Friday, December 26, 2014

பிரயாகை-57-பிம்பத்திற்குள் இருக்கும் நிஜம்அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

சந்தனமரத்திற்கும், முருங்கை மரத்திற்கும் உள்ளவேறுபாடு என்ன? சந்தனமரம் பயனை அகத்தில் தேக்கிவைத்து உள்ளது. முருங்கை மரம் பயனை புறத்தில் வெளிப்படுத்துகிறது. முதியவர்கள் அனைவரும் சந்தனமரம். இளையவர்கள் அனைவரும் முருங்கைமரம். பீஷ்மரும், விதுரரும் சந்தித்தப்பின்பு இப்படி தோன்றியது.

திருதராஷ்டிரனை பார்க்க பீஷ்மர் உள்ளே நுழையும்போதே கணிகரின் ஆளுமையை உடைத்து எறிந்துவிட்டார். பாண்டவர்களுக்கு துரியன் நீர்கடன் செலுத்துகின்றானா என்று கேட்டு வெளியேறும்போது சகுனியின் ஆளுமையை உடைத்து எரிந்துவிட்டார். இறுதியாக கண்ணன் யார் என்று காட்டி விதுரனின் அகத்தையும் உடைத்துவிட்டார். என்னதான் புறத்தில் பூத்து காய்த்து குளுங்கினாலும் சந்தனமரத்தின் அகத்தோடு எந்தமரம் ஈடாக முடியும். முதிரமுதிர வாசம் கூடும் மரம் பீஷ்மன்.

அஸ்தினபுரம்  ராஜியமும், அதற்கு ஈடாக அஸ்வதந்த வைரமும் தன்னிடம் இருப்பதாலேயே  விதுரன் அகம் அடைந்த அகங்காரம் என்ன என்பதை இன்று அறியும்போது புறத்தால் மனிதன் முருங்கைமரத்திற்கு உரிய குதுகலத்தோடுதான் இருக்கிறான். ஆனால் அகம்? ஒரு பெண் தொட்டு இழுத்தாலே மளுக்கென்று ஒடிந்துவிழுந்துவிடுகின்றது முருங்கைமரம்.

விதுரன் போன்ற பிறவிகளின் சிக்கல் மன்னனா? அமைச்சனா? என்பது தெரியாமல் போவதுதான். காலம் சில மனிதர்களை காரணம் இல்லாமல் இப்படி நாற்காலியில் உட்கார வைத்துவிடுகின்றது. இதில் பெரும் ஆச்சர்யம் அவர்கள் உட்காரும் நாற்காலிகள் அவர்களை சுமப்பது இல்லை அதில் உட்கார்ந்து இருப்பவன்தான் நாற்காலியின் சுமையை சுமக்கிறான். அதனால் அவன் நாற்காலியாக ஆகிவிடுகின்றான். விதுரனை கண்ணன் அவமதித்தது அவன் சுமக்கும் நாற்காலியைத்தான் என்பது இன்று பீஷ்மர் மூலமும் சுருதைமூலமும் அறியமுடிகின்றது.

கண்ணன், பீஷ்மர், சுருதை மூவரும் ஒன்றைதான் சொல்கின்றார்கள் ஆனால் வேறு வேறு கோணத்தில். கண்ணன் சொன்னபேது விதுரன் தலை ஓய்ந்தது. பீஷ்மர் சொன்னபோது அவன் கால் ஓய்ந்தது. மகன் சொன்னபோது சொல் ஓய்ந்தது. மனைவி சொன்னபோது கை ஓய்ந்தது.  நாட்கணக்கில் பையில் இருந்து பணத்தை கடைசி கணத்தில் பார்த்துவிட்டு அடுத்தவரிடம்கொடுப்பதுபோல அந்த வைரத்தைப்பார்ப்பது விதுரன் கடைசி இடத்திற்கு வந்துவிட்டான் என்பதை காட்டுகின்றது.

பீஷ்மர்  இது ஒரு தருணம்நீ உன்னை மதிப்பிட்டுக்கொள்ள.இல்லையேல் உனக்கு மீட்பில்லை.”

