதத்திற்கு சொந்தக்காரி அவள். பாரதப்பெண் எனது பாட்டி என்று பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டிப்பெண்.   

பீமன் ஒரு நடமுறை ஞானி. குந்தியை அவன் எவ்வளவோ கிண்டல் செய்தவன். அன்னையும் பெண் என்றவன். தெரிந்து செய்தானா? தெரியாமல் செய்தானா தெரியவில்லை. அவன் செய்ததுதான் எத்தனை அர்த்தம் மிகுந்தது.பீமன் பெருமூச்சுடன் உடலை எளிதாக்கிக்கொண்டு கைநீட்டி கையின் நீரை அள்ளி குந்தியின் கால்களை கழுவிவிடத் தொடங்கினான். மனிதர்கள் ஏதோ ஒரு அபூர்வ கணத்தில் இறைவன்போல் தெரிகிறார்கள். குகனுக்கு ராமன் தெரிந்ததுபோல பீமனுக்கு குந்தி தெரிகிறாள். தங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் அந்த மனிதர்தான் என்பதை அறிகிறார்கள். தலைவன் சேவகன். அன்னை மகன் என்ற குறிகிய வட்டம் எல்லாம் அப்போது இல்லை. ஒரு சரணாகதி அங்கு ஏற்பட்டுவிடுகின்றது. 

அன்புள்ள ஜெ குந்தியை வைரத்தால் செய்கின்றீர்கள். அந்த வைரம் பீமன் கைகளால் ஒளிவட்டம் அடித்து தனது தெய்வீகததை காட்டியது. நன்றி. 

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.