சுருதை “நீங்கள் இவ்வுலகில் எதையும் வென்றெடுக்க முடியாது.அதை என்று உணர்ந்து உங்கள் ஆசைகளை களைகிறீர்களோஅன்றுதான் விடுதலை அடைவீர்கள்

பீஷ்மரும், சுருதையும் விதுரரின் விடுதலையைப்பற்றி பேசுவது அற்புதம். இருவரும் வேறுவேறு இடத்தில் வேறு சூழலில் பேசுகின்றார்கள் என்றாலும் ஒன்றைப்பற்றிய குறிப்பு வருவதும், அதுவும் முழுமையை நோக்கி அவனை தள்ளுவதும் முன்செய்த பயன். ஜெவின் பாத்திர படைப்பின் வளர்ச்சி. 

“பட்டக்காலிலேயே படும், கெட்டக்குடியே கெடும்“ என்பார்கள். ஒரு மாற்றம் அதன்பிறகே தோன்றுகின்றது. அந்த மாற்றத்திற்காக இயற்கை அதை தொடர்ந்து செய்கின்றது. கண்ணன் எந்த நேரத்தில் அஸ்தினபுரியில் அடியெடுத்து வைத்தானோ தெரியவில்லை விதுரர் அடிமேல் அடிவாங்குகின்றார்.

அன்புள்ள ஜெ விதுரரின் படைப்பின் மூலம் பெரும் ஆளுமைகளின் அகப்போராட்டத்தை நெருங்கிப்பார்க்கும் தருணத்தை தந்து இருக்கின்றீர்கள். விதுரன் என்னும் பிம்பத்தை மட்டும் பார்த்து இதுதான் விதுரன் என்று ஒரு கற்பனையை வளர்த்து கொண்ட மனங்களில் அவன் பிம்பம் உடைந்து அவன் தசைகள் துடிப்பதை பார்க்கும்போது அவன் யாரோ அல்ல என்ற நினைவு வருகின்றது. //இரவின் ஒலிகளைக் கேட்டபடி விதுரர்படுக்கையில் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்// மகாபாரதம் பழசு என்று யார் சொல்வது?

பலப்பல சிரிப்புகளை கேட்டுப்புழுங்கிய படுக்கை ஒருநாள் மனிதனைப்பார்த்து சிரிக்கும் நாள் வருமோ?  

பெண்கள் எல்லாம் வேறு வேறு மாதரி  ஆனால் அன்னைகள் மட்டும் ஒரே மாதரிதான் //சுருதை எழுந்து தன் கூந்தலை சுழற்றிக்கட்டி திரும்பி “என் மைந்தன் நாளை அவன் வாழ்வின் தொடக்கத்தை எதிர்கொள்ளப் போகிறான். அவனை சிறுமைசெய்வதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன். அது எவராக இருந்தாலும் சரி// 

பின்னால் வந்த பீஷ்மர் நீ அமைச்சனாக நடந்துகொள்ளவில்லை. ஆனால் குந்தி அரசியாக நடந்துகொண்டாள்” விதுரரின் முகம் மலர்ந்தது. “ஆம் பிதாமகரே. நான் அவர்களின் சொல்லில் இருந்த ஆற்றலை எண்ணி பலமுறை வியந்திருக்கிறேன். நகரங்களை அழிக்கும் சொல் என்று புராணங்களில் நாம் கேட்பது அதுதான் என எண்ணிக்கொண்டேன்” என்றார்.  பீஷ்மர் சொன்ன சொல்லும் அதற்கு தான்  சொன்ன சொல்லும் இப்போது விதுரன் மனதில் தோன்றுமா? தோன்றினால் பெண்கள் எல்லாம் பேரரசிகள் என்பது தோன்றும். அவள் அரண்மனையில் இருக்கிறாளா? அந்த புரத்தில் இருக்கிறாளா? என்பது எல்லாம் கேட்கதேவை இல்லாத கேள்வி. 

எல்லா பெண்களையும் “அம்மா” என்று சொன்ன அந்த ஆதி மனிதன் வாழ்க! 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.